‘அரிமாபட்டி சக்திவேல்’ – விமர்சனம்!

முத்தரையர் மக்கள் அதிகம் பேர் வசித்து வரும், திருச்சி மாவட்டத்தில் உள்ள ‘அரிமா பட்டி’ (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) கிராமத்தில் நடந்த, ஒரு உண்மை சம்பவத்தை படமாக்கி இருக்கிறார்கள்.

அரிமா பட்டி மக்கள் தங்களுக்கான தனி வரைமுறைகளை வகுத்து வாழ்ந்து வருகிறார்கள். அதாவது, இந்த கிராமத்து மக்கள் வேறு சாதியில் பெண் எடுக்கவோ கொடுக்கவோ கூடாது. தங்கள் சாதியை விட உயர் சாதிப்பிரிவினை சேர்ந்தாலும், இந்த வழக்கத்தினை விடுவதில்லை. மீறினால், ஊர் பெரியவர்களால் ஆணவக்கொலை செய்யப்படுவார்கள். இந்த சூழ்நிலையில், அறிமுக நாயகனான பவன், பக்கத்து கிராமத்தை சேர்ந்த மேக்னா எலனை காதலித்து, கல்யாணம் செய்து கொள்கிறார். இதனால் அவர்களது குடும்பத்திலிருந்தும், அந்த கிராமத்திலிருந்தும் பவனை விலக்கி வைக்கிறார்கள். நாட்கள் சென்ற நிலையில், பவனின் தாத்தா மரணமடைகிறார். அதற்கு கூட பவனை ஊர்மக்கள் அனுமதிக்க வில்லை. இதன் பிறகு அந்த கிராமம் அந்த பழக்க வழக்கத்திலிருந்து மாறினார்களா, இல்லையா? என்பதே, ‘அரிமாபட்டி சக்திவேல்’ படத்தின் கதை.

உண்மையிலேயே இன்னும் இதே கட்டுப்பாடுகளுடன் இருந்து வருகிறது இந்த ஊர். நாளிதழ்களை படிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது தெரிந்திருக்கும்!

சக்திவேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பவன், தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையே படமாக எடுத்து இருக்கிறார். உணர்வுப்பூர்வமாக நடித்தும் இருக்கிறார்.

குறிப்பிடும்படி நடித்துள்ளார், நாயகி மேக்னா எலன்.

நாயகனின் தந்தையாக சார்லி, அவர் நடித்துள்ள காட்சிகள் அவர் மீது பரிதாபத்தினை ஏற்படுத்துகிறது.

இவர்களைப் போலவே அழகு, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், சூப்பர் குட் சுப்பிரமணி, சேதுபதி ஜெயச்சந்திரன் கதைக்கு ஏற்றபடி நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ஜெ.பி.மேனின் இயல்பான ஒளிப்பதிவு, மணி அமுதவன் இசை இரண்டும் பரவாயில்லை!

உலகமே சைபர் வலைக்குள் சுருங்கிய நிலையில், இன்னும் இதுபோல் சில இடங்களில் இருந்து வருவதை, தனது கதை, திரைக்கதை மூலம், அழுத்தமாக சுட்டிக்காட்டியிருக்கிறார், இயக்குநர் ரமேஷ் கந்தசாமி.