கமாண்டோவின் ‘லவ் ஸ்டோரி’  படக்குழுவுக்கு,  கலைப்புலி எஸ். தாணு பாராட்டு!

நாட்டுப்பற்றுள்ள ஒரு கதையுடன் தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகி இருக்கும் கமாண்டோவின் ‘லவ் ஸ்டோரி’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பரணி ஸ்டுடியோவில் நடைபெற்றது.இப்படத்தின் கதையை எழுதி இயக்கியதுடன் நாயகனாகவும் நடித்துள்ளார் வீர அன்பரசு. நாயகியாக ஏஞ்சல் நடித்துள்ளார்.இவர்களுடன் பப்லு என்கிற பிருத்விராஜ், இயக்குநர் பேரரசு, ஆகாஷ், ‘வாழை’ ஜானகி, உஷா, தங்கதுரைப்பாண்டியன் போன்றவர்களும் நடித்துள்ளார்கள்.

படத்திற்கு வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாவலர் வி .சிவராமன் மற்றும் கார்த்திக்ராஜா இசையமைத்துள்ளனர்,சண்டைப் பயிற்சிகளை கோல்டன் என். கோபால் அமைத்துள்ளார். உடைகள்: நாதன்,கலை: பழனி,தயாரிப்பு அனுராதா அன்பரசு.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பேசும்போது,

“லவ் ஸ்டோரி என்கிற போது அது நூற்றுக்கு 200 சதவீதம் வெற்றி பெறும் .அதுதான் இந்த விழாவில் வெளிப்படும் உண்மை. கோல்டன் கோபால் எனக்குப் பல ஆண்டுகள் பழக்கம். பல ஆண்டுகளுக்கு முன்பு 1985 -ல் ‘யார்’ படம் வெளியிட்டபோது, அதற்கு பிறகு விஜயகாந்த் சாரை வைத்து ‘கூலிக்காரன்’, ‘நல்லவன்’,’ தெருப்பாடகன்’ போன்ற பல படங்கள் எடுத்துக் கொண்டிருந்த போது ஸ்டண்ட்டில் உதவியாளராக இருந்து சிறப்பாகப் பணியாற்றியவர்.அப்போது நான் கூப்பிட்டு நீ படம் பண்ணு உனக்கு நான் படம் தருகிறேன் என்பேன்.

இந்த மேடையில் அவரைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் சிறப்பான ஸ்டண்ட் செய்திருக்கிறார்.சட்டத்துக்கு உட்பட்டு ராணுவப் பயிற்சிகள் போன்றவற்றை அளித்து தேர்ந்த கலைஞர்களை வைத்து அமைத்து ஸ்டண்ட் காட்சிகள் எடுத்திருப்பதைப் பார்க்கும்போது ‘துப்பாக்கி’, ‘ஆள வந்தான்’ போன்ற படங்களில் ஸ்டண்ட் காட்சிகள் எடுத்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது.இதற்கு முன்பு பேசியவர்கள் சொன்னார்கள் ,யாருமே எடுக்க முடியாத ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து, திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குநர் அன்பரசு என்றார்கள். நான் இந்தப் படத்தைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். புதிய படத்திற்குப் புதுமுகங்களை வைத்து பாடல், ஸ்டண்ட் என்று நிறைய செலவு செய்து இருக்கிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறது. கார்த்திக்ராஜா சிறந்த பின்னணி இசை கொடுத்திருக்கிறார். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் அனுராதா அன்பரசு பேசும் போது,

“இந்தப் படத்தினைத் தயாரிப்பதற்காக அந்த வாய்ப்புக்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். எனது குடும்பம் மிகவும் சிறிய குடும்பம் 52 பேர் தான் அதில் உறுப்பினர்கள் .அவர்கள் எல்லாம் இங்கே இருக்கிறார்கள், எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். முயற்சி திருவினையாக்கும் என்பது போல் அன்பரசு என்பவரின் முயற்சி தான் இந்த படம்.என் கணவரின் பல்லாண்டுகாலக் கனவு இன்று படமாக வந்திருக்கிறது.அதன் பின்னே அவரது கடின உழைப்பு இருக்கிறது. படம் வெற்றி பெற அனைவரும் ஆதரவு தாருங்கள்” என்றார்.

