தமிழ் சினிமாவில் எப்போதாவதுதான் காதலையும் சஸ்பென்ஸ் திரில்லரையும் சமவிகிதத்தில் கலந்து கொடுக்கும் படைப்புகள் வெளியாகின்றன. அந்த வரிசையில், கொடைக்கானலின் பசுமையான மலைக்கிராமப் பின்னணியில், இருவேறு காலகட்டங்களை இணைத்து ஒரு சுவாரசியமான திரை அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வி.ஜெ. மீனாட்சி சுந்தரம்.

தாவரவியல் ஆராய்ச்சிக்காகக் கேரளாவிலிருந்து கொடைக்கானல் மலைக்கிராமம் ஒன்றுக்கு நள்ளிரவில் வருகிறார் நாயகன் ரஜித் மேனன். ஊருக்குள் நுழைந்தது முதலே விவரிக்க முடியாத சில அமானுஷ்ய நிகழ்வுகள் அவரைச் சூழ்ந்து கொள்கின்றன. விடிந்த பிறகும் அந்த மர்மம் தொடர, வனத்துறை அதிகாரியின் உதவியோடு திருமணமான நக்ஷா சரண் வீட்டில் தங்கும் சூழல் ஏற்படுகிறது. நக்ஷா சரண் காட்டும் அன்பையும் அக்கறையையும் தவறாக அர்த்தப்படுத்திக் கொள்ளும் ரஜித், அவரிடம் நெருங்கிப் பழக முயல்கிறார். இதனால் மனம் உடைந்து நக்ஷா சரண் கண்ணீர் விட, தன் தவறை உணர்ந்த ரஜித் குற்ற உணர்ச்சியுடன் அங்கிருந்து வெளியேறுகிறார்.

சில நாட்களுக்குப் பிறகு, தனக்கு அடைக்கலம் கொடுத்த பெண்ணைத் தவறாக எண்ணிவிட்டோமே என்ற மன உறுத்தலில் இருந்து விடுபட, நேரில் மன்னிப்பு கேட்பதற்காகத் தன் நண்பருடன் மீண்டும் அந்தக் கிராமத்திற்குத் திரும்புகிறார். ஆனால், அங்கே அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருக்கிறது. முன்பு சந்தித்த நக்ஷா சரண் உட்பட ஊரில் உள்ள அனைவருமே வேறு பெயர்களிலும், முற்றிலும் மாறுபட்ட அடையாளங்களோடும் இருக்கிறார்கள்; அதுமட்டுமின்றி ரஜித்தை இதற்கு முன் பார்த்ததே இல்லை என்றும் சாதிக்கிறார்கள். இந்த விசித்திரமான புதிருக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை என்ன என்பதை யூகிக்க முடியாத திருப்பங்களுடன் சொல்கிறது மீதிக்கதை.

Related Posts

கேரள இளைஞராக நடித்திருக்கும் ரஜித் மேனன், தன் மலையாளம் கலந்த தமிழ் உச்சரிப்பாலும், இயல்பான தயக்கத்தாலும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். புதிய இடத்தில் ஏற்படும் குழப்பம், தவறு செய்த குற்ற உணர்ச்சி, கிராம மக்களின் மாறுபட்ட அடையாளங்களைக் கண்டு திகைக்கும் தருணங்கள் எனப் படம் முழுக்கத் தன் நடிப்பால் கவர்கிறார். நாயகியாக வரும் நக்ஷா சரண், எளிமையான தோற்றத்தில் ஈர்ப்பதோடு, இருவேறு பரிமாணங்களைக் கொண்ட பாத்திரங்களுக்கு இடையிலான வேறுபாட்டைத் தன் நடிப்பாலும் உடல்மொழியாலும் மிகத் துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளார். மற்றொரு நாயகியான தீப்ஷிகாவும் ஒரே கதாபாத்திரத்தின் இருவேறு கோணங்களை நேர்த்தியாகக் கையாண்டு கவனம் ஈர்க்கிறார். நண்பராக வரும் விஜே பப்பு, ஜி.எம். குமார், பூ ராமச்சந்திரன், ஹலோ கந்தசாமி, தேனி முருகன், சுஜாதா, கராத்தே ராஜா, வழக்கறிஞர் பாபு, ஈஸ்வர்பாபு, மஞ்சு மற்றும் சிறப்புத் தோற்றத்தில் வரும் ஸ்ரீராம் கார்த்திக் ஆகியோர் தங்களது அனுபவ நடிப்பால் படத்திற்குப் பலம் சேர்த்துள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியாகப் படக்குழுவின் உழைப்பு திரையில் அப்பட்டமாகத் தெரிகிறது. ஒளிப்பதிவாளர் பிரான்சிஸ் ராஜ்குமார்.ஏ, ஒளியமைப்பு மற்றும் வண்ணக் கலவைகள் மூலமாக 1983-ஆம் ஆண்டின் பழமை மாறாத சூழலையும், 2025-ஆம் ஆண்டின் நவீன காலத்தையும் மிகத் துல்லியமாக வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார். கலை இயக்குநர் ராம்ஜி, ‘சிட்டுக்குறிஞ்சி’ மலரின் வடிவமைப்பிலும், இரு காலகட்டங்களுக்கு ஏற்ற பொருட்களைப் பயன்படுத்தியதிலும் காட்டியிருக்கும் நுணுக்கம் படத்திற்குப் பெரிய பிளஸ். இசையமைப்பாளர் மாறாவின் பாடல்கள் இயற்கையின் பேரமைதியைப் போல் மனதிற்கு இதம் தருகின்றன; குறிப்பாகப் பழங்குடியினரின் வாத்தியங்கள் கலந்த பின்னணி இசை கதைக்களத்தோடு ஒன்ற வைக்கிறது. இரு காலகட்டங்களில் நகரும் சஸ்பென்ஸ் கதையை, பார்ப்பவர்களுக்கு எந்தக் குழப்பமும் வராத வகையில் நேர்த்தியாகத் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் மஹேந்திரன் கணேசன்.

சஸ்பென்ஸ் திரில்லருக்கு உரிய விறுவிறுப்பை எங்கும் குறைக்காமல், காதல் பிரிவின் வலியையும், ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையையும் பிரச்சார நெடியில்லாமல் கதையின் போக்கிலேயே அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் வி.ஜெ. மீனாட்சி சுந்தரம்.

மொத்தத்தில், விறுவிறுப்பான திருப்பங்கள், மனதைத் தொடும் உணர்வுகள் மற்றும் நேர்த்தியான தொழில்நுட்ப உருவாக்கத்துடன் ‘சிட்டுக்குறிஞ்சி’ ஒரு நிறைவான சினிமா அனுபவத்தைத் தருகிறது.