கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘செங்குலம்’!
Gautham Ram Karthik’s Next Titled ‘Sengulam’; Intense Title Poster & Glimpse Video Out Now!
கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘செங்குலம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் டைட்டில் போஸ்டரில், கரிசல் மண் புழுதியில் ரத்தம் தோய்ந்த வேல்கம்பு மற்றும் சிவப்பு நிறத் துணிகள் என மிரட்டலான தோற்றம் இடம்பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவில், கரிசல் காட்டு மண்ணில் வைக்கப்பட்டிருக்கும் சிவப்பு நிற வளையலை, வேகமாகப் பாய்ந்து வரும் ரத்தம் தோய்ந்த வேல்கம்பு உடைத்துச் சிதறடிப்பதும், அந்தச் சிதறல்களுக்கு மத்தியில் ‘செங்குலம்’ என்ற தலைப்பு வெடித்துத் தோன்றுவதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இப்படத்திற்கு கிஃப்ட்சன் ராபர்ட் ஒளிப்பதிவு செய்ய, R. மோகன் மற்றும் வைர பாலன் கலை இயக்கத்தையும், தமிழ் அரசன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். மகேஷ் மேத்யூ சண்டைப் பயிற்சி இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
கோவில்பட்டியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகும் ‘செங்குலம்’ திரைப்படம், வரும் 2027-ம் ஆண்டு திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.