பரத் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற புலனாய்வு திரில்லர் படம்‘காளிதாஸ்’. இப்படத்தை ஸ்ரீ செந்தில் இயக்கி இருந்தார். இதில், ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன் மற்றும் ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர் இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத், அஜய் கார்த்தி நடிக்கும் “காளிதாஸ் 2” உருவாகியுள்ளது.இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, அபர்ணதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும்,25 ஆண்டுகளுக்குப் பிறகு ‘பூவே உனக்காக’ சங்கீதா, இப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் . இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டே வெளியான நிலையில், ‘காளிதாஸ் 2’ படத்தின் டிரெய்லரை நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் இயக்குனர் இயக்குநர் ஶ்ரீ செந்தில் பேசியதாவது,”
இந்த ‘காளிதாஸ் 2’ பயணம் ஒரு சாதாரண பயணம் இல்லை. அது ஒரு நீண்ட, உணர்ச்சியான, நம்பிக்கையோடும் போராட்டத்தோடும் வந்த பயணம்.‘காளிதாஸ்’ முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு, பெரிய வாய்ப்புகளும் பெரிய நடிகர்களோடு வேலை செய்யும் சந்தர்ப்பங்களும் வந்தன. அப்படிச் செல்லும் நேரத்தில் பல சூழல்கள் மாறின. அப்போது எனக்கு ஒரு முக்கியமான விஷயம் புரிந்தது — பெரிய படம் பண்ணணுமா என்பதற்கும் மேலாக, நல்ல படம் பண்ணணும் என்பதுதான் முக்கியம். அந்த எண்ணத்தில்தான் ‘காளிதாஸ் 2’ தொடங்கியது.
இந்தப் பயணத்தை ஆரம்பிக்க வைத்த பழனி அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி. அதன்பிறகு இந்தப் படத்துக்கு மிகப் பெரிய நம்பிக்கையையும் வலிமையையும் கொடுத்தவர்கள் செந்தில் சார், நாராயணசாமி சார். நான் ஒரு நல்ல படமாக நினைத்ததை, அவர்கள் பெரிய அளவிலான படமாக மாற்றி நிறுத்தியிருக்கிறார்கள். படம் திரைக்கு வரும் போது அதன் அளவும் உழைப்பும் எல்லோருக்கும் தெரியும். அஜயை இந்தப் படத்தில் கொண்டு வந்த தருணமும் இந்தப் பயணத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு. அந்த சந்திப்பு மிகச் சாதாரணமாக தொடங்கியது. ஆனால், இன்று அது ஒரு முக்கியமான முடிவாக மாறியிருக்கிறது.
இந்தப் படத்தில் நடித்தும் பணியாற்றியும் இருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படம் முழுக்க இரவு நேரப் படப்பிடிப்புகளோடு, மிகவும் கடினமான சூழலில் உருவானது. மாலை ஆறு மணிக்கு தொடங்கி, காலை ஆறு மணி வரை, சில சமயம் அதையும் தாண்டி படப்பிடிப்பு நடந்தது. ஆனாலும், எல்லாரும் எந்தப் புகாரும் இல்லாமல், முழு அர்ப்பணிப்போடு வேலை செய்தார்கள். அதனால்தான் இன்று இந்தப் படம் இவ்வளவு நன்றாக நம் முன் நிற்கிறது. ‘காளிதாஸ் 2’ உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். என்றார்.