ஜே எஸ் ஜே சினிமாஸ், தயாரித்துள்ள படம், ஸ்ட்ரைக்கர். இதில் ஜஸ்டின் விஜய், வித்யா பிரதீப், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், கஸ்தூரி சங்கர், அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார், எஸ். ஏ. பிரபு.
ஜஸ்டின் விஜய் ஒரு கார் மெக்கானிக். ஆவிகளுடன் பேசுவதில் ஆர்வமிக்கவர். ஒரு நாள் வீட்டில் ஆவியின் தொல்லை இருப்பதாக ஒரு வீட்டின் உரிமையாளர் கூறுகிறார். அது குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக, தோழி வித்யா பிரதீப்புடன் செல்கிறார். இருவரும் ஓஜா போர்டின் உதவியுடன், ஆவியிடம் பேச முற்படுகின்றனர். அப்போது வித்யா பிரதீப்பின் உடலுக்குள் சென்று விடும் ஆவி, ஜஸ்டின் விஜய்யை பழி வாங்க துடிக்கிறது. இவர்கள் அந்த ஆவியிடம் இருந்து தப்பித்தார்களா, இல்லையா? என்பது தான், ஸ்ட்ரைக்கர் படத்தின் கதை.
படம் துவங்கும் போது, ஆன்மீகம், அறிவியல். அஷ்டமா சித்திகள், சித்தர்கள் என எல்லாவற்றையும் பேசி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பினை உருவாக்குகிறார்கள். பின் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை ஏமாற்றும் விதமாக அமைந்து விடுகிறது. வழக்கமான சலிப்பூட்டும் காட்சிகள், பயம் ஏற்படுத்தாத காட்சிகள் என அனைத்திலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. வித்தியாசமான கதைக்கருவினை யோசித்தவர்கள், அதற்கான திரைக்கதை அமைப்பதில் தவறி விட்டனர்.
திரைக்கதையிலும், காட்சியமைப்பதிலும் கோட்டைவிட்ட இயக்குநர், நடிகர்களிடம் நடிப்பினை வரவழைப்பதிலும் கோட்டை விட்டுள்ளார்.
நாயகன் ஜஸ்டின் விஜய், முக பாவனைகளை வித்தியாசப்படுத்தி காட்டுவதில் திணறியிருக்கிறார். நாயகி வித்யா பிரதீப்பின் நடிப்பு ஓகே. மற்ற படி டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், கஸ்தூரி பரவாயில்லை!
இசை விஜய் சித்தார்த், ஒளிப்பதிவு மனீஷ் மூர்த்தி ஓகே!
ஸ்ட்ரைக்கர் – இன்னும் பயிற்சி வேண்டும்!