‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் புதிய ஸ்டுடியோ திறப்பு..!

டப்பிங் சீரியல் உலகில் குறிப்பிடத்தக்க  முக்கிய நிறுவனங்களில் ஒன்று தான் ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’. கடந்த பனிரெண்டு வருடங்களுக்கு மேலாக வெற்றிநடை போட்டுவரும் இந்த நிறுவனம், தற்போது தனது கிரீன் ஆப்பிள் ஸ்டுடியோவின் புதிய கிளை ஒன்றை இன்று திறந்துள்ளது.    ராதாரவி, யுவன்சங்கர் ராஜா,  மிர்ச்சி சிவா, ஹரிஷ் கல்யாண் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

கடந்த 12 வருடமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழிகளின் முக்கிய சேனல்களுக்கும் சீரியல்களை  டப்பிங் செய்து கொடுத்து வருகிறது இந்த நிறுவனம் . இன்று தமிழ் சேனல்களில் சக்கைபோடு போடும் விநாயகர், சாயிபாபா, ஹனுமான், நாகினி ஆகிய தொடர்கள் எல்லாம் இவர்கள் ஸ்டுடியோவில் மொழிமாற்றம் பெற்று வந்தவைதான்.

 

இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான டப்பிங் படங்களை உருவாக்கியது, ஆயிரம் அனிமேஷன் சீரிஸ் படங்களுக்கு மேல் மொழிமாற்றம் செய்தது என இமாலய சாதனையை தங்கள் உழைப்பால் எளிதாக தொட்டுள்ளனர்.  அதுமட்டுமல்ல 2008 முதல்  தயாரிப்பிலும், திரைப்பட விநியோகத்திலும் கிளை விரித்த இந்த நிறுவனம் இரண்டு படங்களை தயாரித்துள்ளது.

 

அதுமட்டுமல்ல, காதலில் விழுந்தேன் உட்பட சன் பிக்சர்ஸின்  அனைத்து படங்களையும் விநியோகம் செய்துள்ளனர். என்றாலும் விநியோகம், தயாரிப்பு என்பது  இவர்களின் கிளைகள் தான். டப்பிங் சீரியல், அனிமேஷன் சீரிஸ்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துவரும் இவர்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் புதுப்புது ஆர்டர்களை சமாளிப்பதற்காகவே இந்த புதிய ஸ்டுடியோவை கூடுதலாக திறந்துள்ளனராம்.