‘ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ’ சார்பில், கார்த்திகேயன், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர், ரானா டகுபதி மற்றும் கல்யாண் சுப்பிரமணியன் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம், நீளிரா. இதில் நவீன் சந்திரா, சனத், கபிலா வேணு, ரூபா கொடுவாயூர், விது ,கஜராஜ் , சித்து குமரேசன், நவயுகா, சுவாதி கிருஷ்ணன் , நமசிவாயம் தம்பி பிள்ளை , கயல் வின்சென்ட் , ரோஹித் கொகாடே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சோமீதரன் எழுதி இயக்கியுள்ளார். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கே. இசையமைத்துள்ளார்.
‘நீளிரா’ என்பதற்கு பொருள், நீண்ட இரவு. என்கிறார், இயக்குநர் சோமீதரன். ஆனால், நீண்ட இரவு என்பதை, ‘நீளிரவு’ என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
இலங்கையின் பூர்வகுடி தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, இரண்டாந்தர குடிமக்களாக பாவித்த, சிங்கள பேரினவாத அரசின் கடும் அடக்குமுறைகளுக்கு எதிராக, தொடர்ந்து நடந்த தமிழ் ஈழப்போரின் வரலாற்றில் 1987 முதல் 1990 வரையிலான காலக்கட்டத்தில், இந்தியஅமைதி காக்கும் படை (IPKF) யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கல்யாண வீட்டிற்குள் புகுந்த சம்பவமே, ‘நீளிரா’ திரைப்படமாக உருவாகியிருக்கிறது.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி, இலங்கையில் அமைதியை ஏற்படுத்த வந்த, இந்திய அமைதி காக்கும் படைக்கும் (IPKF), விடுதலைப் புலிகளுக்கும் (LTTE) போர் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த சூழ்நிலையில், இந்திய அமைதி காக்கும் படையின் ஒரு பிரிவினர், விடிந்தால் கல்யாணம் என்ற நிலையில் இருக்கும் ஒரு வீட்டிற்குள் புகுந்து கொள்கின்றனர். அப்போது அந்த வீட்டிலிருப்பவர்களுக்கும், இந்தியப்படையினருக்கும் மோதல் உருவாகிறது. இதை அறிந்து கொள்ளும் விடுதலை புலிகள் அந்த வீட்டை முற்றுகையிடுகின்றனர். புலிகளின் முற்றுகையை உடைத்து வீரர்களை மீட்க ஒரு இந்திய பெரும் படை வீட்டை நோக்கி வருகிறது. இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், நீளிரா படத்தின் திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
இந்திய அமைதிப்படையைச்சேர்ந்த, ஒரு படைப்பிரிவின் தலைவராக நவீன் சந்திரா நடித்திருக்கிறார். அவரது நடிப்பு பெரிதாக ஈர்க்கவில்லை! அவருடன் நடித்த சக வீரர்களின் நடிப்பும் கவரவில்லை.
விடுதலைப் புலிகளின், ஒரு படைப்பிரிவினைச் சேர்ந்த போராளி காஸ்ட்ரோவாக நடித்திருக்கும் சனத், பொருத்தமானவராக இருக்கிறார். நிதானமாக வீட்டை முற்றுகையிடும் காட்சியிலும், புலிகளுக்கே உரிய, வாக்கி டாக்கியின் மூலம், எதிராளியின் கவனத்தை திசை திருப்பி செயல்படும் விதமான அந்தக்காட்சி, அவர்களை பிரதிபலிப்பது போல் போலிருக்கிறது. நடித்திருப்பவர்களின் நடிப்பும், யாழ்ப்பாண வட்டார பாஷையும் காட்சிகளுக்கு நம்பகத்தன்மையை கொடுக்கிறது.
கபிலா வேணு, ரூபா கொடுவாயூர், விது , கஜராஜ் , சித்து குமரேசன், நவயுகா, சுவாதி கிருஷ்ணன் , நமசிவாயம் தம்பி பிள்ளை , கயல் வின்சென்ட் , ரோஹித் கொகாடே அடக்குமுறயில் சிக்கித்தவிப்பவர்களாக ஈர்க்கும்படி நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் செல்வரத்னம் பிரதீபனின் ஒளிப்பதிவும், கே இசையும் ரசிக்கும்படி இருக்கிறது.
ஒரு சில காட்சிகளில் மட்டுமே படபடப்பினையும், அப்பாவி குடும்பத்தினரின் பரிதாபத்தினையும் உணர முடிகிறது. மற்ற காட்சிகளில் பெரிதான அழுத்தம் இல்லை. ராணுவம் நடத்திய கொடூரங்களை காட்ட மறுத்து, மேலோட்டமான காட்சிகள் மூலம் அவர்களை குற்றமற்றவர்களாக சித்தரித்து இருக்கிறார். எழுதி இயக்கியிருக்கும் சோமீதரன்.
பொது வெளியில் கிடைக்கும் ‘The Broken Palmyra’ (உடைந்த பனை) உள்ளிட்ட பல புத்தகங்களை படித்திருப்பாரா, இயக்குநர் சோமீதரன்!?
மொத்தத்தில், ‘நீளிரா’ – விடியாத இரவு!