‘தீபாவளி போனஸ்’ – விமர்சனம்!

கொரியர் நிறுவனத்தில் டெலிவெரி மேனாக பணிபுரிபவர் விக்ராந்த். இவரது மனைவி ரித்விகா. இவர்களுக்கு ஒரு மகன். தீபாவளிக்கு சில நாட்களே இருக்கும் தருவாயில், பண்டிகையை கொண்டாட அலுவலகத்தில் தரப்படவிருக்கும் போனஸை எதிர்பார்த்து காத்திருக்கிறார். ஆனால், போனஸ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. தொழிலாளர்கள் அலுவலகத்தின் முன்னின்று போராடுகின்றனர். இந்நிலையில் நண்பன் ஒருவரின் ஆலோசனையின் பேரில் ரோட்டில் சட்டை விற்கிறார். அங்கே நடக்கும் ஒரு சண்டையில் போலீஸார் அவரை கைது செய்கின்றனர். விடிந்தால் தீபாவளி, விக்ராந்த் ஜெயிலில். இதன் பிறகு என்ன நடந்த்து என்பது தான் தீபாவளி போனஸ் படத்தின் கதை.

கதையின், நாயகனாக நடித்திருக்கும் விக்ராந்த், நேர்த்தியாக நடித்திருக்கிறார். மகன் விரும்பியதை வாங்கி கொடுக்க முடியாத அப்பாவாக தனது இயலாமையை நினைத்து வருந்தும் காட்சியிலும், ஷூ கடைக்காரரிடம் கெஞ்சும் காட்சிகளிலும், அவரது கதாபாத்திரத்தினை உணர்ந்து நடித்திருக்கிறார்.

கணவனின் வருமானத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார், ரித்விகா. வீட்டு வேலைக்கு செல்லும் அவர், கணவனுக்காக புது ஹெல்மெட் வாங்கிகொடுக்க துடிக்கும் காட்சியில், வீட்டு உரிமையாளரிடம் கெஞ்சும் காட்சிகள் கண்களில் நீரினை வரவழைத்து விடும்.

விக்ராந்த் – ரித்விகா தம்பதியின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் ஹரிஷ், புத்தாடையை நினைத்து ஏங்கும் காட்சி உட்பட, எல்லாக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் ஜெயபால்.ஜெ, எளிய மக்களின் வாழ்வியலையும், பண்டிகை கால கொண்டாட்டத்தினை எதார்த்தமாகவும், நேர்த்தியாகவும் படமாக்கியிருக்கிறார். பண்டிகை நாட்களில், எளியவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தியாக்கி கொள்ள அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். இப்படி வறுமையுடன் அல்லல் படுபவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வித்த்தில் க்ளைமாக்ஸ் அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. இருந்த போதும், ஹெல்மெட்டை விற்று படம் பார்க்கும் அவசியத்தை வலியுறுத்திய இயக்குநரின் பிற்போக்குத்தனமான காட்சி உறுத்தலாக தனித்து நிற்கிறது.

மரிய ஜெரால்டுவின் இசையில், பாடல்களும் பின்னணி இசையும் ஓகே.

தீபாவளி போனஸ் – எளியவர்களின் தீபாவளி கொண்டாட்டம்!