நாட்டார் மர்மங்களின் அதிரடி வேட்டை! சித்து – தர்ஷிகா நடித்த ‘தி டார்க் ஹெவன்’.
Experience the Spine Chilling Folklore Mystery in Theatres from September 18th Starring Siddu & Dharshika!
நாட்டார் கதைகளின் (Folklore) பின்னணியில், கொலையும் கொலை சார்ந்த துப்பறியும் களத்தையும் கொண்ட ஒரு முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம், வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. ஏற்கனவே ‘டி3’ (D3) என்ற த்ரில்லர் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த இயக்குநர் பாலாஜி, தனது இரண்டாவது படைப்பாக இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ள இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் அரங்கில் விமரிசையாக நடைபெற்றது.
வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட இத்திரைப்படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்களான சித்து, தர்ஷிகா மற்றும் நடிகை ரித்விகா ஆகியோருடன் வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் உள்ளிட்ட ஒரு மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.
நாட்டார் கதைகளின் மர்ம முடிச்சுகளோடு நகரும் ஒரு பரபரப்பான துப்பறியும் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்திற்காக, இதுவரை எந்தவொரு திரைப்படக் கேமராவின் வெளிச்சமும் படாத பல அரிய இடங்களைத் தேடிப் பிடித்துப் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். திருநெல்வேலி, ராமநாதபுரம், குற்றாலம், முக்கூடல் மற்றும் தென்காசி போன்ற தென் தமிழகப் பகுதிகளில் இப்படத்தின் முக்கியப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பேசிய நடிகை ரித்விகா,
தமிழ் சினிமாவில் தற்பொழுது ஏகப்பட்ட த்ரில்லர் திரைப்படங்கள் வந்தவண்ணம் உள்ளன; ஆனால் அவை அனைத்தும் போலீஸ் விசாரணை, முகமூடி மனிதன் என்ற ஒரே மாதிரியான வழக்கமான பாணியிலேயே சுழன்று கொண்டிருக்கின்றன. ஆனால் ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் அந்த வழக்கமான த்ரில்லர் பாதையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, ரசிகர்களுக்கு ஒரு புதிய ஆச்சரியமான திரையரங்க அனுபவத்தைத் தரும். ஒரு காட்சிக்காகக் கூட இயக்குநர் பல மணிநேரம் லொகேஷன்களில் காத்திருந்து படம்பிடித்துள்ளார்.
நடிகர்களை விடத் தொழில்நுட்பக் கலைஞர்கள் இருமடங்கு உழைப்பை இப்படத்திற்காகக் கொடுத்துள்ளனர். தற்போதைய சூழலில் திரைப்படங்கள் தியேட்டர் படங்கள், ஓடிடி படங்கள் எனப் பிரிக்கப்பட்டாலும், ஒரு நல்ல சினிமா அனுபவத்தைப் பெற ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து பார்ப்பது தான் நல்ல அனுபவமாக இருக்கும். தியேட்டரில் ஓடிய பிறகு ஓடிடியில் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தைத் தவிர்த்து, செப்டம்பர் 18 அன்று தியேட்டருக்கு வந்து நம்பிப் பார்க்கலாம், இப்படம் யாரையும் ஏமாற்றாது. என்று பேசினார்.

இயக்குநர் பாலாஜி பேசும்போது,
டார்க் ஹெவன் திரைப்படம் ஒரு நாட்டார் கதையை அடிப்படையாகக் கொண்ட துப்பறியும் த்ரில்லர் படைப்பு என்று குறிப்பிட்டார். இப்படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லருக்குக் கிடைத்துள்ள பிரம்மாண்ட வரவேற்பிற்கு ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் அசாத்திய உழைப்புதான் முக்கியக் காரணம் என்று பாராட்டிய அவர், படைப்பு மிகச் சிறப்பாக வர வேண்டும் என்ற நோக்கத்தில் தங்களுக்குள் சின்னச் சின்ன விவாதங்கள் வந்தாலும், ‘பேக் அப்’ சொல்வதற்குள் அவை அனைத்தும் மறைந்துவிடும். மணிகண்டன் எதிர்காலத்தில் திரையுலகில் மிகப்பெரிய உயரத்தைத் தொடுவார்.
நடிகை ரித்விகா இணைந்த பிறகு படத்தின் தரம் மற்றும் மதிப்பு வேறொரு உயரத்திற்குச் சென்றது. ரித்விகா ஏற்றுள்ள பாத்திரம் படம் வெளியான பிறகு ஒட்டுமொத்தத் திரையுலகிலும் மிக ஆழமாகப் பேசப்படும்.
வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தை ரசிகர்கள் தியேட்டரில் பார்த்துவிட்டு தங்களது நேர்மையான விமர்சனங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். என்றார். .
நாயகன் சித்து,
தனது முதல் திரைப்படத்திலேயே ஒரு கம்பீரமான காவல்துறை (Cop) கதாபாத்திரத்தில் நடிக்கும் அரிய வாய்ப்பு தனக்குக் கிடைத்துள்ளது பெரும் பாக்கியம் என்றார் . எல்லா கதாநாயக நடிகர்களுக்கும் தங்களது ஆரம்பக் காலத் திரைப்பயணத்திலேயே ஒரு முழு நீளக் காவல் துறை கதையில் நடிக்கும் வாய்ப்பு அமைவது மிகவும் அரிதான ஒன்று என்றும், ஆனால் இயக்குநர் பாலாஜி தன் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கியதற்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
ஒரு க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிப்பதன் மூலம், ஒரு நடிகராகத் தனது நடிப்புத் திறமையின் பலதரப்பட்ட பரிமாணங்களைத் திரையரங்குகளில் வெளிப்படுத்த ஒரு மிகச் சிறந்த களம் அமைந்ததாகக் குறிப்பிட்டார். மேலும், இத்திரைப்படத்தில் ரித்விகா, தர்ஷிகா ஆகியோருடன் திரையுலகில் நீண்ட அனுபவம் வாய்ந்த வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார் போன்ற மூத்த ஆளுமைகளுடன் இணைந்து பணியாற்றியது தனக்கு ஒரு சிறந்த பல்கலைக்கழகம் போல் அமைந்தது என்றும், படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் அவர்களிடமிருந்து நடிப்பைக் கற்றுக்கொள்ளும் அனுபவமாக இருந்ததாகவும் நெகிழ்ந்த சித்து, வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி அனைவரும் திரையரங்கு சென்று இந்தப் படத்தைப் பார்த்து ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.