இலங்கையின் புகழை சர்வதேச அளவிற்கு முன்னெடுத்து சென்றவர், இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். சர்வதேச கிரிக்கெட்டில் ‘800’ விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி, சாதனைப் படைத்துள்ளார். அவருடைய இந்த சாதனையை, எந்த கிரிக்கெட் வீரரும் முறியடிக்கவில்லை. இலங்கை மலையகத் தமிழரான இவர், அடிமட்டத்திலிருந்து படிப்படியாக முன்னேறி, இந்த மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘800’ என்ற படத்தினை, ‘மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ்’ தயாரித்துள்ளது. எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கியுள்ளார். ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் சலீம் மாலிக்காக நடித்த மதுர் மிட்டல் முத்தையா முரளிதரனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார்.
‘800’ படம் குறித்து கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கூறியதாவது…
என்னுடைய வளர்ச்சிக்கு எப்போதும் துணை நின்றவர்கள், இலங்கை மக்கள். அவர்களுக்கு நான் திருப்பி செய்வதற்காக மன்றம் அமைத்து செய்து வருகிறோம். இன்றுவரை பல மணவர்களை படிக்க வைத்து வருகிறோம்.
சென்னையில் என் மனைவி வீட்டருகே தான் வெங்கட் பிரபுவின் வீடும் இருக்கிறது. வெங்கட் பிரபுவும் என் மனைவியும் சிறு வயது நண்பர்கள். ஒரு நாள் வெங்கட் பிரபு பேசிக் கொண்டிருக்கும் போது, ‘என்னைப் பற்றி பயோபிக் எடுக்கலாம்’, என்று சொன்னார்.
மேலும் இந்தப் படம் மூலம் வரும் பணம் டிரஸ்ட்டுக்கு பயண்படும் என்று என் மேனேஜர் சொன்னதால், நான் சம்மதம் சொன்னேன்.
வெங்கட்பிரபுதான் முதலில் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவருக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சினை என்பதால் விலகிவிட்டார். அதன் பின்னர் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. அதிலும் பிரச்சனை ஏற்பட்டது. அதன் பின்னர், என்னைப் பற்றி நன்றாக ஆராய்ந்து, இயக்குநர் ஸ்ரீபதி கதை எழுதியுள்ளார். மதுர் மிட்டல் நடிக்க வந்தார். அவரிடம், ‘என்னை அப்படியே காப்பி அடிக்காதீர்கள், எந்த அழுத்தமும் இல்லாமல் நடிங்கள் என்று சொன்னேன். நன்றாக நடித்திருக்கிறார். என்னைப்போல் 80 சதவிகிதம் சரியாக பந்தை வீசியுள்ளார். ஆச்சர்யமாக இருக்கிறது.’ இது என் புகழ் பாடுவதாக இருக்காது. எனக்கு பின் நடந்த சம்பவங்களை சக கிரிக்கெட் வீரர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு படமாக்கியிருக்கிறார்கள். என்னுடைய பயோபிக்கில் எனக்கு தெரியாத என்னைப் பற்றிய விஷயங்கள் இதில் இருப்பது சிறப்பு, என கருதுகிறேன்’ என்றார்.
இலங்கை மலையகத் தமிழர்கள் வம்சாவளியில் வந்த ஒருவருடைய அப்பட்டமான வாழ்க்கையை மட்டுமே பிரதிபலிக்கும். எந்தவிதமான மிகைப்படுத்தலும் இருக்காது என்கிறார், ‘800’ படத்தின் இயக்குநர் ஶ்ரீபதி.