நடிகர் நாகார்ஜுனா அக்கினேனியின் திரைப்பயணத்தில் மைல்கல்லாகவும், அவரது 100-வது படைப்பாகவும் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிங் 100’ (King 100). ‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களை இயக்கிய ர.கார்த்திக் இப்படத்தை இயக்கியுள்ளார். நாகார்ஜுனாவுடன் தபு மற்றும் அசோக் செல்வன் உள்ளிட்ட திறமையான நட்சத்திரங்கள் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நடிகர் அசோக் செல்வனின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தில் அவர் ஏற்றுள்ள ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இதுவரை பார்த்திராத முற்றிலும் மாறுபட்ட, மிரட்டலான தோற்றத்தில் அசோக் செல்வன் இதில் காட்சியளிக்கிறார்.
மெரூன் நிறச் சட்டை, நீண்ட தலைமுடி, அடர்த்தியான தாடியுடன் நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் அவரது கையில் சிகரெட்டும், அருகில் அலட்சியமாக வைக்கப்பட்டிருக்கும் காக்கி நிறக் காவல்துறை சீருடையும் இடம்பெற்றுள்ளன. மேலும், முன்புறத்தில் சதுரங்கப் பலகையும், அதில் ‘கிங்’ (King) காயும் இடம்பெற்றிருப்பது கதையின் மீதான மர்மத்தையும் சுவாரசியத்தையும் கூட்டியுள்ளது. இருண்ட பின்னணியும் புகை மூட்டமான சூழலும் இவரது கதாபாத்திரத்தின் தீவிரத்தை வெளிப்படுத்துகின்றன.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நவீன் நூலி படத்தொகுப்பையும், N. சதீஷ்குமார் தயாரிப்பு வடிவமைப்பையும் கவனித்துள்ளனர். விறுவிறுப்பான புரமோஷன் பணிகளுடன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கிங் 100’ திரைப்படம், வரும் டிசம்பர் 24-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.