‘ஆகாயம்’ பட விழாவில் தமிழக முதல்வர்  விஜய் குறித்து நெகிழ்ந்த இயக்குநர் நாகராஜ்!

"With the Same Pure Love, Vijay Became the CM of Tamil Nadu!" - Director Nagaraj Breaks the Internet with His Speech at Aagayam Launch!

டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி தயாரிப்பில், ‘தினந்தோறும்’ படப் புகழ் இயக்குநர் நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ‘ஆகாயம்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னையில் விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், சற்குணம், பாலசேகர் மற்றும் இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், பிரபல தயாரிப்பாளர் டி.சிவா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். ‘தினந்தோறும்’ என்ற எவர்கிரீன் திரைப்படத்தின் மூலம் முத்திரை பதித்த இயக்குநர் நாகராஜ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த ‘ஆகாயம்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராகக் களமிறங்கியுள்ளார்

விழாவில் முதன்முறையாக மேடையேறிப் பேசிய தயாரிப்பாளர் ஜெயச்சந்திரன், இது தனது முதல் மேடை என்பதால் எதைப்பற்றிப் பேசுவது என்றே தெரியவில்லை என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மேலும், தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் ஊடகங்களின் ஒரு சிறிய செய்தியோ அல்லது விமர்சனக் கருத்தோ ஒரு திரைப்படத்தின் தலையெழுத்தையே ஒரே நாளில், ஏன் சில நொடிகளில் கூட மாற்றிவிடும் அசாத்திய சக்தி கொண்டது என்றார். அத்தகைய வலிமைமிக்க மீடியாவை முழுமையாக நம்பித்தான் தனது முதல் தயாரிப்புப் படைப்பான இந்த ‘ஆகாயம்’ திரைப்படத்தை வழங்கியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களின் பேராதரவும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனமார்ந்த வாழ்த்துகளும் இப்படத்திற்குத் தடையின்றித் தேவை எனக் கேட்டுக்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் சசி,

தனது நீண்டகால நண்பர் நாகராஜுக்காக, ‘ஆகாயம்’ படத்தை உருவாக்கிய தயாரிப்பாளருக்கு ஒரு சிறந்த நண்பனாக முதலில் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன் என்றார். இசையமைப்பாளர் ரகுநந்தனின் இசை அமைப்பில் உருவாகியுள்ள பாடல்கள் அனைத்தும் கதைக்கு ஏற்ற வகையில் மிகவும் எளிமையாகவும், மக்கள் எளிதில் ரசிக்கும் வகையிலும் அமைந்துள்ளதால், இவை நிச்சயம் அனைவரையும் சென்றடையும் என்றார்]. மேலும் நாகராஜ் உடனான தனது 30 ஆண்டுகால நட்பை நினைவு கூர்ந்த சசி, முற்காலத்தில் நாகராஜ் தன்னிடம் 2 மணிநேரம் வியக்கத்தக்க வகையில் கதை சொன்ன விதத்தைப் பார்த்துத் பிரமித்துப் போனதாகவும், நாகராஜை ஒரு மிகப்பெரிய கிரியேட்டிவ் மனிதராகத் தான் பார்ப்பதாகவும் பெருமிதம் கொண்டார். நாகராஜின் கதைகளில் இருக்கும் சென்சிபிலிட்டியும், குறிப்பாகப் பெண் கதாபாத்திரங்களில் இருக்கும் கண்ணியமும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்ட அவர், சில இயக்குநர்கள் தவறான படங்களை ஒருபோதும் எடுக்கவே மாட்டார்கள்; அப்படித் தவறான படமே எடுக்க முடியாத அரிய இயக்குநராக நாகராஜைப் பார்ப்பதாகப் புகழ்ந்தார். சில படங்கள் தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் மறந்துவிடும், ஆனால் நாகராஜின் படங்கள் நம் மனதில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் என்று கூறி ‘ஆகாயம்’ படத்திற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்

