பலவருடங்களுக்கு முன்னர், ஆந்திர – தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் நடந்த உண்மை சம்பவமான, இரட்டை கொலைகளை மைய்யப்படுத்தி வெளிவந்துள்ள வெப்சீரிஸ், தடயம். இதில் சமுத்திரக்கனி , ஷிவதா , ராஜ் திரன் தாஸ், பிரேம், ‘மூணாறு’ ரமேஷ், சுந்தர் பாண்டியன், கொற்றவை , அழகன் தமிழ்மணி, விஷாகன், புலிப்பாண்டி, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், ரவிச்சந்திரன், கார்த்தி, சுபர்னா, தயாளன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார், நவின்குமார் பழனிவேல். ஒளிப்பதிவு, கே கே. இசை, விபின் பாஸ்கர்.
ஆந்திராவின் எல்லையை ஒட்டியுள்ள, தமிழகப்பகுதியில் உள்ள ஒரு கிராமம். அங்கே கணவனும், மனைவியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடக்கின்றனர். அந்த வீட்டிலிருக்கும் மற்ற பொருட்கள் கொள்ளையடிக்கப்படாமல், பெண் கழுத்திலிருக்கும் தாலியும், ஆண் அணிந்திருந்த அரைஞாண் கயிறும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. கை ரேகைகள் அழிக்கப்பட்டு எந்த தடயமும் கிடைக்காமல் போலீஸ் திணறுகிறது. ஒரு சில நாட்களிலேயே அதே பாணியில் மீண்டும் இரட்டைக்கொலை. இன்ஸ்பெக்டர் ஷிவதா, சப் இன்ஸ்பெக்டர் சமுத்திரக்கனி குழுவினர் குற்ற வாளிகளை தேடிச்செல்கின்றனர். ஆந்திராவில் குற்றவாளிகள் பதுங்கியிருக்கலாம் என அங்கே சென்று விசாரிக்கும் போது, அங்கே தமிழகத்தில் நடந்த அதே பாணியில் 70 க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருப்பது தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், தடயம்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷிவதா, அந்த கதாபாத்திரத்தின் தன்மைக்கும், குணாதிசியத்துக்கும் ஏற்ப நடித்திருக்கிறார். அங்கீகரிக்கப்படாத, நேர்மையான, திறமையான போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி. கதாபாத்திரத்தின் தன்மையை வெகு இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். கொலைகாரர்களாக நடித்திருக்கும் ராஜ் திரன் தாஸ், பிரேம் இருவரும் பார்வையாலும், தோற்றத்தாலும் மிரட்டுகிறார்கள். அதிலும், ராஜ் திரன் தாஸ் படு பயங்கரம். டி எஸ் பியாக நடித்திருக்கும் மூணாறு ரமேஷ் மூலமாக காவல்துறையில் நடக்கும் அட்டூழியங்களை சிறப்பாக கூறியிருக்கிறார்கள்.
மற்றபடி சுந்தர் பாண்டியன், கொற்றவை , அழகன் தமிழ்மணி, விஷாகன், புலிப்பாண்டி, அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், ரவிச்சந்திரன், கார்த்தி, சுபர்னா, தயாளன் ஆகியோர் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்துள்ளனர்.
கே.கே-வின் ஒளிப்பதிவும், விபின் பாஸ்கரின் இசையும், காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகிறது. நம்ப முடியாத காட்சிகளால், இந்தத் ‘தடயம்’ தொடர் முழுமையாக திருப்தி படுத்தாவிட்டாலும், கிரைம் கதைகளை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு பிடிக்கும்.