‘ஜெயிலர் 2’ (விமர்சனம்) மரண மாஸ் தியேட்டர் கொண்டாட்டம்!
Superstar Rajinikanth and Director Nelson Deliver the Ultimate Fan Boy Festival
தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சாம்ராஜ்யமாகத் திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்த ‘ஜெயிலர் 2’ (Jailer 2) திரைப்படம் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளைத் திருவிழாக் கோலமாக மாற்றியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தனது ட்ரேட் மார்க் டார்க் காமெடியுடன், இந்த முறை ரசிகர்களின் பல்ஸை கச்சிதமாகப் புரிந்துகொண்டு ஒரு அசுரத்தனமான கமர்ஷியல் திரைக்கதையை வடிவமைத்துள்ளார். திரையரங்கிற்குள் நுழையும் ஒவ்வொரு ரசிகனையும் இருக்கையின் நுனிக்கே வரவழைத்து, விசில்களாலும் காகித மழையாலும் அரங்கை அதிர வைக்கும் ஒரு மாஸ் கொண்டாட்டமாக இப்படம் உருவெடுத்துள்ளது.
‘ஜெயிலர் 2’ கதையின் படி, தனது பழைய அதிரடி ஆக்ஷன் அவதாரத்தை மறைத்து விட்டு, தமிழக – கேரள எல்லையோர சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து கொண்டு அமைதியான வாழ்க்கை வாழும் முத்துவேல் பாண்டியன் (ரஜினிகாந்த்), ஒரு உள்ளூர் தாதாவின் கார் ஓட்டுநராக மாறும் காட்சிகள் நெல்சன் பாணி காமெடியுடன் செம்ம கலகலப்பாகத் தொடங்குகின்றன. வர்மனின் மரணத்திற்குப் பழிவாங்கத் துடிக்கும் திலீப் (சுராஜ் வெஞ்சாரமூடு) ஒரு கட்டத்தில் முத்துவேல் பாண்டியனைச் சுற்றி வளைக்க, அங்கிருந்து தப்பிக்கும் முத்துவேல் பாண்டியன், ஒட்டுமொத்த நிழலுலகத்தின் சக்ரவர்த்தியான போதி கல்பாக்கை (எஸ். ஜே. சூர்யா) வேட்டையாடத் தொடங்கும் போது தியேட்டரில் ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பமாகிறது.
ரசிகர்களுக்கான மற்றொரு கொண்டாட்டமாக பூர்ணா மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோரின் இரண்டு ஐட்டம் சாங்ஸ் அமைந்துள்ளது. ராக்ஸ்டார் அனிருத்தின் அசுரத்தனமான தாளத்திற்கு, இவர்களது எனர்ஜியான நடன அசைவுகளும், கவர்ச்சியும் ரசிகர்களைத் தியேட்டர் ஸ்கிரீன் முன்னால் வந்து குத்தாட்டம் போட வைத்துள்ளது.

படத்தின் இரண்டாம் பாதியில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன் ஆகியோரின் குடும்ப உணர்வுப்பூர்வமான எமோஷனல் காட்சிகளும், எஸ். ஜே. சூர்யா – வித்யா பாலன் ஆகியோரின் அதிரடிக் காட்சிகளும் கமர்ஷியல் படங்களுக்குரிய மாஸ் எனர்ஜியைத் தருகின்றன. குறிப்பாக, க்ளைமாக்ஸில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஸ்டைலான குரலில், “50 வருஷமா என்னை முடிக்க ட்ரை பண்ணாங்க, ஆனா அது யாராலும் முடியல” என்று பேசும் பன்ஞ் வசனத்திற்கும், வித்யா பாலனிடம் “உங்க கிட்டயிருந்து குட் மார்னிங், குட் நைட் மெஸேஜ் வரும்ன்னு எதிர்பார்த்தேன்” என்று நக்கலாகக் கேலி செய்யும் காட்சிகளுக்கும் தியேட்டரில் அப்ளாஸ் தெறிக்கிறது.
படத்தில் சிறப்புத்தோற்றதில் வரும் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், ஹிர்திக் ரோஷன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் பங்களிப்பு உட்பட ஏகப்பட்ட சர்ப்ரைஸ்கள் உள்ளன. அது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. முழுக்க முழுக்க காமெடி கலாட்டா ஆக்ஷனாக அமைந்துள்ளது. சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும், ரஜினியின் அசாத்திய திரை ஆளுமையால் இந்த ‘ஜெயிலர் 2’ பாக்ஸ் ஆபீஸில் ஒரு புதிய வரலாற்றுச் சாதனை வெற்றியை நோக்கி ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது.
‘ஜெயிலர் 2’ – மரண மாஸ் கொண்டாட்டம்!