தமிழ் சினிமாவில் சைக்கோ திரில்லர் படங்கள் என்றாலே, ரத்தம் தெறிக்கும் காட்சிகளும், பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் கொடூரங்களும் தான் நினைவுக்கு வரும். ஆனால், அந்த வழக்கமான இலக்கணத்தை உடைத்து, வன்முறையே இல்லாமல் உளவியல் ரீதியாகப் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்க முயற்சித்திருக்கும் படைப்புதான் இயக்குநர் மதுமிதாவின் ‘ஜான் டோ’.
கேரளாவின் அமைதியான ஏரி ஒன்றில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகி, அதிலிருந்து ஒரு சிறுவனின் சடலம் மீட்கப்படுகிறது. சாதாரண விபத்தாகக் காவல்துறை மூட நினைக்கும் இந்த வழக்கை, பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் காரில் கிடைத்த சில நுணுக்கமான தடயங்களைக் கொண்டு கையில் எடுக்கிறார் கேரள காவல்துறை அதிகாரி அர்ஜுன் தாஸ். அது விபத்தல்ல, திட்டமிடப்பட்ட கொலை என்பதை அவர் கண்டறிகிறார்.
இதே காலகட்டத்தில் தமிழகத்தில் ஒரு சிறுவன் மாயமாக, இரண்டு சம்பவங்களுக்கும் இடையே ஏதோ ஒரு மர்ம முடிச்சு இருப்பதை உணர்ந்து தமிழகம் வருகிறார் அர்ஜுன் தாஸ். ஆனால், இந்த வழக்கை விசாரிக்கும் தமிழக அதிகாரி சஞ்சனா நடராஜன், அர்ஜுன் தாஸின் கோணத்தை ஏற்றுக்கொள்ளாமல் அவரைத் தொடர்ந்து புறக்கணிக்கிறார். இதற்கிடையே, காணாமல் போன சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சாலையோரத்தில் மீட்கப்பட, இவை அனைத்திற்கும் பின்னால் ஒரு கொடூரமான சைக்கோ கொலையாளி இருப்பது உறுதியாகிறது. அடுத்த பலி நிகழ்வதற்குள் அந்த மர்ம நபரை அர்ஜுன் தாஸ் எப்படிப் பிடித்தார் என்பதே மீதிக்கதை. அடையாளம் தெரியாத நபர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ‘ஜான் டோ’ என்ற பெயர், இதில் வரும் அடையாளம் தெரியாத சிறுவனின் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதால் கதைக்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.
கணீர் குரலால் இதுவரை மிரட்டி வந்த அர்ஜுன் தாஸ், முதன்முறையாகக் காக்கிச் சட்டை அணிந்து காவல்துறை அதிகாரியாகக் கம்பீரம் காட்டியிருக்கிறார். குற்றவாளிகளை அடித்து உதைத்து உண்மையை வரவழைக்கும் வழக்கமான சினிமா போலீசாக இல்லாமல், உளவியல் ரீதியாகப் பேசி அவர்களின் மனதைக் கலைத்து உண்மையை வெளிக்கொண்டு வரும் பாணி புதுமையாக உள்ளது. இருப்பினும், சில இடங்களில் அவர் பேசும் வசனங்களின் உச்சரிப்பு சற்று தெளிவில்லாமல் கடந்து போவது சிறிய குறையாகத் தெரிகிறது.
தமிழகப் போலீஸ் அதிகாரியாக வரும் சஞ்சனா நடராஜன், தனது துடிப்பான நடிப்பால் கவர்கிறார். கறாரான அதிகாரியாக மட்டுமல்லாமல், காக்கிச் சட்டைக்குள்ளும் மென்மையான காதல் உணர்வுகள் உண்டு என்பதைச் சில காட்சிகளிலேயே அழகாக வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார். இவர்களைத் தவிர, குழந்தைகளாக நடித்திருக்கும் ஜாரா வினீத் சந்தோக், சிறுவன் நீரவ்.எஸ், தாயாக வரும் ஸ்ரிஷ்டி.ஒய், அர்ஜுன் தாஸின் இளம் வயதுப் பெற்றோராக வரும் விஜே அர்ச்சனா மற்றும் படவா கோபி, மருத்துவராக வரும் கார்த்திக் குமார் என அனைவருமே கதாபாத்திரத்தின் தன்மையறிந்து இயல்பாக நடித்துள்ளனர்.
படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவாளர் ப்ரீத்தா ஜெயராமனின் கேமரா. இயற்கை எழில் கொஞ்சும் கேரள நிலப்பரப்பை, உள்ளுக்குள் ஒருவித அச்சத்தையும் மர்மத்தையும் கடத்தும் களமாக மாற்றியிருக்கிறார். ரத்தம் சிந்தும் காட்சிகளைத் தவிர்த்துவிட்டு, கதாபாத்திரங்களின் மன வலிகளைக் காட்சிகளால் கடத்திய விதம் நேர்த்தி. இசையமைப்பாளர் முஜீப் மஜீத் மற்றும் தி ஆர்டிஸ்ட் 404 ஆகியோரின் பின்னணி இசை, தேவையற்ற இரைச்சல் இன்றி அமைதியின் மூலமாகவே திகிலைக் கூட்டுகிறது. குறிப்பாக, கதையின் ஆன்மாவைப் பேசும் “நான் போதுமா…” பாடல் மனதை வருடுகிறது.
மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியே இணைந்து எழுதியுள்ள திரைக்கதையில், உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படும் குழந்தைகளின் மனநிலையை மிக அழுத்தமாகப் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனால், விஜய் வெங்கடரமணனின் படத்தொகுப்பிலும் திரைக்கதை ஓட்டத்திலும் இன்னும் சற்று விறுவிறுப்பு இருந்திருக்கலாம். ஒரு சைக்கோ திரில்லர் படத்திற்குரிய பரபரப்பு, அடுத்து என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பு ஏற்படுவதற்குள்ளேயே, நாயகன் எந்தவிதப் பெரிய சிக்கலும் இல்லாமல் குற்றவாளியை எளிதாக நெருங்கிவிடுவது திரைக்கதையின் அழுத்தத்தைச் சற்று குறைக்கிறது. திருப்பங்கள் மிகச் சாதாரணமாகக் கடந்து போவதும் பலவீனமே.
திரைக்கதையில் சில சறுக்கல்கள் இருந்தாலும், சைக்கோ திரில்லர் என்ற பெயரில் அருவருப்பான வன்முறைக் காட்சிகளைத் திணிக்காமல், குற்றவாளியின் உளவியல் பின்னணியை நுட்பமாகப் பேசிய விதத்தில் இயக்குநர் மதுமிதா கவனம் ஈர்க்கிறார். குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கக்கூடிய ஒரு நாகரீகமான, வித்தியாசமான கிரைம் திரில்லரை விரும்புபவர்களுக்கு ‘ஜான் டோ’ நிச்சயம் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.