கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான ஒரே தமிழ்ப் படம்: வரலாறு படைத்த ‘கூடு’!
Tamil Film 'Koodu' Selected as the Only Tamil Entry in Gala Premiere Section at 57th IFFI Goa!
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘கூடு’ (KOODU) தமிழ்த் திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) மதிப்புமிக்க ‘காலா பிரீமியர் ஃபீச்சர் ஃபிலிம்’ பிரிவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒட்டுமொத்தத் தமிழ்த் திரையுலகிற்கும் பெருமை சேர்த்துள்ளது. பனோரமா ஸ்டுடியோஸ், ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் மற்றும் கல்ட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம், இந்த ஆண்டு இப்பிரிவில் இடம்பிடித்திருக்கும் ஒரே தமிழ்த் திரைப்படம் என்பது கூடுதல் சிறப்பாகும். அறிமுக இயக்குநர் ஜோயல் விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் VJ கதிரவன், ஜெயப்பிரகாஷ், விவேக் பிரசன்னா, தேவிகா சதீஷ், ரச்சிதா மகாலட்சுமி உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் கிராமியக் கலாச்சாரப் பின்னணியில் அமைந்துள்ள இக்கதை, ஒரு கிராமத்திலுள்ள மின்மாற்றிக்குள் (Transformer) அரிய வகைப் பறவைகள் கூடு கட்டும்போது, அந்த ஊர் மக்கள் எடுக்கும் அசாதாரணமான முடிவையும், அதன் தொடர்ச்சியாக நடக்கும் உணர்வுப்பூர்வமான நிகழ்வுகளையும் மிக அழகாகப் பதிவு செய்துள்ளது. தனிநபர் நாயகர்களைக் கொண்டாடும் சினிமாக்களுக்கு மத்தியில், சாதாரண மனிதர்களின் கூட்டு வீரத்தையும், இயற்கையின் மீதான பரிவுணர்வையும், ஒரு பொதுவான நோக்கத்திற்காகச் சமூகம் ஒன்றிணைவதன் வலிமையையும் நகைச்சுவையும் நேர்மையும் கலந்து இப்படம் பேசுகிறது. மனோஜ் கிருஷ்ணாவின் ஆழமான இசையும் பின்னணியும் கதையின் உணர்வுகளுக்கு மேலும் உயிரூட்டியுள்ள நிலையில், உள்ளூர் மண்ணின் மணம் மாறாத இந்த மனிதநேயக் கதை சர்வதேச அரங்கில் பாராட்டுகளைக் குவிக்கத் தயாராகியுள்ளது.