‘ஜென் ஸ்டுடியோஸ்’ சார்பில், புகழ் மற்றும் ஈடன் தயாரித்துள்ள திரைப்படம், ‘நீ FOR EVER’. இதில் சுதர்சன் கோவிந்த், அர்ச்சனா ரவி, ஓய்.ஜி. மகேந்திரன், நிழல்கள் ரவி, வித்யா, vj பிராது, நோபல் கே ஜேம்ஸ், எம்.ஜே. ஸ்ரீராம், ரித்திகா ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கியுள்ளார், அசோக் குமார் கலைவாணி. இசை, அஸ்வின் ஹேமநாத். ஒளிப்பதிவு, ராஜா பட்டாச்சார்ஜி.
அம்மாவின் காதல் திருமணம் பொய்த்து விட்டதால், தனது தாத்தா வீட்டில் வளரும் நாயகன், சுதர்சன் கோவிந்த். சிறு வயதிலிருந்தே பெற்றோர்கள் பார்த்து நடத்தும் திருமணம் மட்டுமே நிலையானது. என்ற கோட்பாடில், ஒரு மேட்ரிமோனி ஆப்’பினை உருவாக்குகிறார். சுதர்சன் கோவிந்துக்கு காதல் பற்றிய அனுபவம் இல்லாததால், அந்த ஆப்பின் சாதக பாதகங்களை சரிவர உருவாக்க முடியாது. என அவரது அலுவலகம் முடிவு செய்கிறது. இதன் காரணமாக ஒரு டேட்டிங் ஆப் மூலமாக பொய்யான காதல் மூலம் அந்த அனுபவத்தை அறிய முடிவு செய்து, அர்ச்சனா ரவியை தொடர்பு கொள்கிறார். தான் இயக்கப்போகும் முதல் படத்திற்காக, அர்ச்சனா ரவியும் பொய்யாக காதல் செய்ய, சுதர்சன் கோவிந்த்தை தொடர்பு கொள்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றி, தங்களது சுயலாபத்திற்காக காதலிக்க தொடங்குகிறார்கள். அதன் பிறகு நடந்தது? அதுவே ‘நீ FOR EVER’.
அம்மாவின் காதல் திருமணம் முழுமை பெறாத நிலையில், அப்பாவை பிரிந்து, தாத்தாவின் கண்டிப்பான சூழ்நிலையில் வளர்ந்தவராகவும், சூழ்நிலையால் மனத்தெளிவும், புரிதலும் ஏற்பட்டவராகவும், நாயகன் சுதர்சன் கோவிந்த். இருவேறுபட்ட நடிப்பினை வெளிப்படுத்தி நன்றகவே நடித்திருக்கிறார்.
அம்மா, அப்பா ஆதரவற்ற நிலையில் வளர்ந்த நாயகி அர்ச்சனா ரவி. சுதர்சன் கோவிந்தின் குடும்பத்தை பார்த்து தன்னிலை உணர்ந்து வருந்தும் காட்சியிலும், காதலிப்பது போல் ஏமாற்றி நெருக்கமாக நடிக்கும் போதும், குறை சொல்ல முடியாத நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகனின் நண்பர்களாக நடித்தவர்கள் உலகமகா நடிப்பினை வெளிப்படுத்தி பார்வையாளர்களை விரக்தியின் உச்சத்திற்கே கொண்டு செல்கின்றனர்.
ஒய் ஜி மகேந்திரனின் நடிப்பில் குறை சொல்ல முடியாவிட்டாலும், அவரது கதாபாத்திர வடிவமைப்பு ஈர்க்கவில்லை. நிழல்கள் ரவி, எம்.ஜே. ஸ்ரீராம், ரித்திகா ஸ்ரீநிவாஸ் போன்றோரும் பெயரளவில் நடித்துள்ளனர்.
அஸ்வின் ஹேமந்த் இசையமைப்பும், ராஜா பட்டாச்சாரி ஒளிப்பதிவும் ஓகே! இயக்குநர் அசோக் குமார் கலைவாணியின் கதாபாத்திர வடிவமைப்பு, நேர்த்தியாக இல்லாததால் பெரிதாக படத்துடன் ஒன்ற முடியவில்லை!
‘நீ FOR EVER’ – Never!