‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபிள்’ – விமர்சனம்!

Child Artist Sara and Fahadh Combo Make This Fantasy Thriller a Perfect Family Watch

இயக்குநர் ஷஷாங்க் யேலேட்டி எழுத்து மற்றும் இயக்கத்தில், ஃபகத் ஃபாஸில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து திரையரங்குகளில் வெளியாகியுள்ள விசித்திரமான ஃபேண்டஸி திரைப்படம் ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble). இத்திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரம் சாரா பாலேகர், மகேஷ் மஞ்ச்ரேக்கர், சௌரப் சச்தேவா, வெங்கடேஷ் காகுமானு, சுப்பராஜு, திவ்யா பிள்ளை மற்றும் எஸ். ஷஷாங்க் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். பிராட் பிரான்சிஸின் நேர்த்தியான ஒளிப்பதிவிற்கு, இசையமைப்பாளர் கால பைரவா இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் கதை, ஒரு விசித்திரமான குற்றப் பின்னணியையும், அதற்குள் மலரும் தூய்மையான அன்பையும் மையமாகக் கொண்டு நகர்கிறது. கதையின் நாயகனான ஃபகத் ஃபாஸில், இந்த உலகத்தில் பணம் மட்டுமே அத்தனையையும் விடப் பிரதானமானது என்று தீவிரமாக நம்பும் ஒரு சுயநலமிக்க ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆவார். பணத்திற்காக எந்தவொரு கீழ்த்தரமான மோசடியையும் செய்யத் துணியும் குணமுடைய அவர், அந்தப் பகுதியில் பெரிய அளவில் வட்டித்தொழில் செய்து வரும் தாதாவான மகேஷ் மஞ்ச்ரேக்கர் நடத்தும் ஒரு பாரம்பரிய ஆட்டுக்கிடா சண்டையில் கலந்துகொள்கிறார். அந்தப் போட்டியில் மிகவும் மோசடியான உத்திகளைக் கையாண்டு வெற்றியும் பெறுகிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த ஏமாற்று வேலை தாதா மகேஷ் மஞ்ச்ரேக்கருக்குத் தெரிய வர, அவரிடம் ஃபகத் ஃபாஸில் வசமாகச் சிக்கிக்கொள்கிறார்.

மகேஷ் மஞ்ச்ரேக்கர் பிடியில் இருந்து தன்னை எப்படியாவது விடுவிக்கும்படி கெஞ்சும் ஃபகத் ஃபாஸில், அதற்குப் பதிலாக இருபத்தைந்து லட்ச ரூபாயை இரண்டே நாட்களில் தந்துவிடுவதாக வாக்குறுதி அளிக்கிறார். உடனடியாகப் பணத்தைத் திரட்டுவதற்காகக் குறுக்கு வழியைத் தேடும் அவர், சாரா பாலேகர் என்ற ஒரு சிறுமியைக் கடத்தி அதன் மூலம் அவளது குடும்பத்தினரிடம் இருந்து பெரும் தொகையைப் பறிக்க முயற்சி செய்கிறார். ஆனால், அந்தச் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டாள் என்ற விபரீத உண்மை தெரியாமல், அவளது உறவினர்கள் சிறுமியைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள். சில நாட்களுக்குப் பிறகுதான், தான் கடத்தி வைத்திருக்கும் அந்தச் சிறுமி உயிருடன் இல்லை என்பதும், அவள் ஒரு அமானுஷ்ய ஆத்மா என்பதும் ஃபகத் ஃபாஸிலுக்குத் தெரிய வருகிறது. இருப்பினும், அந்த உண்மையை அறிந்து பயந்து ஓடாமல், அந்த ஆத்மாவின் அமானுஷ்ய சக்தியைப் பயன்படுத்தித் தன்னை மிரட்டும் தாதா மகேஷ் மஞ்ச்ரேக்கரைத் திருப்பி மிரட்ட அவர் ஒரு புதிய மாஸ்டர் பிளான் தீட்டுகிறார். மற்றொரு புறம், சிறுமியைக் கடத்திய குற்றத்திற்காகக் காவல் துறை ஃபகத் ஃபாஸிலைத் தீவிரமாகத் தேடத் தொடங்குகிறது. இந்தச் சிக்கல்களுக்குப் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் கதையாகும்.

ஒரு சுயநலமிக்க மோசடிப்பேர்வழிக்கும், ஒரு அப்பாவிச் சிறுமியின் ஆத்மாவிற்கும் இடையே மிக மெதுவாக உருவாகும் அழகான மற்றும் தூய்மையான அன்பை இயக்குநர் ஷஷாங்க் யேலேட்டி மிகவும் உணர்வுப்பூர்வமாகவும் ரசிக்கும் வண்ணமும் விவரித்துள்ளார். நாயகனாக வரும் ஃபஹத் ஃபாஸில் தனது வழக்கமான எதார்த்த பாணியில், இந்தத் தனித்துவமான கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி எவ்விதக் குறையுமற்ற மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, காவல் துறையிடம் வசமாக மாட்டிக்கொண்டு அவர் அடிவாங்கும் கொடூரமான காட்சியில், தன் நிலையைப் பார்த்து அந்தச் சிறுமி சாரா தனக்காகக் கண்ணீர் விட்டு அழுவதை எண்ணி அவர் உருகும் காட்சியிலும், படத்தின் உணர்ச்சிகரமான க்ளைமாக்ஸ் காட்சியில் சாராவின் உடலைப் பார்த்துக் கதறி அழும் காட்சியிலும் தியேட்டரில் இருக்கும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கண் கலங்கடித்து விடுகிறார்.

அவருக்கு இணையாகக் குழந்தை நட்சத்திரமாக வரும் சிறுமி சாராவும் முதிர்ச்சியுடன் கூடிய சிறப்பான நடிப்பைக் கொடுத்துப் படத்திற்குப் பெரும் பலம் சேர்த்துள்ளார். ஃபகத் ஃபாஸில் மற்றும் சிறுமி சாரா ஆகிய இருவருக்குமிடையே திரையில் தோன்றும் அத்தனை காட்சிகளும், திரையரங்கிற்கு வரும் சிறுவர் மற்றும் சிறுமியர் உள்ளிட்ட இளைய தலைமுறை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவர்களுடனேயே படம் முழுவதும் வலம் வரும் ஒரு செல்ல நாயும் சிறுவர்களைப் பெரிதும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

பிராட் பிரான்சிஸின் வண்ணமயமான ஒளிப்பதிவும், கால பைரவாவின் பின்னணி இசையும் படத்தின் உணர்ச்சி பூர்வமான காட்சிகளுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன. மொத்தத்தில், ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ திரைப்படம், குழந்தைகள் தங்களது குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ள ஒரு பொழுது போக்குப் படைப்பாகும்.