பிரம்மாண்டக் குப்பையானதா ‘டாக்ஸிக்’? (விமர்சனம்.) எடிட்டிங் குழப்பமும், ஹாலிவுட் மோகமும்!

இந்தியாவில், போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கக் காலத்தில் கோவா மாநிலத்தின் பின்னணியில் அரங்கேறும் மாஃபியாக்களின் அதிகாரப் போட்டியுடன் படத்தின் கதை துவங்குகிறது. ஆக்ரோஷமான குணாதிசயம் கொண்ட யஷ் தனது அக்கா நயன்தாராவுடன் இணைந்து எதிரணி கும்பல்களை வேட்டையாடுகிறார். தம்பி ஒட்டுமொத்தப் பிராந்தியத்தையும் ஆள வேண்டும் என்ற லட்சியத்துடன் பயணிக்கும் நயன்தாரா, ஒரு மிகப்பெரிய டானுடன் மோதும் சந்தர்ப்பத்தில் கொல்லப்படுகிறார்.

இதன் காரணமாக கோவாவை விட்டு வெளியேறும் யஷ், சீனப் பகுதியில் தந்து சர்வதேச மாஃபியா நெட்வொர்க்கை விரிவுபடுத்துகிறார். பல வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் திரும்பும்போது, அவரது முதல் மனைவி கியாரா அத்வானி தற்கொலை செய்துகொள்கிறார். அதன் பிறகு தனது மகனையே கொல்லத் துணியும் யஷ், பின்னர் மனம்மாறி அவனைக் கொல்லாமல் விட்டு விடுகிறார். அதன்பின், ருக்மிணி வசந்தைத் திருமணம் செய்து வாழும் யஷின் மகனை, மூத்த மகன் கொல்லத்துடிக்கிறான். அதிலிருந்து ருக்மிணி வசந்தையும் இளைய மகனையும் எப்படிக் காப்பாற்றுகிறார். என்பதே இப்படத்தின் எஞ்சிய கதையாகும்.

ஒரே நேரத்தில் ஏகப்பட்ட கிளைக்கதைகளையும், தேவையற்ற கதாபாத்திரங்களையும் ஒன்று சேர்க்க முயன்றதே இப்படத்தின் பிரதான பலவீனமாக மாறியுள்ளது. இதன் காரணமாக, காட்சிகளை நேர்த்தியாக வரிசைப்படுத்த முடியாமல் படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்னி பெரிதும் தடுமாறியுள்ளார். இந்தத் தெளிவற்ற காட்சி அமைப்பால் தியேட்டரில் இருக்கும் பார்வையாளர்களும் பெரும் குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். திரையில் நகரும் சம்பவங்கள் தந்தையின் கோணத்திலா, அல்லது மகனின் பார்வையா? என்ற அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல் ரசிகர்கள் அவதிப்படுகிறார்கள்.

இடைவேளை வரை கதையின் அசல் வடிவம் என்னவென்றே புரியாத ஒரு சலிப்பான சூழல் நிலவுகிறது. இரண்டாம் பாதியில் அசல் கதைக்களம் ஓரளவிற்கு வெளிப்பட்டாலும், அதற்குள் திரைக்கதை தனது சுவாரசியத்தை முழுமையாக இழந்துவிடுகிறது. இயக்குநர் கீது மோகன்தாஸ் உருவாக்கிய இக்கதைக்கு யஷ் திரைக்கதை மற்றும் வசனப் பங்களிப்பை வழங்கியிருந்தாலும், பலவீனமான மேக்கிங் உத்திகளால் அது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

படம் முழுவதிலும் நாயகன் யஷ் எதிரிகளை அதிரடியாகத் தாக்குவதும், ஆயுதங்களால் சுட்டு வீழ்த்துவதுமாகவே வலம் வருகிறார். தொடர்ச்சியாகப் பிணக் குவியல்களும், கொடூரமான இரத்தக் களரியும் காட்சிப்படுத்தப்படுவதால், பார்வையாளர்களுக்கு ஒருவித சலிப்பும் அச்சுறுத்தலுமே மிஞ்சுகிறது.யஷின் ஸ்டைலிஷ் தோற்றமும், சர்வதேசத் தரத்திலான காட்சி அமைப்புகளும் தொழில்நுட்ப ரீதியாகப் பாராட்டப் பெற்றாலும், உணர்வற்ற திரைக்கதையும் பலவீனமான கதாபாத்திர வடிவமைப்பும் ஒட்டுமொத்தப் படத்தின் ஆன்மாவையும் முழுமையாகச் சிதைத்துவிட்டன.

இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், தாரா சுதாரியா, ஹுமா குரேஷி எனப் பான்-இந்திய அளவிலான மெகா நட்சத்திரப் பட்டாளங்கள் இருந்தும், அவர்களின் அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்தத் திரைக்கதையில் இடமில்லாமல் போயுள்ளது. கதாபாத்திரங்கள் உணர்வுகளைப் பிரதிபலிப்பதற்குப் பதிலாக, ஆபாசக்காட்சிகளையும் ஆடம்பரமான உடைகளையும், ஒப்பனையையும் மட்டுமே காட்டும் காட்சிப் பொருட்களாகச் சுருக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, தொடக்கத்தில் சில அதிரடியான காட்சிகளுடன் மிரட்டலாகத் தோன்றும் நயன்தாரா, அடுத்தடுத்த காட்சிகளில் எவ்வித முக்கியத்துவமும் இன்றி அமைதியான ஒரு காட்சிப் பொருளாக மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். யஷ் விதவிதமான ஆடைகளுடன் மது அருந்துவதும், பெண்களுடன் உல்லாசமாக இருப்பதுமான வன்முறை வாழ்க்கை முறையே படம் முழுவதும் பிரதானமாகத் தெரிகிறது. இறுதிப் பகுதிக்கு முன்பாக யஷ் நடிக்க முயன்றிருந்தாலும், அதீத சண்டைக் காட்சிகளின் ஆதிக்கத்தால் யஷ் என்ற நடிகரின் பங்களிப்பு வீணாகிவிடுகிறது.

ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி, கணினி வரைகலை (VFX) காட்சிகளைச் சரியான முறையில் ஒரிஜினல் காட்சிகளுடன் இணைத்துப் படத்தைப் பிரம்மாண்டமாகக் காட்டியுள்ளார். குறிப்பாக 1947 – 1970 காலகட்டங்களுக்கான உடைகள் மற்றும் களத்தின் வண்ணங்கள் பிரமிக்க வைக்கின்றன. ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா, தனிஷ்க் பாக்சி ஆகியோரது இசையில் பாடல்கள் பெரிதாகக் கவரவில்லை என்றாலும், பின்னணி இசை சண்டைக் காட்சிகளுக்கு ஓரளவிற்குக் கைகொடுத்திருக்கிறது. ஆனால், படம் முழுவதும் வன்முறை காட்சிகள் நிரம்பியிருப்பதால், பின்னணி இசை ஆங்காங்கே அதீத சத்தத்துடன் இருக்கிறது.

இயக்குநர் கீது மோகன்தாஸ், அசல் கதையை விட அதனை எப்படியாவது ஒரு ஹாலிவுட் பாணியில் காட்சிப்படுத்த வேண்டும் என்ற அதீத மோகத்தில், பல தேவையற்ற காட்சிகளைத் திணித்துப் பார்வையாளர்களைச் சோதித்துள்ளார். முந்தைய பிளாக்பஸ்டர் வெற்றியைக் குறிவைத்து, அதீத சண்டைக் காட்சிகள் மூலமாகவே ரசிகர்களைத் திருப்திப்படுத்திவிடலாம் என்ற தவறான புரிதலால் படம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. உணர்வற்ற எத்தகைய பிரம்மாண்டத்தையும் ரசிகர்கள் நிராகரிப்பார்கள் என்பதை இத்திரைப்படம் மீண்டும் நிரூபித்துள்ளது.

மொத்தத்தில், ‘டாக்ஸிக்’ திரைப்படம் என்பது தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கும்!