‘நிபா’ வைரஸ்- தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மெற்கொள்ளும் நோக்கில் தமிழக மருத்துவத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது. காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாச பிரச்சினை, மனநலம் பாதிப்பு ஆகியவை முக்கிய அறிகுறி என அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிகுறிகள் கண்டறியப்பட்டால் பாதித்த நபருடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு 21 நாட்கள் தனிமை அவசியம் என வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கேரளா பகுதியை ஒட்டிய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, தென்காசி, தேனி,  நீலகிரி,  கோவை, திருப்பூர் ஆகிய 6 மாவட்ட எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நிபா வைரஸ் அறிகுறி உள்ள நபர்களின் ரத்தம், தொண்டை சளி, சிறுநீர் மாதிரிகளை பரிசோதனைக்கு எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள தமிழக மருத்துவத்துறை, மாதிரிகளை  48 மணி நேரத்திற்குள் ஆய்வகத்திற்கு அனுப்பவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

உரிய பாதுகாப்பு கவசம் அணிந்து நோயாளிகளை கையாள வேண்டும் எனவும், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் பொதுவான அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும்  சுகாதார பணியாளர்களுக்கு மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது