“ஸ்டார்டம் தானா வரும், வெயிட் பண்ணலாம்!” – நடிகர் கார்த்திகேயன் டிகே!

டிரெண்டாகும் சீரியல்கள், பிரீமியம் ஓடிடி தொடர்கள் எனத் தற்பொழுது தமிழ் பொழுதுபோக்குத் துறையில் அழுத்தமான தடம் பதித்து வரும் பெயர் கார்த்திகேயன் டிகே (Dee Kay). பட்டுக்கோட்டையிலிருந்து கிளம்பி, இன்று ஒட்டுமொத்தத் தமிழ் ஓடிடி ரசிகர்களையும் தனது அசாத்திய நடிப்பால் திரும்பிப் பார்க்க வைத்துள்ள இந்த இளம் திறமையாளர், அவசரமே இல்லாமல் தனது கலைப் பயணத்தை மிகவும் நிதானமாகச் செதுக்கி வருகிறார்.

ஆரம்பத்தில் இளைஞர்களின் ஃபேவரிட் தொடர்களான ‘கனா காணும் காலங்கள்’ மற்றும் ‘ஹார்ட் பீட்’ ஆகியவற்றின் மூலம் சின்னத்திரையில் கவனம் ஈர்த்த கார்த்திகேயன், அண்மையில் ஜீ5 (ZEE5) தளத்தில் வெளியாகி அதிரடி ஹிட் அடித்த ‘ஐந்தாம் வேதம்’ வெப் சீரிஸ் மூலம் ஒட்டுமொத்தத் திரையுலகின் கவனத்தையும் ஈர்த்தார். அதில் அவர் வெளிப்படுத்திய முதிர்ச்சியான நடிப்பு, பான்-இந்திய அளவிலான தமிழ் பார்வையாளர்கள் மத்தியில் அவரை ஒரு நம்பிக்கைக்குரிய ஆக்‌ஷன் மற்றும் எமோஷனல் நடிகராக அடையாளப்படுத்தியுள்ளது.

கார்த்திகேயனின் வசீகரிக்கும் கண்கள், திரையில் உணர்வுகளைக் கடத்தும் விசித்திரமான முகபாவனைகள் மற்றும் ஸ்டைலான உடல்மொழி ஆகியவை அப்படியே உலகநாயகன் கமல்ஹாசனின் இளம் வயதுத் தோற்றத்தை நினைவுபடுத்துவதாக சினிமா வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.இந்த அரிய ஒப்பீடு குறித்து கார்த்திகேயன் டிகே பேசுகையில், “இதை எனக்குக் கிடைத்த உன்னதமான பாராட்டாகவே பார்க்கிறேன்.

கமல் சார் என் விருப்பமான ஹீரோ மட்டுமல்ல, என் ஒட்டுமொத்த கலைப் பயணத்தின் ஆகச்சிறந்த இன்ஸ்பிரேஷனும் அவர்தான். அவருடைய ‘அன்பே சிவம்’ படம் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கமர்சியல் ஹீரோயிச இமேஜைத் தாண்டி, நடிப்பிற்குத் தீனி போடும் பாத்திரங்களை அவர் தேர்வு செய்தது போல், நானும் ஒரு நடிகராக என்னுள் இருக்கும் வெவ்வேறு பரிமாணங்களை வெளிக்கொண்டு வரக்கூடிய சவாலான கதைகளையே தேடி ஓடுகிறேன்” என்றார்.

தற்பொழுது ஓடிடி வெற்றியைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் பல புதிய பட வாய்ப்புகள் தேடி வந்தபோதிலும், அவசரப்பட்டு எதையும் ஒப்புக்கொள்ளாமல் நிதானம் காத்து வருகிறார் கார்த்திகேயன்.

“நான் ஒரு பெரிய நட்சத்திரமாக மாற வேண்டும் என்று எப்போதுமே அவசரப்பட்டதே இல்லை. வெறும் கவனத்தை (Attention) ஈர்ப்பதற்காகத் ஓடுவதை விட, முறையான சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து, படிப்படியாக வளர்வதையே விரும்புகிறேன். ஒரு நல்ல பாத்திரத்திற்காகக் காத்திருக்கும் இந்த நிமிடங்கள் நிச்சயம் அர்த்தமுள்ளதாக மாறும்” என்று மிகுந்த நம்பிக்கையுடன் பேசுகிறார் இந்த பட்டுக்கோட்டை இளைஞர்.

நடிப்பு ஒருபுறமிருக்க, இசைஞானி இளையராஜாவின் இசை தான் தனது கலை மனநிலையைத் தீர்மானிப்பதாகக் கூறும் கார்த்திகேயன் டிகே, தமிழ் சினிமாவின் அடுத்த கட்ட மாஸ் மற்றும் கிளாசிக் இன்னிங்ஸிற்குத் தற்பொழுது முழுமையாகத் தயாராகி வருகிறார்.