ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ – ஜீ ஸ்குவாட் தயாரிப்பில், இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் விது நடிக்கும் ’29’ திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் ‘Welcome To The World of 29’ என்ற பிரத்யேக நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
‘மேயாதமான்’, ‘ஆடை’, ‘குலுகுலு’ படங்களுக்குப் பிறக, ரத்னகுமார் இயக்கும்’29’ படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் ஃபாத்திமா, பிரேம் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கார்த்திகேயன் சந்தானம், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. படம் மே 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
இந்த நிகழ்வில் இயக்குநர்கள் பி.எஸ். வினோத் ராஜ், கார்த்திக் யோகி, பிராங்க்ளின் ஜோசப், அருண் மாதேஸ்வரன், தயாரிப்பாளர்கள் அருண் விஷ்வா, சினிஷ், ராஜசேகர் பாண்டியன், மகேஷ் ராஜ் பஸ்லியான், நடிகர் ரியோ ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நடிகர் மகேந்திரன் பேசுகையில்,
29 வயதில் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மூலம் ‘மாஸ்டர்’ பட வாய்ப்பு கிடைத்தது என்றும், அது தனது வாழ்க்கையில் திருப்புமுனை எனவும் கூறினார். தொடர்ந்து ரத்னகுமார் மீண்டும் வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார். விதுவின் நடிப்பு, அர்ப்பணிப்பு, கதாபாத்திரத்திற்காக உழைக்கும் மனப்பாங்கு ஆகியவற்றை பாராட்டிய அவர், மிகவும் பிடித்த சக நடிகர் என குறிப்பிட்டார்.
நடிகை ப்ரீத்தி அஸ்ராணி பேசுகையில்,
சத்யா – விஜி என்ற இரு கதாபாத்திரங்களை மையமாக கொண்ட காதல் கதை இது என்றும், 29 வயது இளைஞன் மற்றும் 21 வயது பெண்ணின் வாழ்க்கை பார்வை வித்தியாசங்களை படம் பேசும் என்றும் தெரிவித்தார். ரசிகர்கள் தங்களை எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய உணர்வுப்பூர்வமான காதல் பயணம் இது என்றார். இயல்பான, அடுத்த வீட்டு பெண் போன்ற கதாபாத்திரத்தில் நடித்தது மகிழ்ச்சி அளித்ததாகவும் கூறினார்.
நடிகர் விது பேசுகையில்,
இந்த மேடை தனது வாழ்க்கையில் மிகவும் சிறப்பானது என்றும், பல ஆண்டுகளுக்கு முன் கனவாக பேசிய விஷயங்கள் இன்று நனவாகியிருப்பதாகவும் கூறினார். படக்குழுவினர் அனைவரும் குடும்பமாக இணைந்து பணியாற்றியதால், படப்பிடிப்பு முடிவில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டதாக தெரிவித்தார். ரத்னகுமார் மீதுள்ள அன்பையும் நம்பிக்கையையும் பகிர்ந்த அவர், ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு ஜீவனாக அமைந்துள்ளதாக கூறினார்.

இயக்குநர் ரத்னகுமார் பேசுகையில்,
” மேயாத மான் படத்தினை முடித்த பிறகு ஒரு நாள் வீட்டில் இருந்த போது இரவு நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்தது பேஸ்புக்கில் ‘வாட்ஸ் இன் மைண்ட்’ என்றுதான் ஒரு விசயத்தை போஸ்ட் செய்தேன். என் ரூமில் மழையின் சத்தம் மட்டும்தான் கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு குடையில் ஒரு பையனும் பெண்ணும் நின்று கொண்டிருக்கிறார்கள். மழை பெய்து கொண்டிருக்கிறது. அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. என்ற ரீதியில் ஒரு உரையாடலை எழுதி, போஸ்ட் செய்தேன். மறுநாள் அதற்கு ஏகப்பட்ட லைக்ஸ்.. கமெண்ட்ஸ்.. வந்திருந்தது . அதில் ‘அந்த இரண்டு கேரக்டர் அதற்குப் பிறகு என்ன செய்தார்கள். என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்’ என்று சிலர் பதிவிட்டனர். அப்போது அந்த கேரக்டருக்கு நான் பெயர் கூட வைக்கவில்லை. ஏனென்றால் அதை வாசிக்கும் ஒவ்வொருவரும் தங்களை நினைத்து கொள்வார்கள் என்று விட்டுவிட்டேன்.
