‘டிரோன்ஸ்’ – (விமர்சனம்!) குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய பொழுதுபோக்குத் திரைப்படம்!
Raghav Mirdath’s Sci-Fi Fantasy Combines Color Politics with an Engaging Lab Mystery
வித்தியாசமான திரைப்படங்களை வரவேற்கும் தமிழ் திரையுலகில், முற்றிலும் புதியதொரு சர்ரியலிஸ்ட் ஃபேண்டஸி அறிவியல் த்ரில்லர் பாணியில் இயக்குநர் ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் வெளியாகியுள்ள புதிய திரைப்படம் ‘டிரோன்ஸ்’ . ஜி.எம். மோர்கன் பிலிம்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தாவதர்ஷினி, ‘பரிதாபங்கள்’ புகழ் டிராவிட் செல்வம், மற்றும் ஆர்.ஜே. தீபக் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். ஜானர் எல்லைகளை உடைத்து, கற்பனைக் கதையை அறிவியலோடு இணைக்க முயன்றுள்ள இப்படத்தின் விமரசனம்.
கல்லூரியில் படித்து வரும் டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர் மற்றும் ஆர்.ஜே. தீபக் ஆகிய மூன்று மாணவர்கள் ஒரு எதிர்பாராத காரணத்திற்காகக் கல்லூரியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் (Suspension) செய்யப்படுகிறார்கள். இந்த விபரம் பெற்றோருக்குத் தெரிந்தால் ஏற்படும் விளைவுகளுக்குப் பயந்து, வீட்டை விட்டு வெளியேறி தங்குவதற்கு ஒரு ரகசிய இடத்தைத் தேடுகிறார்கள். அப்படி அவர்கள் கண்டுபிடிக்கும் இடம் தான் ஒரு கைவிடப்பட்ட காடிடத்திற்குள் நுழைகிறார்கள் அதற்பிறகு அங்கிருந்து வெளியேற முடியாமல் உள்ளேயே சிறைபடுகிறார்கள்.
அந்த மர்மமான கட்டிடத்திற்குள் வசித்து வரும் பேரழகி சித்தி இத்னானியை அவர்கள் சந்திக்க, அவளது வசீகரத் தோற்றத்தில் மயங்கும் டிராவிட் செல்வத்திற்குள் காதல் மலர்கிறது. ஆனால், இவர்களின் காதலுக்குச் சித்தி இத்னானியின் பாட்டி (தேவதர்ஷினி) கடுமையான முட்டுக்கட்டை போடுகிறார். இதற்கிடையே, காணாமல் போன மாணவர்களைத் தேடி வரும் போலீஸ் அதிகாரி சினிமாவாலா சதீஷும் அந்த அழகியின் வலையில் விழுகிறார். இதன் பிறகு, அந்தப் பெண்ணின் அழகிற்குப் பின்னால் இருக்கும் ஒரு ஆபத்தான சூனியக்காரி (Witch) ரகசியம் தெரிய வர, அவளைக் காதலிக்க மறுக்கும் அந்த ஆண்களின் கதி என்ன ஆனது, அவர்கள் அங்கிருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதே ‘டிரோன்ஸ்’ படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.
ஒரு பேரழகி மற்றும் ஆபத்தான சூனியக்காரக் கிழவி என்ற விசித்திரமான விண்டேஜ் கற்பனைக் கதைக்கு, முற்றிலும் ஒரு புத்தம் புதிய மாடர்ன் அறிவியல் வடிவத்தை இயக்குநர் கொடுத்துள்ளார். அதனை ஒரு புதுமையான பின்னணியில் அசாத்திய நகைச்சுவையுடன் புகுத்தித் தியேட்டரில் ரசிகர்களைச் சிரிக்க வைத்திருப்பதுடன், தற்காலச் சமுதாயம் சிந்திக்க வேண்டிய நிறவெறிக்கு (Racism) எதிரான கருத்துக்களையும் படத்தின் உள்ளே பேசியிருப்பது இயக்குநரின் அசாத்திய உழைப்புக்குப் பாராட்டுகளைத் தேடித்தருகிறது.
திரைக்கதையின் அமைப்பில், படத்தின் முதல் பாதி சில இடங்களில் சற்றே மெதுவாக நகர்ந்து பார்வையாளர்களை லேசான சோர்வடையச் செய்தாலும், படத்தின் பிற்பாதியான இரண்டாம் பாதி யாரும் யூகிக்க முடியாத பல அதிரடித் திருப்பங்களுடன் நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறது. சமுதாயப் பிரச்சினைகளை இயக்குநர் மிகவும் மேலோட்டமாகக் கையாண்டிருந்தாலும், அதனை ஒரு கலகலப்பான காமெடி பின்னணியில் வாசகர்களின் கவனம் ஈர்க்கும் வகையில் நேர்த்தியாகச் சொல்லியுள்ளார். இதன் காரணமாக, இப்படம் ஒரு சில மேக்கிங் குறைபாடுகளையும் தாண்டிச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அத்தனை தரப்பு சினிமா ரசிகர்களும் தங்களது குடும்பத்துடன் தியேட்டருக்கு வந்து மனமாறக் கொண்டாடும் படியான ஒரு கலகலப்பான என்டர்டெய்னராக மாறுவதில் முழுமையாக வெற்றி பெற்றுள்ளது.