‘ஸ்கை பிக்சர்ஸ்’ சார்பில், ஃபைவ் ஸ்டார் கே. செந்தில் மற்றும் டாக்டர். என். யோகேஸ்வரன் ஆகியோர் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம், காளிதாஸ் 2. இதில் பரத் , அஜய் கார்த்தி , சங்கீதா, பவானி ஸ்ரீ, அபர்ணதி , அனந்த் நாக் , பிரகாஷ் ராஜ் , கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அரவிந்தன் ஆனந்துடன் இணைந்து திரைக்கதை எழுதி, இயக்கியிருக்கிறார் ஸ்ரீ செந்தில். இசை, சாம் சி.எஸ். ஒளிப்பதிவு, சுரேஷ் பாலா.
100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளைக் கொண்ட அடுக்குமாடி வளாகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம், சங்கீதா தலைமையில் தடபுடலாக நடந்து வருகின்றன. பழைய வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு குற்றவாளியை, இன்ஸ்பெக்டர் பரத் தேடி வரும் நிலையில், அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து, சுமார் 5 வயதுகுட்பட்ட ஒரு குழந்தை காணாமல் போனதாக அவருக்கு தகவல் வருகிறது. சக போலீசாருடன் அடுக்குமாடி குடியிருப்பில் விசாரணையை மேற்கொள்கிறார், பரத். காணாமல் போன குழந்தை, சூட்கேஸில் இருந்து பிணமாக மீட்கப்படுகிறது. அதே சமயத்தில் அந்த குடியிருப்பில் வசிக்கும் இன்னொரு சிறுமியும் காணாமல் போகிறார். மொத்தக்குடியிருப்பும் அதிர்ச்சியில் உறைகிறது. இதனால், இன்ஸ்பெக்டர் பரத்துடன், உதவி ஆணையர் பவானி ஸ்ரீ நேரடி விசாரணையில் இறங்குகிறார். என்ன நடந்தது? என்ற மர்மத்தை பரபரப்பாக சொல்லும் திரைக்கதை தான், ‘காளிதாஸ் 2’.
படம் ஆரம்பமானவுடன், ஒரு விதமான பரபரப்பும், திகிலும் பார்வையாளர்களை தொற்றிக்கொள்கிறது. பல கோணங்களில், குற்றப் பிண்ணனி உடையவர்களை சந்தேகிக்கும் வகையில் செல்லும் கதையில், கொலையாளி இவரா, அவரா? என்ற யூகங்களை உடைத்து, க்ளைமாக்ஸில் கொலையாளி தெரிய வரும் போது, சிலருக்கு ஷாக்காகவும், சிலருக்கு இது சாத்தியமல்ல. இதுக்குத்தான் இத்தனை பில்டப்பா!? இது எப்படி நடக்கும்? என நம்பமுடியாத காட்சிகள். கொலைக்கான காரணங்கள் வெறும் பிதற்றலாகவும் தோன்றும்.
‘காளிதாஸ்’ கதாபாத்திரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பரத், சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். கொலையாளியை தேடிச்செல்லும் அவரது நிதானமான போக்கு, ரசிக்க வைக்கிறது. போட்டித்தேர்வின் மூலம் நேரடி நியமனமான தன்னுடைய மேலதிகாரி பவானி ஸ்ரீ யின், முதிற்ச்சியற்ற அணுகுமுறைகளை சகித்தபடி, விசாரணையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்லும் போது சுவாரசியம் ஏற்படுத்துகிறார்.
உதவி ஆணையர் கதாபாத்திரத்தில் பவானி ஸ்ரீ , புதிதாக காவல் துறை பணியில் சேர்பவர்களை அப்படியே பிரதி பலித்திருக்கிறார். நல்ல நடிப்பு.
அறிமுக நடிகராக அஜய் கார்த்தி, அதிகம் வசனம் பேசவில்லை. ஒரு சில லுக்குகளில் மிரட்டுகிறார். சிலுவை முன் நிற்கும் காட்சியும், கையில் நாயை பிடித்த படி சிறுமியை பின் தொடரும் காட்சிகளிலும் பயமுறுத்துகிறார். அறிமுக நடிகர் போல் அல்லாது தேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்துகிறார்.
‘பூவே உனக்காக’ படத்தின் நாயகி சங்கீதா, முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து, கவனம் ஈர்க்கிறார்.
அபர்ணதி, அனந்த் நாக் , பிரகாஷ் ராஜ் , கிஷோர் ஆகியோர் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும், கதைக்கு தேவையான நடிப்பினை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவும், சாம்.சி.எஸ்’ன் இசையும் படத்தின் பலமாக இருக்கிறது.
கதை எழுதி இயக்கியிருக்கும் ஸ்ரீ செந்தில், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லரை, பல திருப்பங்களோடு ரசிக்கும் வண்ணம் கொடுத்திருந்தாலும், க்ளைமாக்ஸ் நம்பத்தகுந்த வகையில் இல்லாதது, ஒரு சில பார்வையாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும்!