கத்தி, அருவாள் இல்லாத மதுரை! சசிகுமாரின் புதிய போலீஸ் அவதாரம்! – ‘வதந்தி 2 பாகம் ரிலீசுக்குத் தயார்.
வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணைய தொடர் வருகிற ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் உலகளவில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு, சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் படக்குழுவினர் கலந்துகொண்ட பிரம்மாண்டமான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி பேசுகையில்,
பொதுவாக சினிமாக்களில் மதுரை பின்னணி மற்றும் சசிகுமார் என்றாலே கத்தி, அருவாள், வன்முறை தான் நினைவுக்கு வரும் என்றும், ஆனால் இந்தத் தொடரில் அப்படி எந்த ஒரு ரத்தக் கறையும் இருக்காது என்றும் கூறினர். இயக்குநர் ஆண்ட்ரூஸ் மதுரையைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும், அங்கேயே பல மாதங்கள் தங்கி யதார்த்தமான மனிதர்களின் வாழ்வியலை ஆய்வு செய்து இந்தத் திரைக்கதையை எழுதியுள்ளார். சசிகுமாரின் மாஸ்டர்பீஸ் படமான ‘சுப்ரமணியபுரம்’ படத்தை தியேட்டரில் பார்த்து விசிலடித்த நாள் முதல் அவருடன் இணைந்து பணியாற்ற ஆசைப்பட்டதாகவும், ‘மூசா ராசா’ என்ற இந்த நேர்மையான போலீஸ் கதாபாத்திரத்திற்கு அவர் கச்சிதமாகப் பொருந்தி வாழ்ந்திருக்கிறார் என்றும் தயாரிப்புத் தரப்பு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ்,
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வதந்தி முதல் பாகம் கொடுத்த ஆர்கானிக் வெற்றியை விட, ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த வதந்தி 2 தொடரை இயக்கி வெற்றி பெறச் செய்வதுதான் தனக்கு இருக்கும் உண்மையான சவால் என்றார். இந்தத் தொடரின் யதார்த்தமான உலகத்தைத் திரையில் கொண்டு வருவதற்காகப் படக்குழுவினர் மதுரை, காரைக்குடி, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் தொடர்ந்து 43 நாட்கள், தினமும் 18 மணி நேரம் அசுர உழைப்பைக் கொடுத்துள்ளனர். சசிகுமார் கதையின் ஒன்லைனை கேட்ட உடனே சம்மதித்ததால், அவருக்காகவே மூஸா ராசா கேரக்டர் மீண்டும் மெருகேற்றப்பட்டது என்றும், இசையமைப்பாளர் சிமோன் கே. கிங்கின் பின்னணி இசை கண்ணை மூடினாலும் முழுக் கதையையும் சொல்லும் அளவுக்குக் கலை நுட்பத்துடன் வந்துள்ளது என்றும் இயக்குநர் பாராட்டினார்.

சசிகுமார் பேசுகையில்,
இதுவரை 30 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட போதிலும், யாரும் தன்னை போலீஸாக யோசிக்கவில்லை என்று வியந்த சசிகுமார், டைட்டிலைக் கேட்டதும் வழக்கம் போல மதுரையை மையமாக வைத்து ரௌடி கேரக்டராகத்தான் இருக்கும் என நினைத்ததாகக் கூறினார். ஆனால் இயக்குநர் தன்னை ஒரு சாதாரண, யதார்த்தமான மதுரை போலீஸாக இயக்குநர் மாற்றியதாகவும். படப்பிடிப்பில் லேசாகப் புன்னகைத்தால் கூட ‘மூஸா ராசா கேரக்டர் சிரிக்காது சார்’ என இயக்குநர் ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டு கஷ்டப்படுத்தியதாகவும், வழக்கமான த்ரில்லர்களில் குற்றவாளி யார் என்ற பரபரப்பு இருக்கும், ஆனால் இதில் எப்படியாவது போலீஸ் ஹீரோவைக் காப்பாற்ற வேண்டுமே என்ற தவிப்பு ரசிகர்களுக்கு இருக்கும் என்றும் சுவாரசியமாகத் தெரிவித்தார்.
விவேக் பிரசன்னா பேசுகையில்,
க்ளைமாக்ஸ் சஸ்பென்ஸ் லீக் ஆகிவிடக் கூடாது என்பதற்காக கடைசி எபிசோட் ஸ்கிரிப்ட்டை படப்பிடிப்புக்கு முந்தைய நாள் இரவுதான் இயக்குநர் தனக்குக் கொடுத்தார் ரகசியத்தை உடைத்தார். ‘டாடா’ பட புகழ் அபர்ணா தாஸ், கேரளாவில் சசிகுமார் சாரின் ‘கண்கள் இரண்டால்’ பாடல் தலையாட்டலுக்குப் பெரிய ரசிகையான தனக்கு, அவருடன் நடிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு இந்த ‘சுமையா’ கேரக்டர் மூலம் நிஜமாகியுள்ளது என்றார். கருடன் படத்தின் வெற்றிக்குப் பின் மீண்டும் சசிகுமாருடன் இணைந்த அனகா, ஆரம்பத்தில் தன் ‘லீலாவதி’ கேரக்டரில் நடிக்கத் தயக்கம் இருந்ததாகவும் இயக்குநரின் ஊக்கமே அதை மாற்றியது என்றும் கூறினார். புதுமுகம் யஷ்வந்த் தனக்கு இவ்வளவு பெரிய கேரக்டரையும், பாடும் வாய்ப்பையும் தந்த ஒட்டுமொத்தப் படக்குழுவிற்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
படத்தின் மற்ற நட்சத்திரங்களான விவேக் பிரசன்னா, அபர்ணா தாஸ், அனகா மருதோரா மற்றும் புதுமுகம் யஷ்வந்த் ஆகியோரும் தங்களின் நெகிழ்ச்சியான படப்பிடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.