‘பனி விழும் இரவு’ சைக்காலஜிக்கல் த்ரில்லர் – விமர்சனம்!

பவி கிரியேஷன்ஸ் (Pavi Creations) நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் செ.ரா. ராஜேஷ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள புதிய சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படம் ‘பனி விழும் இரவு’. தற்காலத்தில் உலகையே அச்சுறுத்தி வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அசாத்தியமான தாக்கத்தையும், மனிதர்களின் உளவியல் ரீதியான சிக்கல்களையும் மையமாக வைத்து, சஸ்பென்ஸ் மற்றும் பல திடுக்கிடும் திருப்பங்களுடன் இத்திரைப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாயகன் அருண் கார்த்தி மற்றும் நாயகி எனாக்ஷி கங்குலி ஆகிய இருவரும் தங்களது திருமணத்திற்கு முந்தைய பிரீ வெட்டிங் ஷூட்டிற்காக (Pre-wedding shoot) எழில் கொஞ்சும் கொடைக்கானல் மலைப்பிரதேசத்திற்குப் பயணிப்பதில் இருந்து தொடங்குகிறது. அங்குள்ள அழகான சூழலில் தங்களது காதலைக் கொண்டாடி மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கும் இந்த இளம் ஜோடிக்கு, விடிந்தால் திருமணம். ஆனால், அந்தத் திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில், நாயகி எனாக்ஷி கங்குலி திடீரென மர்மமான முறையில் காணாமல் போகிறார். இதனால் கடும் அதிர்ச்சி அடையும் நாயகன் அருண் கார்த்தி, அங்குள்ள காவல் நிலையத்தில் தனது காதலியைக் கண்டுபிடித்துத் தருமாறு புகார் அளிக்கிறார்.

அதனைத் தொடர்ந்து இந்த மர்மமான, காணாமல் போன வழக்கைக் கையில் எடுக்கும் இன்ஸ்பெக்டர் மதிமாறன் (சேரன்ராஜ்) மற்றும் கான்ஸ்டபிள் கருப்பு நம்பியார் ஆகியோர் கொடைக்கானல் காடுகளில் தீவிரமான விசாரணையில் இறங்குகின்றனர். போலீஸாரின் இந்த அதிரடி விசாரணையின் போது, யாரும் எதிர்பாராத பல அதிர்ச்சிகரமான மற்றும் திடுக்கிடும் சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்குகின்றன. நவீன உலகை ஆட்டிப்படைக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இந்த சாதாரணக் காதலுக்குள் எப்படி நுழைந்தது, அதன் பின்னணியில் இருக்கும் தாக்கம் என்ன, மற்றும் காணாமல் போன நாயகி இறுதியாகக் கிடைத்தாரா இல்லையா என்ற பல மர்மமான கேள்விகளுக்கு விடை சொல்கிறது ‘பனி விழும் இரவு’ படத்தின் மீதிக்கதை.

இத்திரைப்படத்தின் பலமாக அமைந்திருப்பது நடிகர்களின் சிறப்பான எதார்த்தமான பங்களிப்பாகும். குறிப்பாக, உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுத் தவிக்கும் ஒரு இளைஞனாக நடித்திருக்கும் நாயகன் அருண் கார்த்தி, தனது நடிப்புத் திறமையால் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளார். காதலியின் மீதான ஆழமான காதல், அவள் காணாமல் போன போது ஏற்படும் தவிப்பு, ஏக்கம், பயம் மற்றும் மரண பதற்றம் என ஒரு சைக்கலாஜிக்கல் கதாபாத்திரத்திற்குத் தேவையான அனைத்து விதமான உணர்வுகளையும் தனது உடல்மொழி மற்றும் கண்களின் வழியே மிகக் கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார்.

இக்கதையின் முதன்மையான சஸ்பென்ஸ் மற்றும் காணாமல் போன நாயகியின் மர்மத்தை வெளிக்கொண்டு வரும் இன்ஸ்பெக்டர் மதிமாறன் என்ற கதாபாத்திரத்தில் சேரன்ராஜ் நடித்துள்ளார். அவர் தனது முதிர்ச்சியான நடிப்பால் ஒட்டுமொத்தத் திரைக்கதைக்கு விறுவிறுப்பை ஊட்டியுள்ளார். அவரோடு விசாரணை உதவிக்கு வரும் கருப்பு நம்பியார் மற்றும் சரவணசக்தி, செ.ரா. ராஜேஷ், கஜராஜ், சுருளி, உமர், வினோத் போன்ற இதர துணை நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை உணர்ந்து விறுவிறுப்பான திரைக்கதைக்குச் சிறந்த பக்கபலமாக நின்றுள்ளனர். மிக முக்கியமான திருப்புமுனை கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள கதாநாயகி எனாக்‌ஷி கங்குலி, தனது பாத்திரத்தின் தன்மையை முழுமையாக உணர்ந்து நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இப்படத்திற்குச் சதாமுருகன் இசையமைத்துள்ளார். இதில் இடம்பெற்றுள்ள பாடல்களை விட, த்ரில்லர் காட்சிகளுக்காக அவர் அமைத்துள்ள மிரட்டலான பின்னணி இசை  அச்சுறுத்தும் வகையில் நன்றாக அமைந்துள்ளதுடன், ஒவ்வொரு காட்சியின் தீவிரத்தையும் அடுத்த கட்டத்திற்கு உயர்த்திப் பிடிக்கிறது. ஒளிப்பதிவாளர் ஜெயக்குமார் தங்கவேலின் கேமரா, கொடைக்கானல் மலைப்பிரதேசத்தின் எழில் கொஞ்சும் இயற்கையையும், மர்மம் சூழ்ந்த பழைய பங்களாவையும் பார்ப்பவர்கள் திகிலடையும் விதமாக படம்பிடித்துப் பாராட்டுகளைப் பெறுகிறது.

இருப்பினும், இத்திரைப்படத்தில் சில பலவீனங்களும் ஆங்காங்கே தென்படுகின்றன. குறிப்பாக, மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதன் காரணமாக, சில முக்கியமான காட்சிகளைப் படமாக்கிய விதம் மற்றும் தொழில்நுட்பத் தரத்தில் பட்ஜெட் போதாக்குறையினால் ஏற்பட்ட சில குறைகள் திரையில் அப்பட்டமாகத் தெரிகின்றன. அடுக்கடுக்கான சஸ்பென்ஸ் காட்சிகளும், பார்வையாளர்கள் எளிதில் யூகிக்க முடியாத சில மிரட்டலான திருப்பங்களும், கிளைமாக்ஸ் வரை நீடிக்கும் மர்மமுமே  பலமாக அமைந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதனால் ஏற்படும் தாக்கத்தையும், நடுத்தரக் குடும்பப் பின்னணியையும் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் செ.ரா. ராஜேஷ். பட்ஜெட் எல்லைகளைத் தாண்டி, யூகிக்க முடியாத சில அசாத்திய திருப்பங்களையும், இறுதிவரை நீடிக்கும் மர்மத்தையும் ரசிக்க விரும்பும் சைக்கலாஜிக்கல் மற்றும் ஹாரர் த்ரில்லர் பாணி ரசிகர்களுக்கு, இந்த ‘பனி விழும் இரவு’ திரைப்படம் ஒரு திருப்திகரமான தியேட்டர் வாட்ச் ஆக இருக்கும்.