சாய் தன்ஷிகாவின் ஆக்‌ஷன் அதிரடிப்படம்  ‘யோகி டா’ பிப்ரவரி 6ம் தேதி வெளியாகிறது!

ஶ்ரீ மோனிகா சினி ஃபிலிம்ஸ் சார்பில், செந்தில்குமார் தயாரிப்பில், கௌதம் கிருஷ்ணா எழுதி இயக்கியிருக்கும் படம், ‘யோகி டா’. இதில் சாய் தன்ஷிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசியதாவது..,

படத்தை எழுதி இயக்கிய கௌதம் கிருஷ்ணா அவர்கள் பேசும்போது,

யோகி டா படம் டெக்னீசியன்களால் சாத்தியமாகி இருக்கிறது. முதலில் ஹீரோவை வைத்து தான் இந்த படத்தை எடுக்க திட்டமிட்டேன். ஆனால் நான்கு ஹீரோ சேர்ந்து செய்தால் எப்படி ஆக்சன் வருமோ அதை சாய் தன்ஷிகா இந்த படத்தில் செய்துள்ளார், சாய் தன்ஷிகா. அவர் ஆக்சன் காட்சிகளில் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார். தயாரிப்பாளர் செந்தில் அவர்களுக்கு எனது நன்றி. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாண்டியன் ஸ்டண்ட்  மாஸ்டர் பேசும்போது,

கடந்த 41 வருடமாக ஜிம்னாஸ்டிக், சிலம்பம், சண்டை பயிற்சி போன்றவற்றை கற்றுக் கொடுத்து வருகிறேன். பல்வேறு நடிகர், நடிகைகளுக்கு கற்றுக் கொடுத்துள்ளேன். பேராண்மை படத்திற்காக ஐந்து பேருக்கு கற்றுக் கொடுத்தேன். அதில் சாய் தன்ஷிகாவும் ஒருவர். பொதுவாக ஒரு படத்திற்காக கற்றுக் கொள்பவர்கள் அதனுடன் அதை மறந்து விடுவார்கள். சிலம்ப கலையை சிறப்பாக கையாளக் கூடியவர் சாய் தன்ஷிகா . சண்டை காட்சிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கு சிலம்பம் தான் முதல் படி.

சிலம்பம் சண்டைக் காட்சிகளுக்கு இந்திய அளவில் புகழ்பெற்றவர் எம்ஜிஆர் தான். அவர் முறைப்படி சிலம்பம் கற்றுக்கொண்டு தான் சண்டைக் காட்சிகளில் நடித்தார். சமீப காலமாக கதாநாயகிகள் அதிகம் சண்டை காட்சிகளில் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். எங்கள் அனைவருக்கும் சாய் தன்ஷிகா சண்டைக்காட்சிகளில் நடிக்கும் கதாநாயகியாக வளர்ந்திருப்பது மகிழ்ச்சி. ஒரு திரைப்படத் துறையில் ஒரு பெண்ணாக இருந்து ஸ்டண்ட் காட்சிகளை இவ்வளவு சிறப்பாக பண்ண முடியும் என்பதை சாய் தன்ஷிகா  நிரூபித்துள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.

நடிகை சாய் தன்ஷிகா பேசும்போது,

அனைவருக்கும் வணக்கம். மேடையில் இருக்கும் எனது பட குழுவினர் அனைவருக்கும் நன்றி. நீங்கள் இல்லை என்றால் இது சாத்தியமாகி இருக்காது. நாம் பேசுவதை குறைத்துக் கொண்டு, நாம் என்ன செய்கிறோம் என்பதை படத்தில் காட்ட வேண்டும். கபாலி படத்தில் ரஜினி சாரின் மகளாக நடித்தேன். அதில் என்னுடைய பெயர் யோகி. அப்படித்தான் இந்த யோகி டா ஆரம்பித்தது. இந்த படத்திற்காக டைட்டிலை யோசிக்கும் போது, கபாலி படத்தில் உள்ளது போல ஹேர் ஸ்டைல், ஆக்சன் இந்த படத்தில் இருந்தது. அதனால் தான் இந்த டைட்டில் வைத்தோம். கபாலி படத்திற்காக உண்மையாலுமே முடியை வெட்டினேன். ஆனால் இந்த படத்தில் விக் வைத்துள்ளேன். கபாலி படத்தின் போது நல்ல வரவேற்பு இருந்தது. நிறைய பெண்கள் அந்த படத்திற்கு பிறகு தங்களது முடியை வெட்டிக் கொண்டனர். ஒரு படம் எந்த அளவிற்கு அனைவரையும் இம்பாக்ட் செய்கிறது என்பதை அன்று புரிந்து கொண்டேன். பெண்கள் தங்களது முடியை முக்கியமானதாக நினைப்பார்கள். அதைப் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தது. இன்று நிறைய படங்கள் வந்து கொண்டிருக்கிறது. கொரோனாவிற்கு பிறகு ஓடிடி தளங்களின் வருகை அதிகரித்துள்ளது. திரையரங்குகளில் படம் குறைவாகவும், ஓடிடி தளங்களில் அதிகமாகவும் வெளியாகி வருகின்றன. ஒரு படத்தை ரிலீஸ் செய்வதற்கு பெரிய சிக்கல்கள் இருந்து வருகின்றன. இது போன்ற ஒரு தருணத்தில் எங்களது படத்தை வெளிக்கொண்டு வரும் சிவ கணேஷ் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மோனிகா பிக்சர்ஸ் செந்தில் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. இசையமைப்பாளர் சிறப்பான பணியை செய்துள்ளார். பேராண்மை படத்தில் முதல் முறையாக ஆக்சன் காட்சிகளில் நடித்தேன். அதுதான் இன்று வரை எனக்கு உதவி வருகிறது. இந்த படத்தின் அனைத்து ஆக்சன் காட்சிகளுக்கும் டூப் இல்லாமல் நானே செய்தேன். பெண்கள் நினைத்தால் ஆண்களுக்கு ஈடாக சண்டை காட்சிகள் பண்ண முடியும். இன்றைய சமுதாயத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகி வருகிறது. பெண்களை உடல் ரீதியாக துன்புறுத்தினால் அதன் பிறகு அவர்களால் வளர முடியாது என்று நினைக்கின்றனர். அதைத் தாண்டி வர முடியும் என்பதை தான் யோகி டா படம் பேசுகிறது. எங்களால் முடிந்த அளவிற்கு பெண்களுக்காக இந்த படத்தை எடுத்துள்ளோம். என்னால் முடிந்தவரை உழைப்பை கொடுத்து இந்த படத்தை உங்களுக்காக கொண்டு வருகிறேன். இது போன்ற படங்களை ஆதரியுங்கள். நன்றி. என்றார்.