படத்தில் இயக்குநர் கதாநாயகன் வீர அன்பரசு பேசும்போது,

“படத்திற்கு இசையமைத்துள்ள சிவராமன் எனக்கு 25 ஆண்டுகளாக நண்பர்கள். அவர் பாடல்களுக்கு இசையமைத்தார். பின்னணி இசையை கார்த்திக் ராஜா அவர்களிடம் அமைக்க வேண்டும் என்று கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.சம்பளம் பற்றிப் பேசியபோது “நான் எதுவும் கேட்கவில்லை. நீங்கள் எது கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறேன் “என்றார்.முதல் நாள் இரவு படத்தில் ஒரு பாடல் வேண்டும் என்று கேட்டபோது, இரவு 8 மணிக்கு கேட்கிறேன். வீடு சென்று படுத்து தூங்கி எழுந்தால் காலை 8 மணிக்கு அவர் போன் செய்தார். இரவோடு இரவாக பாடலை கம்போஸ் செய்து பாட வைத்து காலையில் போட்டுக் காட்டினார். நான் பிரமித்துப் போய் விட்டேன்.அவர் ஒரு மேஜிக்கல்மேன் தான்.அவரை பலரும் தவறவிடுகிறார்கள்.

பாவலர் வரதராஜன் அவர்கள் புதல்வன் சிவராமன் இசையில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் தங்கை இஷரத் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இரண்டு பாடல்களைப் பாடித் தந்தார். இப்படி இரண்டு இடங்களிலும் அப்படி யாரும் செய்ய முடியாது. நான் இரண்டு குடும்பங்களிடம் நட்பாக இருப்பதால் அது முடிந்தது.பிரம்மாண்ட படங்களை இயக்கிய பேரரசு அவர்கள் எங்கள் படத்தில் நடித்துக் கொடுத்தது எங்களுக்குப் பெருமையாக இருந்தது. பிரமாண்ட படங்களின் இயக்குநரான அவரை எப்படி இயக்குவது என்று எனக்கு பதற்றமாக இருந்தது.ஆனால் அவர் நன்றாக நடித்துக் கொடுத்தார். பிருத்விராஜ் தனது பிசியான ஷெட்யூலிலும் நடித்துக் கொடுத்தார்.இங்கே கங்கை அமரன் சார் வருவதாக இருந்தது . அவசரமாக வேறு ஒரு நிகழ்வுக்குச் செல்ல வேண்டி இருந்ததால் அவரால் வர முடியவில்லை. அதேபோல் ஆர் கே செல்வமணி சார் வேறொரு நிகழ்ச்சிக்குச் செல்வதால் இங்கே வர முடியவில்லை.இயக்குநர்கள் எல்லாரும் கூப்பிட்டவுடன் வந்தார்கள் .அது எனக்குப் பிடித்திருந்தது. இயக்குநர் சங்கத்திற்கும் நன்றி.படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படத்தின் இந்தி வடிவத்திற்குச் சத்யா இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். நன்றாக இருக்கிறது. நான் சினிமா இலக்கு என்று ஓடிக்கொண்டிருப்பதில் வீட்டைக் கவனிப்பதில்லை. குடும்பத்தை விட்டுவிட்டு வெளியே பல நாட்கள் பயணம் செய்திருக்கிறேன். அந்த வலி எனது மனைவிக்கு இருக்கும். இருந்தாலும் எனது இலக்குக்காக அவர்கள் வலிகளை எல்லாம் தாங்கிக் கொண்டு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி.”என்று அனைவருக்கும் நன்றி கூறினார்.