‘பத்தா’ (விமர்சனம்.) ரௌடியை நல்வழிப்படுத்திய சிறுவன்!

A Fierce Rowdy Trapped by a Schoolboy Delivers Endless Entertainment and Emotion

‘மக்கள் செல்வன்‘ விஜய் சேதுபதி மற்றும் லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முதன்முறையாகத் இணைந்து நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. இயக்குநர் பாலாஜி தரணிதரன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் ஹரி கிருஷ்ணன், சாந்தி பாலச்சந்திரன், அஜய் கோஷ், அர்ஜுன் சிதம்பரம், சிறுவன் சாய் பிருத்வி ராஜ், சஹஸ்ரா, விஷ்ணு கோவிந்த், மற்றும் பாலமுருகன் உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர். எஸ்.கே செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 இத்திரைப்படத்தின் கதைக்களம் கடந்த 1980-களின் தமிழ்நாட்டுப் பின்னணியில் சித்தரிக்கப்பட்டுள்ளது. செல்வாக்குமிக்க சாராய வியாபாரியாகவும், அசைக்க முடியாத ரௌடியாகவும் வலம் வரும் விஜய் சேதுபதியைக் கண்டாலே அந்த ஊர் மக்கள் அனைவரும் அஞ்சி நடுங்கும் ஒரு சூழல் நிலவுகிறது. இருப்பினும், அவர் செய்து வரும் இந்தச் சட்டவிரோதச் சாராயத் தொழிலையும், ஆபத்தான ரவுடித்தனத்தையும் முற்றிலுமாக கைவிட்டுவிட்டு, எப்படியாவது அவர் ஒரு நல்வழிக்குத் திரும்ப மாட்டாரா என்று அவரது மனைவி லிஜோ மோல் ஜோஸ் மற்றும் அவர்களது அன்பு மகளான தேன்மொழி ஆகிய இருவரும் ஒவ்வொரு நாளும் மிகுந்த கவலையுடனும் ஏக்கத்துடனும் காத்திருக்கிறார்கள்.

 விஜய் சேதுபதி வசிக்கும் அதே பகுதியில் வசித்து வரும் சாய் பிருத்வி ராஜ் என்ற சிறுவன் ஒரு நாள் தங்களது வீட்டு மாடியில் விளையாடிக் கொண்டிருக்கிறான். அப்போது எதிர்பாராதவிதமாக அவன் கைகளில் இருந்து ஒரு செங்கல் தவறி கீழே விழுகிறது. துரதிர்ஷ்டவசமாக, அந்தச் சமயம் கீழே நின்று டீ குடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியின் தலைக்கு அருகே அந்தச் செங்கல் விழுந்து அவருக்கு லேசான காயம் ஏற்படுகிறது. இதனை ஒரு தற்செயலான விபத்தாகப் பார்க்காமல், தங்களது தலைவருக்கு எதிராக நடந்த ஒரு பெரிய கொலை முயற்சியாக இருக்கும் என விஜய் சேதுபதியின் சகாக்கள் தவறாகக் கருதுகிறார்கள். இதனால் ஆத்திரமடையும் ரௌடி கும்பல், அந்தச் செங்கல்லை வீசிய மர்ம நபரைத் தேடி அந்த ஊர் முழுவதும் தீவிரமாக வலைவீசித் தேடி வருகிறார்கள்.

 ரௌடிகளின் இந்தத் தீவிரமான தேடுதல் வேட்டையினாலும் அச்சுறுத்தலினாலும் அந்தச் சிறுவன் சாய் பிருத்வி ராஜ் பயந்து நடுங்கி மிரண்டு போகிறான். இந்த இக்கட்டான சூழ்நிலையில், அவனது பள்ளி விடுமுறையின் போது தன்னையும், தனது குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள, விஜய் சேதுபதியைப் பள்ளிக்கழிவறையின் உள்ளே வைத்துப் பூட்டிவிடுகிறான். ஒரு மாஸ் ரௌடி திடீரென மாயமானதால் பதற்றமடையும் விஜய் சேதுபதியின் மனைவியும், அவரது விசுவாசமான சகாக்களும் ஒரு வார காலமாக அவரைத் தீவிரமாகத் தேடி அலைகிறார்கள். இறுதியில், கழிவறைக்குள் மாட்டிக் கொண்ட விஜய் சேதுபதியின் நிலை என்ன ஆனது, அந்தச் சிறுவன் இதிலிருந்து எப்படித் தப்பினான் என்பதே இப்படத்தின் சுவாரசியமான மீதிக்கதையாகும்.

