ஆனந்த் நாக், ஜனனி குணசீலன், பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கெளரி சங்கர், குருமூர்த்தி உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் திரைப்படம், அறிவான். எம்.டி.பிலிம்ஸ் சார்பில், துரை மகாதேவன் தயாரித்துள்ளார். எழுதி இயக்கியிருக்கிறார், எஸ்.அருண் பிரசாத். ஒளிப்பதிவு, யஷ்வந்த் பாலாஜி. இசை, இரா.கார்த்திக்.
நாயகன் ஆனந்த் நாக், நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர். புதிதாக ஒரு காவல் நிலையத்தில் பொறுப்பேற்கிறார். அவர் பொறுப்பேற்ற நேரத்தில் மர்மமான முறையில் ஒரு மரணம் நிகழ்கிறது. விசாரணையை தொடங்குகிஅ சில நாட்களில் கழுத்து அறுபட்ட நிலையில் ஒருவர் கிடக்கிறார். அதிவேக விசாரணையை தொடங்கி அந்த கொலைக்கு சம்பந்தமான ஒரு பாலியல் தொழிலாளியை கைது செய்து மேலும் விசாரணையை தொடர்கிறார். குற்றவாளியை கண்டுபிடிக்கும் தருவாயில், காவல் நிலையத்துக்குள்ளேயே அந்த பாலியல் தொழிலாளி கொலை செய்யப்படுகிறார். ஏற்கனவே 2 சந்தேக மரணங்கள் அதுனுடனே காவல் நிலையத்தில் கொலை. இது இன்ஸ்பெக்டர் ஆனந்த் நாக்கிற்கு பெரும் அழுத்தத்தை கொடுக்கிறது. அந்த நேரத்தில், க்ரைம் ரிப்போர்டர் நாயகி ஜனனி உதவிக்கு வருகிறார். இதன்பிறகு நடக்கும் சுவாரசியமான சம்பவங்களே, ‘அறிவான்’.
கொலை, கொலையாளி, கொலைக்கான காரணம், கொலையாளியை கணடுபிடித்தல். இப்படி பல படங்கள் வந்த போதும் இது சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும், ஆரம்பத்தில் கதை பரபரப்பாக நகர்ந்தாலும் அதற்குப்பிறகு சற்று தொய்வடைகிறது. விசாரணை கோணம், மற்றும் திருப்பங்களை இன்னும் லாவகமாக அமைத்திருக்கலாம்.
கிளைமாக்ஸுக்கு முந்தைய காட்சிகள், பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறது. இயக்குநர் எஸ்.அருண் பிரசாத், ரசிகர்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து, அதற்கு ஏற்றவாறு படமாக்கியிருக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகன் ஆனந்த் நாக், அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில், தோற்றத்திலும், நடிப்பிலும் சிறப்பு சேர்க்கிறார். க்ரைம் ரிப்போர்ட்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி ஜனனி முக்கிய பங்கு வகிக்கிறார். குறை சொல்ல முடியாத நடிப்பு. பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கெளரி சங்கர், குருமூர்த்தி போன்றோரும் ஓகேவான நடிப்பினை கொடுத்துள்ளனர்.
யஷ்வந்த் பாலாஜியின் ஒளிப்பதிவு இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். கார்த்திக், இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே! மற்றபடி ‘அறிவான்’ ஒரு ஓகேவன, க்ரைம் த்ரில்லர்.