சர்வதேச விருதுகளைக் குவித்த ‘என்ன விலை’ (விமர்சனம்!) தியேட்டரில் ஜெயித்ததா?
Karunas and Nimisha Sajayan Shine in Saajeev Pazhoor’s Gripping Courtroom Drama
கருணாஸ் , நிமிஷா சஜயன், விஜயலட்சுமி வீரமணி,கமலேஷ் ஜெகன், மோகன் ராமன், மொட்ட ராஜேந்திரன், ஷாஷா சிவகுமார்,ஒய்ஜி மகேந்திரன் , பிரபு, பூர்ணிமா பாக்யராஜ் ,நிழல்கள் ரவி, லொள்ளு சபா சாமிநாதன், பாண்டி, கவிதாலயா கிருஷ்ணன், தீபா ஷங்கர் ,கோதண்டம், சேரன் ராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளிவந்துள்ள திரைப்படம், என்ன விலை. இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 10 க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தகது. இத்திரைப்படத்தை 100 க்கு மேலான ஆவணப்படங்களை இயக்கிய சஜீவ் பழூர் எழுதி இயக்கி இருக்கிறார் . ஆல்பி ஆண்டனி ஒளிப்பதிவு செய்துள்ளார் .சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். கலாமயா சினிவெர்ஸ் சார்பில் ஜித்தேஷ் வி,அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் கதை ராமேஸ்வரம், அக்னி தீர்த்தக் கடல் பகுதியில் நிகழ்கிறது. அக்னி தீர்த்தக் கடலில் நீராடுவது சகல பாவங்களையும் போக்கும் என்பது இந்துக்களின் பெரும்பான்மையான நம்பிக்கை. மேலும் பித்ரு தோஷம், நவகிரக தோஷங்கள் போன்றவற்றிற்கு திலக ஹோமம் செய்து தங்கம், வெள்ளி மற்றும் காசுகளை அக்னி தீர்த்தக் கடலில் செலுத்துவதை பரிகாரமாக செய்து வருகின்றனர். இப்படி செலுத்தப்படும் பொருட்களையும் , காசுகளையும் மீன்பிடிப்பு இல்லாத காலங்களில் நலிந்த நிலையில் இருக்கும் மீனவர்கள் அதை எடுத்து தங்களது ஜீவாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

அப்படி வாழும் ஒருவராக (கருணாஸ்) தவசிமுத்து. வறுமையிலும் நேர்மை, கொஞ்சம் அப்பாவித்தனமானவர். கடலில் மூழ்கி இயற்கை தரும் ஆதாரத்தின் மூலமாக தனது ஜீவனத்தை நடத்தி வருகிறார். வழக்கம்போல் அக்னி தீர்த்தக்கடலில் மூழ்கி பக்தர்கள் செலுத்திய காணிக்கையான காசுகளை சேகரிக்கும் போது அவருக்கு ஒரு பழமையான தங்கப்பததக்கம் கிடைக்கிறது. அதை ஒரு நேர்மையற்ற போலீஸ்காரரிடம் கொடுக்கிறார். அந்த போலீஸ்காரர் அதை அபகரிக்கும் முயற்சியில் தவசிமுத்துவை பொஇ வழக்கு மூலமாக குற்றவாளியாக்கி சிறைக்கு அனுப்புகிறார்.
தவசி முத்துவின் நேர்மையையும், அவரது குடும்பத்தினையும் நன்கு அறிந்த வழக்கறிஞர் காஞ்சனா (நிமிஷா சஜயன்) அவரை அந்த பொய் வழக்கிலிருந்து விடுவிக்க முயற்சிக்கிறார். இந்த வழக்கு பல கோணங்களில் சென்று நீதி பரிபாலனங்களை நோக்கி அதிரும் கேள்வியை எழுப்புகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் ‘என்ன விலை’ படத்தின் மீதிக் கதை.
தவசிமுத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாஸ், இதற்கு முன்னர் பல படங்களில் தனது தனிப்பட்ட நடிப்பினை நிரூபித்திருக்கிறார். இந்தப்படத்திலும் தன்னுடைய நடிப்பினை அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறார். ஒரு சாமனியனின் மேல் விழும் அவகாரமான செயல் அவனையும் அவனது குடும்பத்தினையும் எப்படி எல்லாம் பாதிக்கிறது என்பதை நேர்த்தியாக பார்வையாளர்களுக்கு கடத்தியுள்ளார்.

வழக்கறிஞர் காஞ்சனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிமிஷா சஜயன், உண்மையை வெளியே கொண்டுவர போராடும் வழக்கறிஞராக சிறப்பாக நடித்திருக்கிறார். அனைத்து காட்சிகளுமே சிறப்பாக இருக்கிறது. சொந்தமாக டப்பிங் பேசி நடித்திருக்கிறார். அது அந்த கதாபாத்திரத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
கருணாஸின் மனைவியாக நடித்திருக்கும் விஜயலக்ஷ்மி வீரமணி, தங்கையாக நடித்திருக்கும் சாஷா ஆகியோரும் இயல்பாக நடித்துள்ளனர். மகனாக நடித்திருக்கும் சிறுவன் கமலேஷ் ஜெகன் பரிதாபத்தையும், அனுதாபத்தையும் ஏற்படுத்துகிறான்.
பிரபு, பூர்ணிமா பாக்யராஜ் , நிழல்கள் ரவி, லொள்ளு சபா சாமிநாதன், பாண்டி, கவிதாலயா கிருஷ்ணன், தீபா ஷங்கர் ,கோதண்டம், சேரன் ராஜ் போன்றோரும் திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி, ராமேஸ்வரத்தின் இயல்பு மாறாமல் படம்பிடித்துள்ளார். ஸ்டுடியோவிற்குள் படமாக்கப்பட்டுள்ள காட்சிகள் ஒரிஜினல் காட்சிகளாகவே தெரிகிறது. இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் பின்னணி இசை படத்தின் பலம்.
கருணாஸின் குடிசை வீடு, கோர்ட் ரூம் ஆர்ட் டைரக்டரின் திறமையை காட்டுகிறது. இன்னும் பல மீனவகுடிசைகள் மின் வசதிகள் இல்லாமல் தான் இருக்கின்றன.
சட்டப்போராட்டத்தையும், நீதிமன்ற வாதங்களையும் அலுக்காமல் கொண்டு சென்ற இயக்குநர் சஜிவ் பழூர் கமர்ஷியலாக, விறுவிறுப்பாக கொடுத்து அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார். இதுவரை யாரும் பேசாத ஒரு விஷயத்தை பேசி கவனம் ஈர்த்துள்ளது பாராட்டுகளுக்குரியது.