 சமீபகாலமாகத் தொடர் தோல்விகளைச் சந்தித்துச் சற்று தொய்வடைந்திருந்த விஜய் சேதுபதியின் திரைப்பயணத்திற்கு இந்த ‘பத்தா’ திரைப்படம், நிச்சயம் ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்து கைகொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதில் பத்தா என்ற பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி, 1980-களின் விண்டேஜ் தோற்றத்தில் ரசிகர்களைப் பெரிதும் ரசிக்கும்படி செய்துள்ளார். தன்னைப் பார்த்து ஒட்டுமொத்த ஊரே மிரண்ட நிலையில், தான் ஒரு பள்ளிக் கழிவறைக்குள் மாட்டிக்கொண்ட விஷயம் ஊராருக்குத் தெரிந்தால் பெரும் அவமானமாகி விடுமே என்று நினைத்துக் கலங்குவதும், அங்கிருந்து வெளியே செல்ல முடியாமல் திணறித் தவிப்பதும் தியேட்டரில் சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. அதே சமயம், தனது மனைவியைக் கொடுமைப்படுத்தும் காட்சிகளில் ஒரு முரட்டு ரௌடியாகவும், எதிரிகளைத் துவம்சம் செய்து பறக்கவிடுவதிலும் தனது கதாபாத்திரத்திற்குத் தேவையான அழுத்தமான நடிப்பை அவர் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார்.

 நாயகி லிஜோ மோல் ஜோஸ் தான் நடித்துள்ள அத்தனை காட்சிகளிலும் ஒரு அற்புதமான வாழ்வியலைக் கொண்டு வந்து, தனது அசாத்திய நடிப்பால் படத்திற்குப் பெரும் உயிரோட்டத்தைத் தந்துள்ளார். பள்ளிச் சிறுவனாக வரும் சாய் பிருத்வி ராஜ் எந்தவொரு இடத்திலும் தடுமாறாமல், ஒரு பெரிய நடிகருக்கு இணையாகக் குறை சொல்ல முடியாத அளவிற்குக் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தியுள்ளார். இவர்களுடன் இணைந்து நடித்துள்ள ஹரி கிருஷ்ணன், சாந்தி பாலச்சந்திரன், அஜய் கோஷ், அர்ஜுன் சிதம்பரம், சஹஸ்ரா, விஷ்ணு கோவிந்த், மற்றும் பாலமுருகன் போன்ற இதர துணை நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, கதையின் ஓட்டத்திற்கு ஏற்ப மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

 ஒளிப்பதிவாளர் எஸ்.கே செல்வகுமார் 1980-களின் காலகட்டத்தைக் கண்முன்னே நிறுத்தும் வகையில் படம்பிடித்துள்ள காட்சிகளில் குறையில்லை. இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் இசையில் வரும் ஒரு பாடல் மட்டும் இனிமையாகவும், முணுமுணுக்க வைக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இருப்பினும், படத்தின் பின்னணி இசை சில முக்கிய உணர்வுப்பூர்வமான இடங்களில் இன்னும் கொஞ்சம் மெருகேற்றப்பட்டு சிறப்பாக இருந்திருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

ஒட்டுமொத்த ஊரே பார்த்து அஞ்சி நடுங்கிய, ஒரு மிருகத்தைப் போல் திரிந்த ஒரு முரட்டு மனிதன், ஒரு சிறுவனின் எதிர்பாராத சிறு செயலால் எப்படித் தன் தவறை உணர்ந்து நல்வழிக்குத் திரும்புகிறான் என்பதுதான் இப்படத்தின் மையக்கதை. அதை எமோஷனலாகவும், அதே சமயம் அனைவரும் ரசிக்கும்படியும் ஒரு சுவாரசியமான திரைக்கதையாக அமைத்து இயக்குநர் பாலாஜி தரணிதரன் இப்படத்தின் மூலம் வெற்றியைப் பெற்றுள்ளார்.