விழாவில் நெகிழ்ச்சியுடன் பேசிய இயக்குநர் தினந்தோறும் நாகராஜ்,

மீண்டும் என்னை திரையுலகில் இந்த உயரிய இடத்தில் நிற்க வைத்த அனைவருக்கும் முதலில் நன்றி என்றார். தயாரிப்பாளர் ஜெயச்சந்திரன் அவர்கள் நான் சொன்ன கதையைச் சுமார் மூன்று மணி நேரம் கேட்டுவிட்டு, அடுத்த நிமிடமே இத்திரைப்படத்தை நாம் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். ‘இப்படித்தான் படம் எடுப்பேன்’ என்ற என்னுடைய பிடிவாதத்தை ரசித்து, என் மீது நம்பிக்கை வைத்துப் படத்தை உருவாக்கிய அவருக்குத் தனது நன்றிகள் என்றார். மேலும் சமூகக் கருத்துக்கள் குறித்துப் பேசிய அவர், என்னைப் போல வாழ்க்கையில் தவறான பாதைக்குச் சென்று மீண்டும் திரும்பி வர நினைப்பவர்கள் சினிமாவில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் நிறையப் பேர் இருக்கிறார்கள். இந்தப் படத்தில் ‘குடி உள்ளே போனால் குடும்பம் வெளியே போயிடும்’ என்று ஒரு வசனம் இருக்கிறது. குடித்தால் வியாதி வரும், கடன் வரும், போலீஸ் வரும், பிரச்சனை வரும், குடும்பம் இரண்டாகும். அதனால் குடியை ஒருபோதும் கொண்டாட வேண்டிய விஷயமாகப் பார்க்கக்கூடாது. அதே நேரத்தில் தவறிவிட்ட ஒருவர் மீண்டும் எழுந்து வர வேண்டும் என்ற எண்ணத்திற்கும், அவருக்கு ஒரு பெரிய ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதற்கும் இந்தப் படம் ஒரு குரலாக இருக்கும் . என்னால் மீண்டும் வர முடிந்தது என்றால், என்னைப் போல இன்னும் நிறைய பேராலும் முடியும் என்று தான் நம்புவதாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய இயக்குநர் நாகராஜ்,

“இந்தப் படத்தில் குடியைப் பற்றிப் பேசுவது கதையாகவோ, விளம்பரமாகவோ, போரடிக்கும் வகையிலோ இருக்காது. ஒரு அழகான காதல் கதைக்குள், வாழ்க்கைக்குப் பயனுள்ள ஒரு சிறிய விஷயமாகத்தான் அது இருக்கும். அதேபோல் அரசியலும் இந்தப் படத்தில் இருக்கிறது. நாம் நின்றாலும், உட்கார்ந்தாலும், பேசினாலும், சிரித்தாலும், ஓடினாலும் எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. ஒவ்வொரு ஃப்ரேமிலும் அரசியல் இருக்கிறது. ஆனால் இந்தப் படம் எல்லாவற்றையும் தாண்டி அன்பைப் பற்றித்தான் பேசுகிறது. சசி, பாலசேகரன் உள்ளிட்ட நண்பர்கள் இன்று எனக்காக வந்து கை கொடுத்திருப்பது சினிமாவையும், தொழிலையும் தாண்டிய அன்பு. இந்த உலகம் அன்பால் உருவானது என்று நான் மீண்டும் நம்புகிறேன். அதே அன்பால் தான் விஜய் தமிழகத்தின் முதல்வரானார். அந்த அன்பைத்தான் ‘ஆகாயம்’ பேசுகிறது என்றார்.

இத்திரைப்படத்தில் ‘கன்னி மாடம்’ திரைப்படத்தின் மூலம் இயல்பான நடிப்பால் கவனம் ஈர்த்த ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆலிஷா மிராணி கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயபிரகாஷ், கிரி துவாரகிஷ், ஸ்ரீ தேவகிருஷ்ணன், ‘மெய்யழகன்’ படத்தில் நடித்த இந்துமதி மணிகண்டன், தீபா, சஞ்சனா நமீதாஸ், ரோசாரி, ரைட்டர் ஹரிஹரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘சென்னை டு சிங்கப்பூர்’, ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் நல்லமுத்து, ‘ஆகாயம்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘நீர்ப்பறவை’, ‘அயோத்தி’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இசை வெளியீட்டு விழா படக்குழுவினர், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் உற்சாகமாக நடைபெற்ற நிலையில், ‘ஆகாயம்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.