‘பர்வதா என்டர்டெய்ன்மென்ட்’ சார்பில், கருப்பையா சி ராம் மற்றும் சுலோச்சனா குமார் ஆகியோரது தயாரிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம், யூத். இதில் கென் கருணாஸ், அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ் ,பிரியதர்ஷினி யாதவ், தேவதர்ஷினி, நளினி, சுராஜ் வெஞ்சர மூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விக்கி ஒளிப்பதிவு செய்திருக்க, இசையமைத்திருக்கிறார், ஜி.வி.பிரகாஷ்குமார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கென் கருணாஸ், தனுஷுடன் நடித்த அசுரன் படத்தின் மூலம், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடையே நன்கு பரிச்சயமானார். தற்போது வெளியாகியிருக்கும் ‘யூத்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். எப்படி இருக்கிறது அவரது அறிமுகம்!
‘யூத்’ திரைப்படம், முழுக்க முழுக்க வளரிளம் (Adolescents), பருவத்தினரின் மனக்கிளர்ச்சியை மைய்யப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது.
சுராஜ் வெஞ்சாரமூடு – தேவதர்ஷினி தம்பதியினரின் ஒரே மகன், கென் கருணாஸ். 10 ஆம் வகுப்பு படிக்கும் அவர், வளரிளம் பருவத்தினருக்கே உரிய சேட்டைகளுடன் இருந்து வருகிறார். படிப்பில் அவ்வளவாக கவனம் செல்லாத நிலையில், நட்பினையும் காதலாக கருதி உடன் படிக்கும் மாணவிகளிடத்தில் சுற்றி வருகிறார். மணவர்களுடன் அடிதடியிலும் ஈடுபட்டு பள்ளியின் முதல்வர் நளினியிடத்திலும் அவப்பெயரை சம்பாதித்துக்கொள்கிறார்.
இந்நிலையில், கென் கருணாஸ் முதலில் ஒரு மாணவியால் ஈர்க்கப்பட்டு, அவரை காதலித்து வரும் சூழலில், இன்னொரு மாணவி கென் கருணாஸிடம் தனது காதலை வெளிப்படுத்துகிறார். இதனால், முதல் காதல் முறிகிறது. இது திட்டமிட்டு பிரிக்கப்பட்டதை பின்னர் உணரும் கென் கருணாஸூக்கு இரண்டு காதலும் முறிந்து போகிறது. இதனிடையே, படிப்பில் கவனமின்றியும் சக மாணவர்களிடம் உருவாகும் பிரச்சனையாலும், கென்னை பள்ளியிலிருந்து நீக்கம் செய்யும் சூழ்நிலை உருவாகிறது. இதன் காரணமாக கென்னின் அம்மா தேவதர்ஷினி, மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். இதனிடையே 3வதாக ஒரு பெண் கென்னிடம் நட்பு பாராட்டுகிறார். இந்த சம்பவங்களுக்கு பிறகு என்ன நடந்தது? என்பது தான் யூத் படத்தின் கதை!
கென் கருணாஸ், இயக்குநராக அறிமுகமாகும் முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம், விடைலைப்பருவ விளையாட்டினை ஆபாசமும், அருவருப்பும் இல்லாமல் நீக்கு போக்காக படமாக்கியிருக்கிறார். குறிப்பாக, இந்தப் படத்தினை விடலையர்கள் பார்த்து தங்களை மாற்றிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. வன்முறை, ஆபாசம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு. இது இருந்தால் தான் படம் கொடுக்க முடியும் என்று நம்ப்பி வலம் வந்து கொண்டிருக்கும் மூத்த இயக்குநர்களுக்கு மத்தியில் 24 வயதான இளைஞன் கென் அவர்களுக்கு பாடம் எடுத்திருப்பதாகவே உணரமுடிகிறது. ஜாலியான, குறும்பான அந்த வயதினருக்கே உரிய சேட்டிஅயினையும், அவர்களது பொறுப்பினையும் அழகாக, நல்ல ஒரு எமோஷனல் கலந்து, ரசிக்கும்படியான ஒரு ஜனரஞ்சகமான படத்தினை கொடுத்திருக்கிறார்.
நடிகர், நடிககைகளை பொறுத்தவரை அனைவருமே கவனம் ஈர்க்கிறார்கள். நாயகனாக நடித்திருக்கும் கென் கரூனாஸ், தனித்துவமான ஒரு நடிகராக மிளிர்கிறார். எமோஷனலாகவும், காமெடியாகவும், ரொமான்ஸ் ஆகவும் நடிக்க முடிகிறது. டான்ஸூம் நன்கு வருகிறது. அவருடைய நடனத்தில் வெளிப்படும் நளினம் பெரிய பலம். விரைவில் முன்னணி ஹீரோவாக உயர்வார்.
நாயகிகளாக நடித்திருக்கும் அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ் ,பிரியதர்ஷினி யாதவ் என மூவருமே சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கென் கருணாஸின் நண்பர்களாக நடித்திருப்பவர்களும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.
கதாநாயகன் கென் கருணாஸின் அம்மாவாக நடித்திருக்கும் தேவதர்ஷினி, அப்பாவாக நடித்திருக்கும் சுராஜ் வெஞ்சர மூடு, பள்ளியின் முதல்வராக நடித்திருக்கும் நளினி என அனைத்து நடிகர் நடிகைகளும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
படத்தின் மிகப்பெரிய பலம் என்றால், அது ஒளிப்பதிவாளர் விக்கியின் ஒளிப்பதிவு தான். இயக்குநருக்கு மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறார்.
யூத் படத்திற்கு மிகப்பெரிய விளம்பரம், ஜி வி பிரகாஷ் குமாரின் இசை. அனைத்து பாடல்களுமே நன்றாக இருக்கிறது.
சிறு சிறு குறைகள் இருந்தபோதும், அது பெரிதாக உறுத்தவில்லை. குறிப்பாக, சுராஜ் வெஞ்சர மூடுவின் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தியிருக்கலாம்!
மொத்தத்தில், கென் கருணாஸ் இயக்குநராகவும், நடிகராகவும் வெற்றி பெற்றிருக்கிறார்.
யூத் – விடலைப் பருவத்தினர் தவறாமல் பார்க்கவேண்டிய படம்!