‘பீப்’ – விமர்சனம்!

Raghav Ranganathan's Intense Investigative Thriller Suffers from Excess Glamour and Pace Lag!

திரையுலகின் பிரபலமான நடிகையை சந்திக்க  பல தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் படத்தின் நாயகன் ராகவ். இந்தத் தேடல்களுக்கு மத்தியில், பாலியல் தொழிலாளியான யாமினி லக்ஷ்மணனின் பழக்கமும், ஆழமான நட்பும் கிடைக்கிறது. ஆரம்பத்தில் சாதாரணமான அறிமுகமாகத் தொடங்கி, நாளடைவில் இருவருக்குள்ளும் ஒரு நெருக்கமான பந்தம் உருவாகும் வேளையில், ராகவின் ஆசையை உணர்ந்த யாமினி, அவர் விரும்பிய அந்தத் திரைப் பிரபலத்தைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

இப்படியான சூழலில்,  அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து கீழே விழுந்து யாமினி எதிர்பாராத விதமாக மர்மமான முறையில் உயிரிழப்பது ராகவ்விற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுகிறது. காவல் துறையினர்  இதை சாதாரணமான ஒரு தற்கொலையாகவோ அல்லது விபத்தாகவோ கருதி வழக்கமான நடைமுறை விசாரணைகளை மேற்கொண்டு வரும் வேளையில், இந்த மரணத்திற்குப் பின்னால் ஒரு ஆழமான சதி ஒளிந்திருக்கிறது என்றும், இது ஒரு திட்டமிட்ட படுகொலை என்று ராகவ் உள்ளுணர்வு சொல்ல, அதை  உறுதியாக நம்புகிறார்.

கொலையாளியைக் கண்டறிய, ராகவ் தனிப்பட்ட முறையில் ஒரு ரகசியத் தேடலைத் நண்பர்களுடனும், காவல் துறையினருடனும் இணைந்து தொடங்குகிறார். தோழியின் மர்ம மரணத்திற்குப் பின்னால் இருக்கும் நிஜமான குற்றவாளியைக் கண்டறியும் ஒரு விறுவிறுப்பான க்ரைம் டிராமாவாக நகர்கிறது பீப் திரைப்படத்தின் திரைக்கதை.

கதையின் முதன்மைக் கதாபாத்திரத்தில் தோன்றும் ராகவ், ஒரு அதீத புத்திசாலித்தனமும் கூர்மையான புலனாய்வுத் திறனும் கொண்ட ஒரு இளைஞனின் பாத்திர அமைப்பிற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார். குறிப்பாக காவல் துறையினரையே வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு, அவர் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளும் ரகசியப் புலனாய்வு முன்னேற்றங்களும், அதற்காக அவர் கையாளும் யுக்திகளும் தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு நல்ல சஸ்பென்ஸ் சுவாரசியத்தைத் தருகின்றன. ஒட்டுமொத்தக் கதையையும் தனது தோள்களில் தாங்கி, ஒரு நேர்த்தியான பங்களிப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

பாலியல் தொழிலாளி சுனைனா என்ற சவாலான கதாபாத்திரத்தை ஏற்றுள்ள யாமினி லக்ஷ்மணன், நவீன ரக அரைகுறை ஆடைகள் மட்டுமின்றி பாரம்பரியப் புடவைகளிலும் தனது தாராளமான கவர்ச்சியால் பார்வையாளர்களைப் பெரிதும் ஈர்க்கிறார். வெறும் கவர்ச்சிப் பாத்திரமாக மட்டுமே வந்து போகாமல் உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் நடிப்புத் திறனை வெளிப்படுத்தித் தனது பாத்திரத்திற்கு முழு நியாயம் செய்துள்ளார்.

இவர்களுடன் பேராசிரியர் சிதம்பரம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எல்.சண்முக சுந்தரம், திரையுலக நடிகை நயனா கபூராக வரும் ஐடி ஆச்சார்யா, நாயகனின் நண்பர்களாகத் தோன்றும் பிரேர்னா கண்ணா, அருண் மோகன், ஷ்ரவண் ராமகிருஷ்ணன், ஜுஹி சர்மா மற்றும் காவல் அதிகாரிகளாக வரும் நித்திஷ், பாலாஜி எனப் படத்தில் வரும் மற்ற துணை கதாபாத்திரங்கள் அனைவரும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயம் இல்லாதவர்களாக இருந்தாலும், ஓகேவான நடிப்பிஅனி கொடுத்துள்ளனர்.

க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணிக்குத் தேவையான ஒளிப்பதிவினை கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் பிரதீப் பத்ம குமார். பிரசாந்த் விஹாரியின் பின்னணி இசையும் ஓகே.

திரைக்கதையின் போக்கில் உண்மையான குற்றவாளி யார் என்ற ரகசியம் பார்வையாளர்களுக்கு முன்கூட்டியே உடைக்கப்பட்ட பிறகும், சட்டத்திற்கு தேவைப்படும் ஆதாரங்களை சேகரிக்கும் காட்சிகள் சுவாரசியம். தேவையற்ற திணிப்புகளால் கதையின் போக்கு ஒருவித சோர்வை தருகிறது.