‘பொன் மாணிக்கவேல்’ என்ற தலைப்பும், பிரபுதேவா போலீஸாக முதன்முறையாக நடிப்பதாலும், இந்தப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தது. அந்த எதிர் பார்ப்பினை பூர்த்தி செய்துள்ளதா?
நேர்மையான போலீஸ் அதிகாரி பிரபுதேவா. ஜெயில் தண்டனை பெற்றதால், பணியை ராஜினாமா செய்துவிட்டு விவசாயம் செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சென்னையில் நீதிபதி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப் படுகிறார். காவல்துறைக்கு சவாலாக இருக்கும் அந்த கொலை வழக்கிற்காக பிரபுதேவாவின் உதவியை நாடுகின்றனர்.
மீண்டும் பிரபுதேவா, போலீஸ் அதிகாரியாக பதவி ஏற்கிறார். நீதிபதியின் கொடூர கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகளை கண்டு பிடித்தாரா, இல்லையா? என்பது தான் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் கதை.
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களுக்கு பாரபட்சமின்றி தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார், இயக்குநர் ஏ.சி.முகில் செல்லப்பன். அதற்காக அவரை பாராட்டலாம்.
சாயம் போன ‘காக்கி’ சட்டையை பிரபு தேவாவுக்கு போட்டுவிட்டுள்ளனர். காவல் துறையில் சுவாரஸ்யமான எண்ணற்ற கதைகள் கொட்டிக் கிடந்தாலும், பல இயக்குனர்கள் சுவாரஸ்யமற்ற கதைகளையே தேர்ந்தெடுக்கின்றனர். அதையே ஏ.சி.முகில் செல்லப்பன் தேர்ந்தெடுத்துள்ளார்.
கதை பழையது என்றாலும் திரைக்கதையில் சுவாரஸ்யம் கூட்டியிருந்தால் ஓரளவுக்காகவாவது நன்றாக இருந்திருக்கும். ஏதோ வந்தோம், போனோம் என்ற நிலையில் இருக்கிறது பிரபு தேவாவின் நடிப்பு. இயக்குனர், பிரபு தேவாவை சரியாக பயன் படுத்தவில்லையோ! என்ற எண்ணமும் ஏற்படுகிறது.
கதாநாயகி நிவேதா பெத்துராஜ் பிரபு தேவாவின் மனிவியாக நடித்துள்ளார் அவ்வளவே!
வில்லன்களாக சுரேஷ் மேனன், சுதன்சு பாண்டே நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குநர் மகேந்திரன், பாகுபலி பிரபாகர், தான்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு கே.ஜி.வெங்கடேஷ், இசை டி.இமான் மற்றபடி குறிப்பிட்டு சொல்ல ஒன்றும் இல்லை
‘பொன் மாணிக்கவேல்’ என்ற பெயரில் இருக்கும் கம்பீரம், படத்தில் இல்லை.