சரி என்று மற்றொரு நாள் அவர்கள் அடுத்ததாக எங்கே சந்தித்து இருப்பார்கள்? என்று ஒரு இடத்தை தேர்வு செய்தேன். அதுதான் இப்போது நீங்கள் இங்கு பார்த்த கிளிம்ப்ஸ். இதைத்தான் நான் இரண்டாவது முறையாக எழுதி பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன். எனக்குள் தோன்றியதை பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன். அப்போது ஒரு நண்பர் எனக்கு போன் செய்து எதுக்கு இப்போது நீ ஃபேஸ்புக்கில் இப்படி போஸ்ட் ஏன் போடுகிறாய்? இதற்குள் ஒரு நல்ல கதை இருக்கிறது. இரண்டு கேரக்டர்ஸ் ஒரு சிறிய குட்டி ஸ்பேஸ்க்குள் கனெக்ட் பண்ண முடிகிறது. இதனை ஒரு படமாக உருவாக்கலாம். நீ உருவாக்கவில்லை என்றால்… வேறு யாரேனும் இதனை படமாக உருவாக்கி விடுவார்கள். தயவு செய்து அதனை டெலீட் செய்து விடு ‘ என்றார்.
இதேதான் நான் என்னுடைய மது குறும்படத்தை யூடிபில் போஸ்ட் செய்த போதும் நடந்தது. அந்த மது மேயாத மான் படமாக ஆனதை போல்.. பேஸ்புக்கில் போஸ்ட் போட்ட விசயங்கள் தற்போது 29 எனும் படமாக உங்களிடம் வந்திருக்கிறது. நான் கதை எழுத உட்கார்ந்த இப்போது என் மனதிற்குள் தோன்றிய இரண்டு கற்பனை கதாபாத்திரங்களின் பயணம் தான் இந்த படம்.
கார்த்திகேயன் சந்தானம் இல்லாமல் இந்த படம் இல்லை. அவர்தான் இந்தக் கதையை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் தான் நீ உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
லோகேஷ் எனக்கு வேறு ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுத்தார். அவரே ஒரு கதையை கொடுத்து அதை படமாக உருவாக்கு என்றார். கார்த்திக் சுப்புராஜ் நான் ஒரு ஆக்சன் ஓரியண்டட் கதையை கொடுக்கிறேன் அதை நீ டைரக்ட் செய் என்றார். ஆனால் இவர்களுக்கு மத்தியில் கார்த்திக் சந்தானம் தான் நீ 29 படத்தை இயக்கு. இதுதான் நீ என்று எனக்கு சுட்டிக்காட்டினார்.
அடையாளத்தை நாம் வாங்க முடியாது அதுவாக அமைவது தான். நான் யார்? என்ற கேள்வி எனக்குள் வரும்போது தான் நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பேஸ்புக்கில் போட்ட போஸ்ட் தான் ஒரு கதை கதையாக உருவாகி நான் யாரு என்று கேட்டால் தெரியவில்லை என்று சொல்லும் அளவிற்கு நோக்கமே இல்லாத ஒரு 29 வயது பையன். அவருடைய வாழ்க்கையில் 20 களில் இருக்கும் ஒரு பெண் வருகிறாள். அந்தப் பெண்ணும் அவனும் இணைந்து பயணிக்கும் போது தான் யார்? என்பதை உணர்ந்து கொள்கிறார்கள். இது ஒரு படமாக தயாரானது. எனக்கு 29 வயதில் தான் நிறைய விசயங்கள் நடந்ததால் .. இப்படத்தின் டைட்டில் 29 என்பதாக இருக்க வேண்டும் என தீர்மானித்தேன்.
29 எனும் டைட்டிலை புரிய வைப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. இது டோர் நம்பரா… பஸ் நம்பரா… ஏதேனும் ஒரு நாளா… அதெல்லாம் இல்லை .இது வயது என குறிப்பிடுவதற்கு ஒரு போராட்டமே நடந்தது.
நீங்கள் பார்த்த கிளிம்ப்ஸ்.. சத்யாவின் வாழ்க்கையில் உள்ள பத்து அத்தியாயங்களில் இரண்டாவது அத்தியாயம். இது உங்களுக்குப் பிடித்திருக்கிறது …உங்களை உங்களுடன் எளிதில் தொடர்பு கொள்கிறது என்றால்…. தாராளமாக மீதி இருக்கும் அத்தியாயங்களும் உங்களுக்கு பிடிக்கும். நீங்கள் இந்தப் படத்தை ரசித்து பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இந்த படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில்,
” இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இவர்கள் அனைவருக்கும் மிக குறுகிய கால அவகாசத்தில் தான் அழைப்பு விடுத்தேன். அனைவரும் தங்களது பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு இங்கு இந்த படத்திற்கு ஆதரவு அளிக்க வருகை தந்திருக்கிறார்கள்.
