இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், நடிகர் சூர்யா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துச் சமீபத்தில் வெளியான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம், உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில் (Global Box Office) ரூ. 200 கோடி வசூல் மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த 2026 ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியான இத்திரைப்படம், வெளியான குறுகிய காலத்திலேயே இந்த அசாத்திய வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இத்திரைப்படத்தைச் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் (Sithara Entertainments) நிறுவனத்தின் சார்பில், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் (Fortune Four Cinemas) நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளனர். ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் (Srikara Studios) இத்திரைப்படத்தை உலகெங்கும் வழங்கியுள்ளது.ஏற்கனவே ‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட வணிக ரீதியிலான வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் நாக வம்சி மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி கூட்டணி, தற்பொழுது சூர்யாவுடன் இணைந்து மீண்டும் ஒரு பிரம்மாண்டமான திரையரங்கு கொண்டாட்டத்திற்குத் தேவையான அத்தனை அம்சங்களையும் நேர்த்தியாகத் தந்து பாக்ஸ் ஆபீஸில் தங்களது வெற்றிக் கூட்டணியை நிலைநிறுத்தியுள்ளனர்.
குடும்ப உறவுகள், உணர்வுப் போராட்டங்கள் மற்றும் மனதை நெகிழவைக்கும் உன்னதமான தருணங்களை மையமாகக் கொண்டு ஒரு முழுமையான ஜனரஞ்சகக் குடும்பப் பொழுதுபோக்குத் (Family Entertainer) திரைப்படமாக இப்படம் உருவானது. இதில் சூர்யாவுடன் இணைந்து இளம் நட்சதிரம் மமிதா பைஜு, மூத்த நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் பாலிவுட் பிரபலம் ரவீனா டாண்டன் ஆகியோர் தங்களது எதார்த்தமான மற்றும் வலுவான நடிப்பால் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றுத் திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்துள்ளனர்.
நடிகர் சூர்யாவின் திரைப்பயணத்தில் இது மிக முக்கியமான ஒரு வசூல் காலகட்டமாக மாறியுள்ளது. இவரது முந்தைய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘கருப்பு’ வசூலில் பிரம்மாண்ட சாதனை படைத்ததைத் தொடர்ந்து, தற்பொழுது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படமும் மிகக் குறுகிய நாட்களில் ரூ. 200 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது. இது சூர்யாவின் அசைக்க முடியாத நட்சத்திர மதிப்பையும் (Star Value), அவரது கதைகளுக்குக் குடும்ப ஆடியன்ஸ் மற்றும் பொதுவான பார்வையாளர்கள் மத்தியில் இருக்கும் அசாத்திய வரவேற்பையும் பறைசாற்றுகிறது.தற்போதைய நிலவரப்படி திரையரங்குகளில் நிலவும் அசுரக் கூட்டத்தின் காரணமாக, இத்திரைப்படத்தின் உலகளாவிய வசூல் பயணம் வரும் வாரங்களில் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் எனத் திரையலக வர்த்தகப் பகுப்பாய்வாளர்கள் கணித்துள்ளனர். சூர்யாவின் தொடர்ச்சியான இந்த வசூல் சாதனை அவரது ரசிகர்களுக்கு இந்த ஆகஸ்ட் மாதத்தில் கூடுதல் இரட்டைக் கொண்டாட்ட உற்சாகத்தை அளித்துள்ளது.