சங்கத்தலைவன் – விமர்சனம்

சித்தார்த், அஷ்ரிதா ஷெட்டி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘உதயம் என்.எச் 4’. இந்தப் படத்தின் இயக்குனர் மணிமாறனின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘சங்கத்தலைவன்’.

இந்தப்படத்தை ‘உதய் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் உதயகுமார் – கீதா உதயகுமார் தயாரித்துள்ளனர். இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய ‘கிராஸ் ரூட்ஸ் ஃபிலிம் கம்பெனி’ சார்பில் வெளியிட்டுள்ளார்.

இரா. பாரதிநாதன் எழுதியுள்ள ‘தறியுடன்’  நாவலை  ‘சங்கத்தலைவன்’ தலைப்பில் திரைவடிவமாக்கியிருக்கிறார்கள். இதில் சமுத்திரக்கனி, கருணாஸ் இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்

சங்கத்தலைவன் படத்தில் விளம்பர போஸ்டர்களில் சமுத்திரக்கனி, கருணாஸ் பின்னணியில் கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் ஆகியோரது படங்களையும் பயன்படுத்தியுள்ளனர்.

இதனை பார்க்கும்போது, மார்க்சிய-லெனினிஸம் சார்ந்த கருத்துக்கள் கொண்ட படமாக சங்கத்தலைவன் இருக்குமா, அல்லது அந்த கருத்துக்களை தவறாக சித்தரிக்கும் படமாக இருக்குமா? பார்க்கலாம்.

மார்க்சிய-லெனினிஸம் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட சமுத்திரக்கனி சட்ட நுனுக்கங்கள் நன்கு அறிந்த புரட்சியாளர். அவர் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான கூலி, உரிமைகளை போராடி பெற்றுத் தருகிறார்.

பாதுகாப்பு நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, சட்டத்துக்கு புறம்பாக நெசவு ஆலை நடத்திவரும், மாரிமுத்துவின் ஆலையில் நடக்கும் விபத்து ஒன்றில், பெண் ஒருவர்  தன்னுடைய கையை இழக்கிறார்.

அந்த ஆலையை மேற்பார்வை செய்துவரும் கருணாஸ், அந்த பெண்ணிற்கான இழப்பீட்டு தொகையை விசைத்தறி தொழிலாளர்களின் சங்கத்தலைவர், சமுத்திரக்கனியின்  உதவியுடன் பெற்றுத்தருகிறார்.

இதனால் முதலாளி மாரிமுத்து கடும்கோபத்திற்கு ஆளாகிறார். மேலும் தனது அண்ணன் மகளை கருணாஸ் காதலிப்பதால் அவரை கொலை செய்ய முடிவு செய்கிறார்.

மாரிமுத்து நினைத்தது நடந்ததா, இல்லையா?  என்பதை அழகாக சொல்லியிருக்கும் திரைக்கதையில், சொதப்பலான க்ளைமாக்ஸூடன் முடித்துள்ளனர்!

படத்தில் நடித்த நடிகர், நடிகைகளின் நடிப்பு திரைக்கதை நகர்வுக்கு பலம் சேர்த்துள்ளது, சிறப்பு. பெண் கதாபாத்திரங்கள், சாதாரண உழைப்பாளர் குடும்பங்களில் பிறந்த பெண்களை கண்முன்னே நிறுத்துகின்றது.

கருணாஸின் காதலியாக, ஆணாதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் அப்பாவி பெண்ணாக சுனுலட்சுமி மனதை கவருகிறார்.

மிகச்சரியாக கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார், சமுத்திரக்கனி.

நல்ல படங்களை கொடுத்த இயக்குனர் மாரிமுத்து. (நல்ல இயக்குனராக கொண்டாட படவேண்டியவர்) மில் ஓனராக தன்னுடைய  அலட்டிக்கொள்ளாத நடிப்பால் அசத்தியிருக்கிறார். சூப்பர்!

சங்கத்தலைவன் படத்தின் கதாநாயகன், கதைநாயகன் கருணாஸ். ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியிருக்கிறார். முற்றிலும் மாறுபட்ட நடிப்பால் மனம் நிறைகிறார். அப்பாவித்தனமான அவரது வீரமும், நெகிழ்ச்சியும் கொண்ட கதாபாத்திரப் படைப்பு அருமை.

சங்கத்தலைவன் வலிந்து திணிக்கப்பட்ட ‘க்ளைமாக்ஸ்’ காட்சியால்  ‘அம்பேல்’ ஆகிறது.

இனியும் மார்க்சிய-லெனினிஸம் கருத்துக்களால் பிரயோஜனம் இல்லை. பழிக்குப்பழி கொலைக்கு கொலை என்பதை முன்னுறுத்துகிறார்கள்