‘4த் ப்ளோர்’ –  விமர்சனம்!

‘4த் ப்ளோர்’, திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார், எல்.ஆர்.சுந்தரபாண்டி. இதில் நாயகனாக ஆரி அர்ஜுனன் நடித்திருக்க,  நாயகிகளாக பவித்ரா, தீப்ஷிகா ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இவர்களுடன் சுப்பிரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் மற்றும் பலர் நடித்துள்ளனர். லட்சுமணன் ஒளிப்பதிவு செய்திருக்க, தரண்குமார் இசையமைத்துள்ளார். ‘மனோ கிரியேஷன்’ சார்பில், ஏ .ராஜா தயாரித்துள்ளார்.

ஆரி அர்ஜுனனின் முன்னாள் காதலி, அவசர வேலையாக மும்பையிலிருக்கும் அவரை சென்னைக்கு அழைக்கிறார். ஆரியும், அவர் சொன்னபடியே ஒருவரை கோர்ட் முன்பு சந்திக்கச் செல்கிறார். அப்போது அங்கு ஒருவர் கொலை செய்யப்பட, அந்த இடமே களேபரமாகிறது. அதன் பிறகு ஆரி தனது கம்பெனியின் ஹெஸ்ட் ஹவுஸில் தங்குகிறார். அப்போது அவருக்கு பலவிதமான அமானுஷ்யமான சம்பவங்கள் தென்படுகின்றன. குழப்பத்துடன் அந்த இரவை கடந்து சென்றவருக்கு, தொடர்ச்சியாக அவர் கொலை செய்யப்படுவது போலவும், மாடியிலிருந்து கீழே விழுவதைப்போலவும் கனவு வருகிறது. காதலியின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டதால் அவர் குறித்தும் தகவல் இல்லை. இந்த சூழலில் அந்த அபார்ட்மென்டின் பில்டர் கட்டிடத்தை இடிக்கப்போவதாக சொல்லி, ஆரியை காலி செய்யச்சொல்கிறார். இவ்வாறான சூழ்நிலையில் ஆரி என்ன செய்தார்? என்பது தான், ‘4 த் ப்ளோர்’ படத்தின் மீதிக் கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஆரி அர்ஜுனன், ஐடி நிறுவன ஊழியர் கதாபாத்திரத்தில், குழப்பமான மனநிலையில், காதலியை தேடுபவராகவும், தன்னை சுற்றி நிகழும் அமானுஷ்யங்களுக்கு விடை தேடுபவராகவும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி, அந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்டுகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் பவித்ரா, குறை சொல்ல முடியாத நடிப்பினை வெளிப் படுத்தியிருக்கிறார். ஆரியின் அபார்ட்மென்டில் வசிக்கும் இன்னொருவராக தீப்ஷிகா. இவரும் குறை சொல்ல முடியாத நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். பேய் பிராங்க் வீடியோ எடுக்கும் யுடியூப் குழுவினரும், ஆரியுடன் வேலை செயபவர்களும் கொடுத்த வேலையை செய்துள்ளனர். பேய் பிராங்க் காட்சிகளால் திரைக்கதைக்கு எந்த பலனும் இல்லை. மெயின் வில்லனாக சுப்பிரமணிய சிவா, வழக்கமான வில்லத்தனத்தை காட்டுகிறார். அபார்ட்மென்டை பலவிதமான கோணங்களில் காட்டி மிரட்டுகிறார், ஒளிப்பதிவாளர் லட்சுமணன். தரண்குமாரின் இசையும் காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. ஒரு சில பயமுறுத்தும் காட்சிகளுடன் காதல், பிரிவு, பரிதவிப்பு, தந்தை மகள் பாசம் என பலவும் கலந்த படைப்பாக உருவாகியிருக்கிறது, ‘4த் ப்ளோர்’.