இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம், ‘தி பாரடைஸ்’ (The Paradise) . சுதாகர் செருகுரி தனது எஸ்.எல்.வி சினிமாஸ் (SLV Cinemas) நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடலான ‘ஆயா ஷேர்’ (Aaya Sher) யூடியூபில் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று மெகா ஹிட் பார்ட்டி நம்பராக மாறியுள்ள நிலையில், தற்பொழுது வெளியாகியுள்ள ‘யேஷனாகுலா கட்டமிடா’ (Yeshanagula Kattamida) என்ற இரண்டாம் பாடல் ரசிகர்களிடையே இமாலய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிரடியான வெஸ்டர்ன் பீட்டுகளுக்கும், கமர்சியல் மாஸ் பாடல்களுக்கும் பெயர்பெற்ற அனிருத், இம்முறை தெலங்கானா மாநிலத்தின் பாரம்பரிய அக்மார்க் நாட்டுப்புறக் கலையை (Telangana Folk) கையில் எடுத்து, தனது பிரத்யேக நவீன பாணியுடன் கலந்து ஒரு அசாத்திய மேஜிக்கை நிகழ்த்தியுள்ளார். தெலங்கானா கிராமிய மண்வாசனை மாறாத அசல் வார்த்தைகளைப் பயன்படுத்தி, இப்பாடலை பிரபல பாடலாசிரியர் காசர்லா ஷியாம் தனது தனித்துவமான பாணியில் எழுதியுள்ளார். நாட்டுப்புறப் பாடகர்களான பிரபா பங்காரிகல்லா மற்றும் அதுலா ஜங்கிரெட்டி ஆகியோரின் எதார்த்தமான குரல்களில், அனிருத்தின் துடிப்பான இசையுடன் இணைந்து இப்பாடல் அசுர பலத்துடன் உருவாகியுள்ளது.
இப்பாடலின் காணொளியைப் படப்பிடிப்புத் தளத்தின் சுவாரசியமான மேக்கிங் காட்சிகளுடன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் நாயகன் நானி மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் அனிருத்தின் அனல் பறக்கும் பீட்டுகளுக்கு அசாத்திய எனர்ஜியுடன் ஆடியுள்ள மாஸ் நடனம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. குறிப்பாக, நடிகை கீர்த்தி சுரேஷ் திரையுலகப் பயணத்திலேயே ஒரு திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் சிறப்புத் தோற்றத்தில் (Special Appearance / Item Number) மிகவும் கவர்ச்சியாகவும் துடிப்பாகவும் நடனமாடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தில் நானி ‘ஜடால்’ என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக காயடு லோஹர் கதாநாயகியாகக் களம் இறங்கியுள்ளார். சமகால அரசியல் மற்றும் கேங்ஸ்டர் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 24, 2026 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
தற்பொழுது ஆடியோ சாட்டுகளில் முதலிடத்தைப் பிடித்து ட்ரெண்டாகி வரும் இந்த எனர்ஜிடிக் நாட்டுப்புறப் பாடல், வரும் செப்டம்பர் 24 அன்று திரையரங்குகளில் படம் வெளியாகும்போது, பெரிய திரையில் ரசிகர்களுக்கு ஒரு மாபெரும் கொண்டாட்டமான சினிமா அனுபவத்தை வழங்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.