ஆக்‌ஷனில் தூள் பரத்தும் விமல்! – ‘துடிக்கும் கரங்கள்’ விமர்சனம்!                     

மீடியா மீது ஆர்வம் கொண்ட விமல் ஒரு யூடியுபர். அவர் நடத்தி வரும் யூடியுப் சேனலில் மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து பேசி வருகிறார். இதனிடையே போலீஸ் ஐஜியின் மகள், கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை நடக்கும் அதே நேரத்தில், ஒரு இளைஞரும் காணாமல் போகிறார். காணாமல் போன மகனைத் தேடி வரும் முதியவருக்கு தனது யூடியுப் மூலம் உதவி செய்ய முனைகிறார், விமல்.

இதனால், விமலை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சி செய்கிறது. விமல், தனது விசாரணையை துரிதப்படுத்த, ஐஜி மகளின் கொலைக்கும், காணாமல் போன இளைஞருக்கும் தொடர்பு இருப்பதை உறுதி செய்வதோடு, கொலையாளியையும் நெருங்கி விடுகிறார். இதன் பிறகு என்ன நடந்தது, என்பது தான் துடிக்கும் கரங்கள் படத்தின் கதை.

விமல், தனது வழக்கமான ஆக்‌ஷன், ரியாக்‌ஷன் பாணியிலான, ஒரே மதிரியான பாவனைகளில் நடித்திருக்கிறார். அவருடைய ஒப்பனையும், உடையலங்காரமும் நன்றாக இருக்கிறது.  ஆக்‌ஷன் காட்சிகளில் தூள் பரத்துகிறார்.

வழக்கமான சினிமா கதாநாயகியாக மிஷா நாரங். விமலை நினைத்து உருக.. பாட்டுப்பாட மட்டுமே!

போலீஸ் ஐஜி யாக, சுரேஷ் மேனன். போட்டோவிற்கு போஸ் கொடுப்பது போல் வந்து செல்கிறார். அவருடைய முகத்தில் ஒரு ஆக்‌ஷனும் இல்லை. ரியாக்‌ஷனும் இல்லை.

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் செளந்தரராஜன் சற்றே ஆறுதல். ஒரு சில இடங்களில் நடித்து கவனம் ஈர்க்கிறார்.

ஆனந்த் நாக் – சுபிக்‌ஷா இருவரும்கதாபாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

மகனைத்தேடி அலையும் முதியவராக சங்கிலி முருகன், நடித்து மனம் நிறைகிறார்.

சதிஷ், வழக்கம் போல் காமெடி என்ற பெயரில், ரசிகர்களை பாடுபடுத்துகிறார்.

ஒளிப்பதிவாளர் ராமியின் ஒளிப்பதிவு, கலர்ஃபுல்லாகவும் படத்தின் பலமாகவும் இருக்கிறது.

ராகவ பிரசாத்தின் இசையில் பாடல்கள், பின்னணி இசை ஓகே!

ஐஜியின் மகள் கொலையில், எதிர்பாராத டிவிஸ்ட் இருந்தாலும், ஒரே நேர்க்கோட்டில் பயணிக்காத திரைக்கதையால், சுவாரசியம் குறைகிறது.

இயக்குநர் வேலுதாஸ், பிரியாணியா, போதைப் பொருளா என குழம்பி போதைப் பொருளையே பேசலாம் என முடிவு எடுத்திருக்கிறார். அதை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக சொல்லியிருக்கலாம்.