‘மொத ராத்திரி’ ஹீரோவை புகழ்ந்து தள்ளிய சேத்தன்!

இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில், ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இத்திரைப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தங்களது நன்றி தெரிவிக்கும் விழாவை நடத்தினர்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் சார்பில் விழாவில் பேசிய தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி,

“இந்த படத்தை தயாரித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இயக்குநர் ராஜா கதை சொன்ன உடனே எனக்குப் பிடித்துவிட்டது. தற்போது எல்லா திரையரங்குகளிலும் படம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழில் ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’ படங்களைத் தொடர்ந்து எங்களுக்கு இது மூன்றாவது வெற்றிப் படம் (Hattrick Hit) ஆகும். இந்த படத்தை மற்ற மொழிகளிலும் கொண்டு செல்லும் எண்ணம் இருக்கிறது. இதோடு எங்கள் ‘இருமுடி கட்டு’ படத்தையும் வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

ஒளிப்பதிவாளர் சுரேந்திரன் பரஞ்சோதி, படத்தொகுப்பாளர் அசோக் அர்ஜூனன் மற்றும் பப்ளிசிட்டி டிசைனர் வியாகி ஆகியோர் பேசுகையில், தங்களுக்குக் கிடைத்த பாராட்டுகள் மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தனர்.

விழாவில் பேசிய நடிகைகள் சுமித்ரா தேவி, வர்ஷினி கார்மேகம், தீபிகா மற்றும் நடிகர் திலீப் ஆகியோர் படத்திற்கு குடும்பங்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பைப் பகிர்ந்து கொண்டனர்.

நடிகை இனியா ராம் பேசுகையில்,

“படம் பார்த்த பலரும் என்னிடம் இது கே.பாக்கியராஜ் சார் படம் பார்த்தது போல் அவ்வளவு சுவாரசியமாக இருப்பதாகக் கூறினார்கள். நிச்சயம் அடுத்த ஐந்து வருடத்திற்குள் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் பட்டியலில் ராஜா இடம் பிடிப்பார்” என்று பாராட்டினார்.

நடிகர் அப்துல் லீ மற்றும் கார்த்திகேயன் டிகே தங்களது பல வருட உழைப்பிற்குப் பிறகு கிடைத்த அங்கீகாரம் இது என நெகிழ்ந்தனர்.

இசையமைப்பாளர் பரத் சங்கர் பேசுகையில்,

“என்னுடைய இசைப் பயணத்தில் இத்திரைப்படம் ஒரு முக்கியமான மைல்கல். எப்போதும் ஓடக்கூடிய படங்களின் இயக்குநராக இருக்க வேண்டும் என்று ராஜா அடிக்கடி சொல்வார்” என்றார். மூத்த நடிகர் சேத்தன் பேசுகையில், “புதிய திறமையாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ஹீரோ ரிஷியைத் திரையில் பார்க்கும்போது இளவயது அமிதாப்பச்சனைப் பார்ப்பது போல இருந்தது” என்று பாராட்டினார்.

இயக்குநர் ராஜா கருப்பசாமி பேசுகையில்,

“ஆறு வருடங்களுக்கு முன்னால் இந்தக் கதையை எடுத்துக்கொண்டு அலைந்த போது, எல்லாரும் சொன்ன ஒரே விஷயம் ‘ரிஷிகாந்தை ஹீரோவாக மாற்ற வேண்டும்’ என்பதுதான். ஆனால், இப்போது தமிழ் சினிமாவிற்குச் சமூகப் பொறுப்பும், நல்ல கொள்கைகளும் கொண்ட ஒரு சிறந்த ஹீரோ கிடைத்துவிட்டார்” என்றார்.

நாயகன் ரிஷிகாந்த் பேசுகையில்,

“என்னை உங்கள் வீட்டுப் பையனாக நினைத்து ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. ஆறு வருடங்களாக நானும் தம்பி ராஜாவும் இந்தத் திரைப்படத்தை மனதிற்குள் சுமந்து கொண்டிருந்தோம். குடும்பத்தோடு அனைவரும் தியேட்டருக்கு வந்து கவலைகளை மறந்து சிரித்து மகிழும்படியான ஒரு நல்ல படத்தை உருவாக்க நினைத்தோம். அது இன்று சாத்தியமாகியுள்ளது” எனக் கூறி விடைபெற்றார்.