‘சிங்க் சவுண்ட்’ மேஜிக்… ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் நெகிழ்ச்சிப் பேச்சு!

தமிழ்த்திரையுலகில் முற்றிலும் புதியதொரு காதல் கோணத்தில், மனதை வருடும் இன்டென்ஸ் ரொமண்டிக் டிராமா (Intense Romantic Drama) பாணியில் உருவாகியுள்ள திரைப்படம் “ஏன் என்னை ஏதோ செய்தாய்”. அந்தோணிஸ் அட்லியர் நிறுவனம் சார்பில் டி. அந்தோணி தந்து சொந்த கதை, திரைக்கதையில், அவரே இயக்கி, தயாரித்து, கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்துள்ள இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

திரைப்படம் வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் தற்பொழுது பத்திரிகை மற்றும் ஊடகத்தினரை நேரில் சந்தித்து, இப்படத்தின் தனித்துவமான கதைக்களம் மற்றும் தொழில்நுட்பப் பின்னணிகள் குறித்துப் பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இத்திரைப்படம் காதல், தனிமை மற்றும் மனித வாழ்க்கையின் வலிகளை மையமாகக் கொண்டு மிகவும் எதார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ளது. தந்து தாயை இழந்து சிறு வயது முதற்கொண்டே உலகத்தில் எவ்வித ஆதரவுமின்றித் தனிமையில் வளரும் ஓர் ஏழை இளைஞன், தந்து தனிமையின் விரக்தி காரணமாக ஒருகட்டத்தில் மது பழக்கத்திற்கு முற்றிலும் அடிமையாகிறான்.

தந்து இருண்ட வாழ்க்கைக்குள் சிக்கித் தவித்து வரும் அந்த இளைஞனின் வாழ்வில், எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் காதல் நுழைகிறது. அவனது இதயத்திற்குள் நுழைந்த அந்த உன்னதமான காதல், அவனுக்குள் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதும், அந்தப் பெண்ணின் உண்மையான அன்பு அவனை அந்த இருண்ட பாதையிலிருந்து மீட்டு, வெளிச்சத்தை நோக்கி எவ்வாறு நேர்த்தியாக அழைத்துச் செல்கிறது என்பதுமே இப்படத்தின் அசல் மையக்கருவாக அமைந்துள்ளது.

இந்கழ்வில் இயக்குநரும், தயாரிப்பாளரும், படத்தின் நாயகனுமான டி. அந்தோணி தனது நெகிழ்ச்சியான திரைப்பயணம் குறித்துப் பின்வருமாறு பகிர்ந்து கொண்டார்:

“இத்திரைப்படத்திற்கான சரியான தலைப்பைத் தேடி நீண்ட நாட்களாக நாங்கள் அலைந்து கொண்டிருந்தோம். அந்தச் சமயத்தில்தான், பிரபல பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா சார், ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ என்ற இந்தக் கவித்துவமான தலைப்பைப் பரிந்துரைத்தார். அவர் சொன்ன அந்த முதல் வரியிலேயே ஒரு மேஜிக் நிகழ்ந்தது. தற்பொழுது டீசரப் பார்த்த பலரும் தலைப்பு மிகவும் கவித்துவமாக இருப்பதாகப் பாராட்டி வருகின்றனர்.

நான் சென்னைக்கு வந்த ஆரம்பக் காலத்தில், பிரபல தயாரிப்பாளர் சி.வி. குமார் சார் மூலமாக எனக்கு ஹரிஷ் மற்றும் சந்தோஷ் ஆகியோரின் நட்பு கிடைத்தது. அவர்கள் இருவரும் இப்படத்தின் தயாரிப்புப் பணிகளில் எனக்கு மிகப்பெரிய பக்கபலமாகச் செயல்பட்டனர். என்னுடைய இணை இயக்குநர் ஜேனட் ஆரம்பம் முதல் இன்று வரை எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்து, படத்தொகுப்பிலும் (Editing) என்னுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

குறிப்பாக, தேசிய விருது பெற்ற பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் சார் திரைக்குப் பின்னால் செய்த உன்னதமான உதவியை என்னால் என் வாழ்நாளில் மறக்க முடியாது. விநியோகம் தொடர்பாக எங்களுக்குள் இருந்த சில இக்கட்டான பிரச்சனைகளை அவரே முன்னின்று தீர்த்து வைத்தார். அவரது உதவி இல்லையென்றால் இன்று இந்த நிகழ்வே சாத்தியமாகி இருக்காது. இன்று அத்தனை தடைகளையும் தாண்டி, ஒட்டுமொத்தப் படக்குழுவின் உழைப்பால் இத்திரைப்படத்தை வெளிச்சத்திற்கு ஏற்றி வைத்திருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது.”

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட  தயாரிப்பாளர் தனஞ்செயன், பின்வருமாறு பேசினார்:

“தம்பி அந்தோணியின் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்படம் மிகவும் குறுகிய காலத்தில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாகியிருந்தாலும், ஒரு அழகான, அக்மார்க் கவித்துவமான காதல் காவியமாகத் திரையில் மிளிர்ந்திருக்கிறது. குறிப்பாக, தற்காலத் தமிழ் சினிமாவில் மிகக் கடினமானதாகக் கருதப்படும் டப்பிங் (Dubbing) ஏதுமில்லாத ‘சிங்க் சவுண்ட்’ (Sync Sound/Live Sound) முறையில் ஒலியைப் பதிவு செய்து இவ்வளவு நேர்த்தியாகப் படத்தை உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.

இப்படத்தின் நாயகி மதுமிதா தாஸ், தமக்கு முற்றிலும் புதிய மொழி மற்றும் புதிய நகரம் என்ற எவ்விதத் தயக்கமுமின்றி, இப்படத்திற்காகத் தொடர்ந்து 18 நாட்கள் மிகக் கடுமையான நடிப்புப் பயிற்சிப் பட்டறையில் (Workshop) கலந்துகொண்டு தந்து அசாத்திய அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்பொழுது திரையுலகில் நிலவி வரும் அசாதாரண சூழல்களின் காரணமாக, செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் வெளியீடுகள் தொடர்பாகத் தயாரிப்பாளர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து தயாரிப்பாளர்களுடனும் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. திரையுலகத் தொழில்துறையையும், அதனை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் எவ்விதத்திலும் பாதிக்காத வகையில், அனைத்துத் தரப்பினரும் சுமுகமாகத் கலந்தாலோசித்து ஒரு நல்ல முடிவை எடுக்குமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் விரைவில் அத்தனை தரப்பினருக்கும் சாதகமான ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.”