‘ஹேப்பி ராஜ்’ – விமர்சனம்!

‘பியாண்ட் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ஹேப்பி ராஜ். மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில், ஜி வி பிரகாஷ் குமார், ஸ்ரீ கௌரி பிரியா, ஜார்ஜ் மரியான், கீதா கைலாசம், அப்பாஸ், பிரார்த்தனா நாதன், அதிர்ச்சி அருண், மதுரை முத்து மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஆசிரியராக பணிபுரியும் ஜார்ஜ் மரியான் – கீதா கைலாசம் தம்பதிகளின் ஒரே மகன், ஜி.வி. பிரகாஷ். ஜார்ஜ் மரியானை, பள்ளி மாணவர்கள் முதல் ஊர் ஊர்க்காரர்கள் வரை ‘குதிரை முட்டை’ எனும் பட்டப்பெயர் சூட்டி உருவக்கேலி செய்து வருவதுடன் ஜி வி பிரகாஷை ‘குட்டி குதிரை முட்டை’ என அழைத்து வருகின்றனர். இதனால், ஜி.வி. பிரகாஷ் பெரிதும் பாதிக்கப்படுகிறார். இதன் காரணமாகவே அவரது காதலும் கேலிக்குரியதாக ஆகி, நிராகரிக்கப்படுகிறது. இதிலிருந்து மீளூம் வகையில் பெங்களூரில் உள்ள ஐ டி நிறுவனத்தில் வேலைக்கு சேருகிறார்.  அங்கு, அவரது திறமை வெளிப்படுவதுடன், உயர்ந்த நிலையை அடைகிறார். இந்நிலையில், கிராமத்து பின்னணியில் வளர்ந்த ஜிவி பிரகாஷூக்கும், சிட்டி பின்னணியில் வளர்ந்த தொழிலதிபரின் மகளான கௌரிப்பிரியாவுக்கும் காதல் உருவாகிறது. முதலில் இவர்களது திருமணத்திற்கு ஓகே சொல்லும் கௌரிப்பிரியாவின் அப்பாவான அப்பாஸ், பிறகு மறுக்கிறார். ஏன், எதற்கு? இதுவே ‘ஹேப்பி ராஜ்.’

உருவக்கேலியால், தாழ்வுமனப்பான்மையில் சிக்கித்தவிக்கும் நபராக நடித்திருக்கிறார், நாயகன் ஜி.வி.பிரகாஷ். தலைமுறை, தலைமுறையாக உருவக்கேலி செய்யப்பட்டு, அதை பொருட்படுத்தாமல் உயரும் கதாபாத்திரத்தில் இன்னொரு நாயகனாகவே நடித்திருக்கிறார், ஜார்ஜ் மரியான். இந்த இரு கதாபாத்திரங்களின் மூலம் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை, அனைவரும் ரசிக்கும் வண்ணம் ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தை கொடுத்திருக்கிறார், இயக்குநர். மரியா ராஜா இளஞ்செழியன்.

ஹாப்பி ராஜ், என்ற டைட்டில் ஏற்றபடி படம் முழுவதும் ஜாலியாக வலம் வருகிறார், ஜி.வி.பிரகாஷ். கேலி செய்யும் காதலி மீது கோபப்படும் காட்சியில் அப்பாவித்தனமான நடிப்பினை வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறார். ரீல்ஸ் வீடியோ எடுக்கும் காட்சியில் சிரிக்காதவர்கள் யாரும் இருக்கமுக்டியாது. என்ற அளவில் அனைவரையும் வாய்விட்டு சிரிக்க வைக்கிறார். எமோஷனல் காட்சிகளில் சற்று தடுமாற்றம் ஏன்? தெரியவில்லை!

நாயகியாக கௌரி பிரியா, அழகாலும் நடிப்பாலும் அனைவரையும் மனம் கவர்கிறார். ஜார்ஜ் மரியான், கீதா கைலாசம், அப்பாஸ், பிரார்த்தனா நாதன், அதிர்ச்சி அருண், மதுரை முத்து அனைவருமே குறிப்பிடத்தகுந்த வகையில் நடித்திருக்கிறார்கள்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில், ‘ஆடின்னே இருப்பேன்’ பாடல் இளைஞர்களை ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையிலும் குறைவில்லை. மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது.

மொத்தத்தில், ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்!