ஜீவாவின் ‘தகப்பன்’ படம் முடிவதற்கு முன்பே பிசினஸ் முடிந்து சாதனை!
Thakappan Movie Satellite Rights Acquired By ZEE Tamil And OTT Rights Bagged By Zee5 Before Film Completion
முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட ‘தங்கப்புள்ள’ பாடலின் மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, நடிகர் ஜீவா நடிப்பில் மிக வேகமாக வளர்ந்து வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் முக்கிய தயாரிப்பு மற்றும் வணிக விபரங்களை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளனர்.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, தந்தை – மகன் இடையே இருக்கும் உன்னதமான உறவு, ஆழமான குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு ஒரு தூய்மையான கிராமத்து வாழ்வியலாக இத்திரைப்படம் தயாராகியுள்ளது.
நடிகர் ஜீவாவின் ஆரம்பக்கால ஆக்ஷன் ஹிட் படமான ‘தெனாவட்டு’ திரைப்படத்திற்குப் பிறகு, நீண்ட இடைவெளிக்குக் பின் முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் அவர் வேட்டியணிந்து மண்வாசனையுடன் நடிக்கும் படமாக இந்த ‘தகப்பன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அவரது ‘TTT’ திரைப்படத்திற்குப் பிறகு, ஜீவாவின் நடிப்புத் திறமைக்குத் தீனி போடும் வகையில் இப்படம் அமைந்துள்ளதால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனமும் இதன் மேல் திரும்பியுள்ளது.
இத்திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாகப் பிரபல நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். கே. குமார் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு எம். சுகுமார் எழில் கொஞ்சும் கிராமத்துக் காட்சிகளை ஒளிப்பதிவு செய்ய, நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.
இப்படத்தின் மீதான மாபெரும் வியாபார எதிர்பார்ப்பு காரணமாக, படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்பப் பணிகள் முழுமையாக முடிவடைவதற்கு முன்பே இதன் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை முன்னணி நிறுவனமான ஜீ தமிழ் (ZEE Tamil) தொலைக்காட்சியும், டிஜிட்டல் ஓடிடி (OTT) உரிமையை ஜீ5 (Zee5) நிறுவனமும் மிகப்பெரிய விலைக்குக் கைப்பற்றியுள்ளது, தமிழ் சினிமா வர்த்தக வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு உரிமையைத் ‘திங்க் மியூசிக்’ (Think Music) நிறுவனம் பெற்றுள்ளது. வரும் டிசம்பர் 24-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்பெஷலாகத் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘தங்கப்புள்ள’ உணர்ச்சிப்பூர்வமான பாடல் படத்திற்குப் பப்ளிசிட்டி ரீதியாக மிகப்பெரிய கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.