‘கட்ஸ்’, இத்திரைப்படத்தை ‘ஓ பி ஆர் பி புரொடக்ஷன்ஸ்’ சார்பில், தயாரிப்பாளர் ஜெயபாரதி ரங்கராஜ் தயாரித்திருக்கிறார். கதாநாயகனாக நடித்திருப்பதுடன், எழுதி இயக்கியிருக்கிறார், ரங்கராஜ். அவருடன் ஸ்ருதி நாராயணன், நான்ஸி, ஸ்ரீலேகா, டெல்லி கணேஷ், சாய் தீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மனோஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும், ‘கட்ஸ்’ திரைப்படத்திற்கு ஜோஸ் பிராங்களின் இசையமைத்திருக்கிறார்.
நாயகன் (ரங்கராஜ்) ரங்கராஜ் பிறப்பதற்கு முன்பாக ஒரு சில மணி நேரங்களிலேயே, அவரது அப்பாவையும், அம்மாவையும் ஒரு கும்பல் கடுமையாக தாக்குகிறது. இந்த கொடூர தாக்குதலில், நாயகன் அப்பாவான (ரங்கராஜ்) விவசாயி பெத்தண்ணா கொல்லப்படுகிறார். அதிர்ஷடவசமாக நாயகனும், அவரது (ஸ்ருதி நாராயணன்) அம்மாவும் தப்பித்துக் கொள்கின்றனர். அதன் பிறகு நாயகனின் சிறு வயதில், போலீஸூடன் நடக்கும் மாமூல் தொடர்பான மோதலில், நாயகன் அம்மாவையும் பறிகொடுக்கிறார். அம்மா, அப்பா இருவரையும் இழந்து நிற்கும் நாயகன், ஒரு ஆசிரமத்தின் உதவியால் வளர்ந்து, போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் வேலைக்கு சேருகிறார். மனைவி, குழந்தை என சந்தோஷமாக வாழ்க்கை செல்கிறது. அப்போது, ஒரு தொழிலதிபருடன் நடக்கும் மோதலில், நாயகன் மனைவி கொல்லப்படுகிறார். அதன் பிறகு என்ன நடந்த்து? என்பது தான், ‘கட்ஸ்’ படத்தின் மீதிக்கதை!
படத்தின் நாயகன் ரங்கராஜ், விவசாயி பெத்தண்ணா மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவரது உடல் தோற்றம், திரைக்கு ஏதுவாக இருந்தாலும் நடிப்பினை பொறுத்தவரை, இன்னும் பயிற்சி தேவையாக இருக்கிறது. காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் என நடிப்பதற்கு வாய்ப்பிருந்தும், அதை வெளிப்படுத்த முடியாமல் திணறவே செய்திருக்கிறார்.
நாயகன் ரங்கராஜூக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஸ்ருதி நாராயணன், நான்ஸி இருவரது நடிப்பிலும் குறையில்லை. கிராமத்து பெண்ணாக ஸ்ருதி நாராயணனும், நகரத்து பெண்ணாக நான்ஸியும் கதாபாத்திரத்திற்கேற்றபடி நடித்துள்ளனர்.
மற்றபடி நாயகனின் தாய் மாமனாக நடித்திருக்கும் சாய் தீனா, மூத்த காவலராக நடித்திருக்கும் டெல்லி கணேஷ், பிர்லா போஸ், ஸ்ரீலேகா, அறந்தாங்கி நிஷா என அனைவரும் நடித்திருக்கின்றனர்!
நாயகனாக நடித்திருக்கும் ரங்கராஜ், கதை எழுதி இயக்கியிருக்கிறார். வழக்கமான சினிமாவில் பார்த்த அதே காட்சிகள், யூகிக்கக் கூடிய காட்சிகள் என சோர்வு ஏற்படும் வண்ணம் திரைக்கதை அமைந்திருப்பது, படத்தின் பலவீனம். படத்தின் திரைக்கதைக்கு உதவாத நரிக்குறவர்கள் காட்சிப் போன்ற சில காட்சிகளை, நீக்கியிருக்கலாம்.
ஒளிப்பதிவாளர் மனோஜின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்கிளின் இசையும் பரவாயில்லை!
‘கட்ஸ்’ – சினிமா மோகத்தால் உருவான படம்!