கார்த்திக் நேதா வரிகளில் அப்பாக்களின் தேசிய கீதமாக மாறும் ‘பத்தா’ பட மெலடி!

"Magale, Manthira Simizhe!" - How Karthik Netha's Poetic Lyrics Made Batha's First Single the Ultimate Father-Daughter Anthem!

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பத்தா’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘மகளே’ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் அட்லி வழங்கும் இத்திரைப்படத்தை ஸ்டார் ஸ்டுடியோ18, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளன. இன்றைய தலைமுறை ரசிகர்களின் மனம் கவர்ந்த சாய் அப்யங்கர், இப்பாடலின் மூலம் முற்றிலும் மாறுபட்ட மென்மையான மெலடி பாணியைக் கையாண்டு இசையமைத்துப் பாடியுள்ளார். அவரது வழக்கமான அதிவேகத் துடிப்பான இசையிலிருந்து விலகி, கேட்கும் ஒவ்வொருவரையும் உருக வைக்கக்கூடிய ஒரு புதிய மெலடி அனுபவத்தைக் கொடுத்துள்ள இப்பாடலுக்குக் கவிஞர் கார்த்திக் நேதா வரிகளை எழுதியுள்ளார்.

ஒரு தந்தை தனது அன்பு மகளைப் பார்த்து நெகிழ்ச்சியுடன் பாடுவது போன்ற உணர்வில் செதுக்கப்பட்டுள்ள இப்பாடல், தந்தையின் பாசத்தையும் எல்லையற்ற அன்பையும் அழகாக வெளிப்படுத்துகிறது. “மகளே, மந்திரச் சிமிழே, மங்கள விளக்கே கேளடி” எனத் தொடங்கும் கவிஞர் கார்த்திக் நேதாவின் கவித்துவமான வரிகள், வெறும் பாடல் வரிகளாக இல்லாமல் ஒரு அழகான கவிதை போல அமைந்து இப்பாடலின் உணர்வை இதயத்திற்கு நெருக்கமாகக் கொண்டு சேர்க்கின்றன. புதுமையான ஒரு ரெட்ரோ களத்தில் வெளியாகியுள்ள ‘மகளே’ பாடல் அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு, இணையத்தில் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ புகழ் இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் இந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பது எனப் பல்வேறு பிரம்மாண்ட எதிர்பார்ப்புகளைத் தன்னுள் கொண்டுள்ள ‘பத்தா’ திரைப்படம், வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.