‘சம்ஹாரம்’ – விமர்சனம்!

பிரஜின் பத்மநாபன்,  ஷர்மிஷா, நியா வர்கீஸ், கணேஷ் சாவரட்டில், ராஜ்குமார், தென்றல் ராஜா, ராம் பிரபா உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் திரைப்படம், சம்ஹாரம். Vidhya Productions சார்பில், வேல் முருகன் தயாரித்துள்ளார். எழுதி இயக்கியிருக்கிறார், ராம் பிரபா. இசை: V G ஹரி கிருஷ்ணன். ஒளிப்பதிவு : சுரேஷ்குமார் சுந்தரம்.

பிரஜின் தனது தங்கையின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, முறை பையனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். விடிந்தால் கட்டாயக் கல்யாணம் நடை பெறவிருக்கும் தருவாயில், பிரஜினின் தங்கை ஷர்மிஷா, தனது காதலனுடன் தப்பிச்செல்ல முடிவு செய்கிறார். திட்டமிட்டபடி, காதலன் இரவு நேரத்தில் பிரஜினின் வீட்டிற்குள் நுழைந்து ஷர்மிஷாவை அழைத்துச்செல்ல முற்படுகிறார். அந்த நேரத்தில், கார் ரிப்பேர் ஆனதாகக் கூறி தந்தையும் மகளும் பிரஜனின் வீட்டில் தங்குகின்றனர். அதே நேரத்தில் இன்னொரு மர்ம உருவமும் வீட்டிற்குள் நுழைகிறது. அதன் பிறகு சில மர்மமான விஷயங்கள் நடக்கின்றன. அது என்ன? ஷர்மிஷா காதலனை கரம் பிடித்தாரா? என்பது தான், சம்ஹாரம் திரைப்படத்தின் கதை.

படத்தின் முதல் காட்சியே திகிலுடன் ஆரம்பிக்கிறது.  ஒரு முகமூடி அணிந்த உருவம் இரண்டு பேரை கொடூரமாக கொலை செய்கிறது. அது ஏன் என்பதற்கு க்ளைமாக்ஸில் பதில் சொல்லுகிறார்கள். ஒரு பங்களாவிற்குள்ளேயே மொத்த படமும் முடிந்து விடுகிறது. ஒவ்வொரு காட்சியும் திகிலூட்டும்படி அடுத்தது என்ன நடக்கப்போகிறது? என்றபடி கொஞ்சம் சுவாரசியமாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இன்னும் கூடுதல் சுவாரசியம் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். காதல் காட்சிகளை கூடுதலாக சேர்த்து பாடல்களையும் இணைத்திருந்தால், இளைஞர்களுக்கு நல்ல பொழுது போக்கு அம்சமாக இருந்திருக்கும்.

நடிகர்களை பொறுத்தவரை பிரஜின், கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். பார்வையிலேயே தனது முரட்டுத்தனமான கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். தங்கை கொடூரமாக கொல்லப்பட்டதை நினைத்து கதறும் காட்சியில் பெண்களின் பரிதாபத்தை பெறுகிறார். நாயகி ஷர்மிஷா நடிப்பதற்கு காட்சிகள் அதிகம். அதை சிறப்பாகவே பயன்படுத்தியிருக்கிறார். நியா வர்கீஸ், கணேஷ் சாவரட்டில், ராஜ்குமார், தென்றல் ராஜா, ராம் பிரபா உள்ளிட்டோரும் அந்தந்த கதாபாத்திரங்களில் நன்றாகவே நடித்திருக்கின்றனர். ‘ஆந்தை’ கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் உருவத்தாலும், பார்வையாலும் மிரட்டுகிறார்.

ஒளிப்பதிவாளர்  சுரேஷ்குமார் சுந்தரம் இரவு நேரக்காட்சிகளை குறை சொல்ல முடியாத அளவிற்கு படம்பிடித்துள்ளார். V G ஹரி கிருஷ்ணன் இசையமைப்பு கொஞ்சம் சத்தமாக இருந்தாலும், சில காட்சிகளை மேம்படுத்தி திகில் ஏற்படுத்துகிறது.

எழுதி இயக்கியிருக்கும்  ராம் பிரபா, ஒரு சின்ன பட்ஜெட்டுக்குள் என்ன செய்ய முடியுமோ, அதை சிறப்பாக செய்திருக்கிறார். இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு சூப்பரான த்ரில்லர் படமாக சம்ஹாரம் இருந்திருக்கும்.