மிரட்டும் சூப்பர்நேச்சுரல் க்ரைம் த்ரில்லர்! (விமர்சனம்!) ‘தி டார்க் ஹெவன்!’
The Dark Heaven - Supernatural Crime Thriller Packed with Unpredictable Plot Twists!
கேரள மற்றும் தமிழக எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் ஒரு மலைப் பிரதேசத்தில் நிலவும் விசித்திரமான அமானுஷ்யப் பின்னணியைக் கொண்டு, திரையரங்குகளில் சஸ்பென்ஸ் அலைகளை உருவாக்கியிருக்கிறது ‘தி டார்க் ஹெவன்’. அந்த ஊரில் காலங்காலமாக ஒரு மர்மமான வழக்கம் தொடர்கிறது. ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறையும், சரியாக ஏழாவது மாதத்தில் அங்கிருக்கும் ஆண்கள் அடுத்தடுத்து விடைதெரியாத வகையில் உயிரிழக்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இரு பிரிவினருக்கு இடையே மூண்ட பெரும் பகையின் தொடர்ச்சியே இதற்குப் பின்னணியில் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் காலம் காலமாக நம்பி அச்சப்படுகிறார்கள்.
இந்த இக்கட்டான காலகட்டத்தில், அந்தப் பகுதிக்கு இன்ஸ்பெக்டராகப் பொறுப்பேற்கும் சித்து, தனது குடும்பத்தோடு அங்கு குடியேறுகிறார். ஊர் பெரியவர்கள் இவரை எச்சரித்து சில கட்டுப்பாடுகளை கூறுகிறார்கள். ஆனால் அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருக்கிறார்.
சித்து பணியைத் தொடங்கிய சில நாட்களிலேயே, அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணும், அவரைத் தொடர்ந்து ஒரு இளைஞனும் அடுத்தடுத்து மாயம் ஆகிறார்கள். இந்த மர்மங்களைச் சித்து நெருங்க முற்படும்போது, எந்தவொரு தடயமும் இல்லாமல் வரிசையாகப் பல கொலைகள் அரங்கேறி ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைக்கின்றன.
ஒருகட்டத்தில் கொலையாளியின் நிழல் சித்துவின் சொந்த வீட்டிற்குள் நுழைந்து, அவரது மனைவியின் உயிரையும் பறிக்கிறது. இதனால் தனது பதவியை இழக்கும் சித்துவின் இடத்திற்கு, மற்றொரு அதிகாரி இந்த வழக்கைக் கையிலெடுக்கிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களே தி டார் ஹெவன்.
அங்கு நடப்பவைகளை முன்கூட்டியே கணித்துச் சொல்லும் ‘தி டார்க் ஹெவன்’ என்ற ஒரு விசித்திரமான புத்தகத்தை மையமாகக் கொண்டு, ஆரம்பத்தில் ஒரு அமானுஷ்யப் படமாகத் தொடங்கி, பின் பாதியில் சைக்கோ த்ரில்லராகப் பரிணமிக்கிறது இத்திரைப்படம். மாயமான மனிதர்கள் மற்றும் தொடர் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மைகளை ஒரு நேர்த்தியான நான்-லீனியர் திரைக்கதை உத்தியில், பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்துள்ளார் இயக்குநர் பாலாஜி.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கதாநாயகனாகக் கால்பதித்துள்ள சித்து, அதிகம் பேசாமல் தனது உடல்மொழியின் மூலமாகவே ஒரு கண்டிப்பான காவல் அதிகாரியின் பாத்திரத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார். சித்துவின் மனைவியாக வரும் தர்ஷிகா, கிராமத்துப் பெண்ணாக வரும் ரித்விகா மற்றும் காவலராக வரும் பிரதீப் ஆகியோருடன் வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயகுமார், அருள் டி. சங்கர் உள்ளிட்ட ஒட்டுமொத்தக் கலைஞர்களும் தங்களின் பங்களிப்பை உணர்ந்து மிக எதார்த்தமாக நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப ரீதியாக ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பி.கே., அந்த மலைக்கிராமத்தையும், அடர்ந்த காடுகளின் திகிலூட்டும் இருளையும் தனது கேமராவிற்குள் கடத்திப் பார்வையாளர்களுக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளார். அவருக்கு இணையாக இசையமைப்பாளர் சக்தி பாலாஜியின் பின்னணி இசை, சஸ்பென்ஸ் காட்சிகளின் தீவிரத்தை இன்னும் பல மடங்கு உயர்த்தியுள்ளது.
மூன்று வெவ்வேறு கிளைக்கதைகளைத் தொய்வில்லாமல் கச்சிதமாகத் தொகுத்து, படத்தின் வேகத்தைக் காப்பாற்றியுள்ளார் படத்தொகுப்பாளர் ராஜா ஆறுமுகம். திரைக்கதையின் நான்-லீனியர் உத்தியில் ஆங்காங்கே சில சிறிய குழப்பங்கள் இருந்தாலும், இயக்குநர் பாலாஜி வழக்கமான ஒரு துப்பறியும் கதையை முற்றிலும் ஒரு புதுமையான கோணத்தில் கையாண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
கொலையாளி யார், எதற்காக இந்தக் கொலைகள் நடக்கின்றன என்ற கேள்விகளுக்குப் பார்வையாளர்கள் உத்தேசிக்கும் அத்தனை யூகங்களையும் தவிடுபொடியாக்கும் வகையில், இறுதிக்காட்சி வரை சஸ்பென்ஸ் மற்றும் திகில் குறையாமல் திருப்பங்களை அமைத்திருப்பது இயக்குநரின் திறமைக்குச் சான்றாகும்.
மொத்தத்தில், சுவாரசியமும் விறுவிறுப்பும் நிறைந்த ஒரு புதுமையான த்ரில்லர் அனுபவத்தைத் தேடும் ரசிகர்களுக்கு, இந்த வாரம் ‘தி டார்க் ஹெவன்’ ஒரு சிறந்த தேர்வாக அமையும்.