‘நூறு சாமி’ –  விமர்சனம்!

சுவாசிகா  முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க, சிறப்புத்தோற்றத்தில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இவர்களுடன் அஜய் திஷான் , சக்தி, பாடினி குமார், காவியா அனில், கருணாஸ் , லிஜோமோல்,  பாலாஜி சக்திவேல்,  அருள்தாஸ் ,  முனிஷ்காந்த் , ஜென்ஸன் திவாகர் , பகவதி பெருமாள் , வினோதினி வைத்தியநாதன்  உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு உண்மை சம்பவத்தை, கற்பனை கலந்து எழுதி இயக்கியிருக்கிறார், சசி. தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்ததிருக்க, பாலாஜி ஸ்ரீராம் இசை அமைத்திருக்கிறார்.

கள்ளக்குறிச்சி, வளையாம்பட்டு கிராமத்தில் வசிக்கும் சுவாசிகா அவருடைய 26 வது வயதில் தனது கணவனை இழக்கிறார். சிறுவயது என்பதால் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் அத்துமீறல்களை எதிர்கொண்டு தனது இரண்டு மகன்களையும் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார். கல்லூரி செல்லும் தனது மூத்த மகன் அஜய் திஷானிடம், தனக்கு மறுமணம் செய்து கொள்ளும் விருப்பம் இருப்பதை சொல்ல, அதற்கு அஜய் திஷான் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். சில வருடங்கள் சென்ற நிலையில் அம்மாவின் தனிமையான சூழலை உணரும் அஜய் திஷான் மறுமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார். இப்போது சுவாசிகா தனக்கு 40 வயது கடந்து விட்டது. அதனால் வேண்டாம் என மறுக்கிறார். மகன்கள் இருவரும் தொடர்ந்து வற்புறுத்துகின்றனர். அதன் பிறகு மறுமணம் நடந்ததா? என்பதே நூறுசாமி படத்தின் கதை.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஸ்வாசிகாவைச் சுற்றியே காட்சிகள் நகர்கிறது. முழுப்படத்தினையும் தாங்கிச்செல்கிறார். மகன்களை எப்படியாவது படிக்க வைத்து வேலை வாங்கித் தந்து விடவேண்டும். என சதா உழைத்துக்கொண்டிருக்கும் பெண்மணியாகவும், பாலியல் அத்துமீறல்களுக்கு சீறிய படி எதிர்ப்பு தெரிவிக்கும் போதும், தனிமையில் நேரத்தை கழிக்க முடியாமல் தவிக்கும் போதும் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

படத்தின் கடைசி 45 நிமிடங்களில், ஏறக்குறைய 15 நிமிடங்கள் மட்டுமே நடித்திருக்கும் விஜய் ஆண்டனியின் காட்சிகளும், நடிப்பும் படத்திற்கு பெரும் பலத்தை கொடுத்திருக்கின்றன. அவர் பேசும் வசனங்களும் பாராட்டும்படியாக இருக்கிறது.

ஸ்வாசிகாவின் மூத்த மகனாக அஜய் திஷான், இளைய மகனாக சக்தி அவர்களது ஜோடியாக காவ்யா அனில், பாடினி குமார் மற்றும் கருணாஸ், லிஜோமோல், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனீஷ்காந்த், ஜென்சன் திவாகர், பக்ஸ், வினோதினி என அனைவருமே குறை சொல்ல முடியாத நடிப்பினை கொடுத்துள்ளனர். இதில் பக்ஸ், வினோதினி தம்பதியினரின் காட்சிகள் ரசிக்கும்படி இல்லை.

ஒளிப்பதிவாளர் எஸ்.பி.தர்ஷன் கிர்லோஷின் ஒளிப்பதிவும், பாலாஜி ஸ்ரீராம் பின்னணி இசையும் ரசிகர்களை ஈர்க்கிறது. உணர்வுப்பூர்வமான உண்மை சம்பவத்தை உயிரோட்டமாக கொடுத்திருக்கிறார், இயக்குநர் சசி.

‘நூறுசாமி’ – ஆதரவு தேடும் அபலையின் மனம்!