‘டபுள் ஆக்குபன்சி’ –  விமர்சனம்!

அறிமுக நயகன் சந்தோஷுடன் வினோத் கிஷன், சம்யுக்தா விஸ்வநாதன், ரேஷ்மா வெங்கடேஷ், விடிவி கணேஷ், பக்ஸ் பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்திருக்க அறிமுக இயக்குநர் அஸ்வின் கந்தசாமி இயக்கியிருக்கிறார்.

போஸ் வெங்கட் – வினோதினி வைத்தியநாதன் தம்பதியினர் குழந்தை வேண்டி இறைவனை நாடுகின்றனர். இறைவன் மனம் இறங்கி, ஒரு குழந்தை தானே கேட்டீர்கள். இந்தா தருகிறேன். பெற்றுக் கொள்ளுங்கள். என்றபடி ஒரு உயிரில் இரண்டு உருவங்களை கொடுத்து விடுகிறார். அதாவது ஒரு நாளில், பாதி நாள் ஆணாகவும்… மீதி நாள் பெண்ணாகவும் படைத்துவிடுகிறார். கடவுள் வரம் தருவதற்கு பதில் சாபம் கொடுத்தாரோ… என்னவோ! தம்பதியினர் சாலை விபத்தில் அகால மரணம் அடைகின்றனர்.

பகலில், பெண்ணாக இருக்கும் ரேஷ்மா வெங்கடேஷ், படித்து பட்டம் பெற்று டி என் ஏ ஆராய்ச்சியாளராகிறார். அவரே இரவில் ஆணாக மாறிவிடுவதால் பார் அட்டென்டராக வேலை செய்யும் சூழல் உருவாகிறது. வாலிப வயதை அடைந்த இவர்களுக்கு காதல் உருவாகிறது. பகலில் பெண்ணாக இருக்கும் ரேஷ்மா வெங்கடேஷ் வினோத் கிஷனை காதலிக்க, இரவில் ஆணாக இருக்கும் சந்தோஷ் சம்யுக்தா விஸ்வநாதனை காதலிக்கிறார். இந்த காதல் வாழ்க்கை இருவரையுமே சந்தோஷப்படுத்துகிறது. அதே வேளையில், குறிப்பிட்ட 12 மணி நேரம் முடிந்த பிறகு உருவம் மாறுவதால், இருவருமே ஒருவரை ஒருவர் வெறுக்கத் துவங்குகின்றனர். இவர்களுக்குள் நிகழும் இந்த அதிசியத்தை டி என் ஏ ஆராய்ச்சி செய்து வரும் டாக்டருக்கு தெரிந்துவிட அவர்களை தனது ஆராய்ச்சிக்கு நிர்பந்திக்கிறார். காதலும் குழப்பத்தை நோக்கிச்செல்கிறது. அதன் பிறகு, ஏற்படும் கலாட்டா தான், ‘டபுள் ஆக்குபன்சி’.

‘டபுள் ஆக்குபன்சி’ முழுக்க முழுக்க இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு பட்டாசான படம். முதலிலேயே இது ஒரு ஃபேண்டஸி படம் என சொல்லி விடுவதால், இயக்குநர் கவலையின்றி, பொழுது போக்கினை மட்டும் பிரதானமாக கொண்டு கதையை நகர்த்தியிருக்கிறார். இந்த யுக்தி இளைஞர்களின் ஒரு பகுதியை எங்கேஜ் செய்கிறது. சிலர் நெளிகின்றனர். ஆண், பெண்ணாக மாறும் சமயங்களில் பார்வையாளர்களுக்கு ஏற்படும் ‘அந்த’ குழப்பத்தினை, விடிவி கணேஷ் கதாபாத்திரத்தின் மூலம் தெளிவு படுத்தி சிரிக்க வைக்கிறார்கள்.

நாயகனாக நடித்திருக்கும்  சந்தோஷ் பெண் ரசிகைகளை அதிகம் ஈர்த்துவிடுகிறார். நாயகனுக்குரிய தகுதிகள் அனைத்தும் குறைவில்லாமல் இருக்கிறது. நடிக்கவும் செய்கிறார். ஆட்டத்திலும், ஆக்‌ஷனிலும் எளிதாக ஸ்கோர் செய்கிறார். ரேஷ்மா வெங்கடேஷுக்கு உணர்வுகளை வெளிப்படுத்தி நடிப்பதற்கு அநேக காட்சிகள். அதை சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார்.  சம்யுக்தா விஸ்வநாதனுக்கு நடிப்பினை வெளிப்படுத்த காட்சிகளில்லை. ஆனால், இளைஞர்களை கவர்ந்திழுக்கும் தோற்றத்தில் சரியாக தோன்றியிருக்கிறார். வினோத் கிஷன், ஆச்சர்யமான நடிப்பினை வெளிப்படுத்தி தன்னால் இப்படியும் நடிக்கமுடியும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

கதையைப்போல் திரைக்கதையை இன்னும் சுவாரசியமாக அமைத்து, கலகலப்பான ஒரு காமெடிப்படமாக உருவாக்கியிருந்தால், சூப்பராக இருந்திருக்கும். ஒளிப்பதிவும், இசையும் நன்றாக இருக்கிறது. உருமாறுதலில் தெளிவான விளக்கம் இல்லாதது. படத்தின் பலவீனம். அதுபோல் க்ளைமாக்ஸூம் குழப்பம்!

‘டபுள் ஆக்குபன்சி’ (Double Occupancy) – Occupied!