சமூக வலைதளங்களில் அநீதிகளைத் தட்டிக்கேட்கும் ஒரு துணிச்சலான பெண்ணின் திடீர் மாயமும், அதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் மருத்துவமனை மாஃபியாவின் முகத்திரையைக் கிழிக்கும் ஒரு காதலனின் ஆக்ஷன் பயணமும்தான் ‘நிறம்’. நடிகை பிந்து மாதவி தயாரிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம், ஆரம்பம் முதலே வேகமெடுக்கிறது.

மருத்துவக் கல்லூரியில் படிக்கும் முகேன் ராவும், ப்ரீத்தி அஸ்ரானியும் காதலர்கள். தவறு எங்கே நடந்தாலும் அதைத் தன் செல்போனில் வீடியோ எடுத்து அம்பலப்படுத்தும் தைரியசாலி ப்ரீத்தி. மருத்துவமனையில் ஒரு குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் மறைக்கப்பட்ட உண்மையை அவர் வீடியோவாக வெளியிட, அடுத்த நொடியே ப்ரீத்தி மாயமாகிறார். அவரைத் தொடர்ந்து மேலும் சில பெண்களும் காணாமல் போகிறார்கள். காதலியைத் தேடிப் புறப்படும் முகேன் ராவிற்கு, மருத்துவமனை நிர்வாகத்தின் பின்னணியில் நடக்கும் பயங்கரமான குற்றங்கள் தெரியவருகின்றன. ஆபத்துகளைத் தாண்டி தன் காதலியை முகேன் ராவ் மீட்டாரா, இதன் பின்னணியில் இருக்கும் மூளை யார் என்பதைப் பரபரப்பாகச் சொல்கிறது திரைக்கதை.

ஒரு முழுமையான கமர்ஷியல் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார் முகேன் ராவ். காதல், சண்டை, பதற்றம் எனப் பல உணர்வுகளைத் தன் முதிர்ச்சியான நடிப்பால் கச்சிதமாகக் கையாண்டு ஸ்கோர் செய்கிறார். துருதுருவென வலம் வரும் ப்ரீத்தி அஸ்ரானி, காதல் காட்சிகளில் கியூட்டாகவும், சமூக அநீதிகளை எதிர்க்கும் இடங்களில் கம்பீரமாகவும் நடித்துப் படத்திற்குப் புத்துணர்ச்சி தருகிறார். தன்யா ஹோப் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை அளவாகவும் அழகாகவும் செய்துள்ளார். படத்தின் சர்ப்ரைஸ் பேக்கேஜ் நிதின் சத்யா; நீண்ட நாட்களுக்குப் பிறகு வில்லனாகக் களமிறங்கி, நொடிக்கு நொடி முகபாவனைகளை மாற்றி மிரட்டியிருக்கிறார். சுரேகா வாணி, கஜராஜ், அன்பு மயில்சாமி, திருநாவுக்கரசு ஆகியோரின் நடிப்பும் திரைக்கதைக்குத் தேவையான பலத்தைச் சேர்த்துள்ளது.

Related Posts

சான்டோனியோ டெர்சியோவின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு ஸ்டைலிஷான ஆக்ஷன்-திரில்லர் லுக்கைக் கொடுத்திருக்கிறது. டி. இமானின் இசையில் பாடல்கள் துள்ளலாகவும், பின்னணி இசை சண்டைக் காட்சிகளுக்குப் பெரிய பூஸ்டராகவும் அமைந்துள்ளது. கதையை நேர்கோட்டில் சொல்லாமல், வெவ்வேறு கோணங்களில் நகர்த்தி இறுதியில் ஒரே புள்ளியில் இணைத்திருக்கும் படத்தொகுப்பாளர் சாபு ஜோசப்பின் உத்தி படத்தை விறுவிறுப்பாக வைத்திருக்கிறது.

பல குற்றங்களை ஒரே புள்ளியில் இணைத்த விதம் சுவாரசியமாக இருந்தாலும், சில இடங்களில் காட்சிகள் போதிய அழுத்தமின்றி நகர்வது சின்ன மைனஸ். ஆனால், அந்தக் குறைகள் பெரிதாகத் தெரியாத அளவிற்குத் திரைக்கதையை வேகமாகவும் சுவாரசியமாகவும் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் பலராம் கிருஷ்ணா.

மொத்தத்தில், ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் காதல் கலந்த ஒரு விறுவிறுப்பான கமர்ஷியல் பொழுதுபோக்குப் படத்தைத் தேடுபவர்களுக்கு ‘நிறம்’ நிச்சயம் ஏமாற்றம் தராது!