29 எனும் இந்த படம் ஜீ ஸ்குவாட் நிறுவனமும், ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் திரைப்படம். என்னுடைய தயாரிப்பில் இது முதல் படம். இதற்கு முன் ‘ஃபைட் கிளப்’ எனும் ஒரு படமும், ‘மைக்கேல்’ எனும் ஒரு படத்தையும் வழங்கி இருக்கிறேன் அதுவும் நண்பர்களுக்காகத் தான் வழங்கினேன்.
இந்தப் படத்தை தயாரிப்பதற்கு முழு முதல் காரணம் என் நண்பர் ரத்னகுமார் தான். ரத்னகுமார் ஒரு எழுத்தாளரை கடந்து ஒரு நண்பரை கடந்து நீண்ட நாட்களாகவே சக போட்டியாளராக இருந்திருக்கிறார்.
2013 ஆம் ஆண்டில் முதல் படத்தை இயக்குவதற்காக அலைந்து கொண்டிருந்த போது.. இங்கு இப்போது இருக்கும் எல்லா இயக்குநர்களும் ஒன்றாக தான் சுற்றி கொண்டிருந்தோம். அப்போது நானும், ரத்ன குமாரும் குறும்படத்தை இயக்கி விட்டு தெருத்தெருவாக சுற்றிக் கொண்டிருந்தோம். 2012 ஆம் ஆண்டில் பீட்சா படம் வெளியானது. அந்தப் படம் எங்களுடைய கனவுகளுக்கெல்லாம் மிகப்பெரிய கதவை திறந்து வைத்தது. எனக்கு மட்டுமல்ல இன்றைக்கு இருக்கும் மிகப்பெரிய இயக்குநர்களுக்கு எல்லாம் அது மிகப் பெரிய கதவை திறந்து வைத்தது.
அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் பெஞ்ச் டாக்கீஸ் எனும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அப்போது குறும்படங்களை எல்லாம் ஒன்றிணைத்து ஒரு ஆந்தாலஜி படத்தை உருவாக்கினார். அந்த அவியல் எனும் ஆந்தாலாஜி படத்தில் என்னுடைய களம் எனும் குறும்படமும் இருந்தது. கார்த்திக் சுப்புராஜ் ரத்ன குமாரை மட்டும் அறிமுகப்படுத்தவில்லை. என்னையும் தொழில்நுட்ப ரீதியாக அவியல் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். அப்போதிலிருந்து தற்போது வரை அனைவரும் நண்பர்களாகத் தான் இருக்கிறோம். ஆனால் தற்போது ரத்னா இயக்க ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்துடன் இணைந்து நானும் ஒரு தயாரிப்பாளராக பொறுப்பேற்று இருக்கிறேன். இந்த ஒரு இடத்தை வழங்கியதற்காக மக்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதற்கு காரணமே இதுதான். நாம் வளரும்போது நம்முடன் இருந்தவர்களையும் வளர்த்து விட வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினேன். இதற்கும் இன்ஸ்பிரேஷன் கமல் சார் தான். சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் தான் முதலீடு செய்ய வேண்டும் என்பதை அவர்தான் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார். அவரிடமிருந்து தான் இந்தப் பாடத்தை நாங்களும் கற்றுக் கொண்டோம்.
இந்தப் படம் மட்டுமல்ல எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து உருவாகும் படங்களும் படங்கள் அனைத்தும் புது புது இளம் திறமைசாலிகளை அறிமுகப்படுத்துவதற்காகத்தான். இதற்கு 29 திரைப்படம் சிறந்த தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய படங்களுக்கு கொடுத்த ஆதரவை போல் என்னுடைய தயாரிப்பில் உருவாகும் படங்களுக்கும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நான் இதுவரை இந்த படத்தை பார்க்கவும் இல்லை. கதையை கேட்கவும் இல்லை. எல்லாம் ரத்னகுமார் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான். அவர் மீது வைத்திருக்கும் குருட்டு நம்பிக்கையால் அவர் பொறுப்புணர்வுடன் படத்தை இயக்கியிருப்பார். இந்தப் படத்தை மே எட்டாம் தேதி ரசிகர்களுடன் திரையரங்கில் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன். படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். மே 8 ஆம் தேதி ‘29’ வெளியாகிறது. அதற்கு முன் வெளியாகும் ‘கர’ திரைப்படத்திற்கும் , அதற்குப்பின் வெளியாகும் சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.